
மகாசிவராத்திரி முடிந்துவிட்டால் அதிலிருந்து வெப்பம் தகிக்க ஆரம்பித்துவிடும். கடும் வெப்பத்தை சமாளிக்க சில விஷயங்களில் அக்கறை காட்டினால் போதும். எளிமையாக சமாளித்து விடலாம். அதற்கான குறிப்புகள் இதோ:
மாலை வேலைகளில் வாசலின் இரண்டு பக்கமும் நன்றாக தண்ணீர் தெளித்து விடலாம். இதனால் வெப்பம் குறையும். மாலையில் காற்று வீசும்போது குளிர்ச்சியான காற்று வீட்டிற்குள் வரும்.
டேபிள் மின்விசிறிகளின் அடியில் பெரிய தாம்பாளத்தில் தண்ணீர் வைத்து ஓடவிடலாம் நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.
பனையோலை, தென்னை ஓலை, ஈச்ச ஓலை, தாழம்பூ போன்றவற்றால் செய்த விசிரிகளையும் பயன் படுத்தலாம். மேலும் அதனால் செய்த பாய்களிலும் படுத்து உறங்கலாம். இதனால் உடம்புக்கு குளிர்ச்சி கிடைப்பது உடன் பல்வேறு நோய்கள் அகலவும் வழி வகுக்கும்.
மேலும் இவைகளை புதிதாக வாங்கி வைத்திருப்பது நல்லது. பழையது வீட்டில் பரணில் கிடந்தால் அதை தூசி தட்டி சுத்தமாக்கி எடுத்து வைத்துக்கொண்டால் பவர் கட்டாகும் சமயங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் மாலை நேரங்களில் வீட்டு தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சினால், வீட்டைச் சுற்றிலும் நீர் இருப்பதால் நல்ல குளிர்ச்சி கிடைக்கும். இரவு உணவு முடித்த பின்பு சிறிது நேரம் அங்கு நடை பயின்றால் தூக்கம் கண்களைத் தழுவும்.
உண்ணும் உணவுகளில் கம்பு, கேழ்வரகு கூழ் வகைகள், நீர் மோர் அருந்துவது அவ்வப்பொழுது மோர் சாதம், பழைய சாதத்தில் மோர் விட்டு பிசைந்து சாப்பிடுவது, கஞ்சி வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வது போன்றவற்றை பயன்படுத்தினால் உடல் உள் உறுப்புகள் குளிர்ச்சி அடையும். இதனால் அளவுக்கு அதிகமாக வியர்ப்பது குறையும். அதுபோல் பழவகைகள், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளை அதிகமாக சேர்த்துக்கொண்டால் உடம்பு நல்ல நீர் ஏற்றத்துடன் இருக்கும் நீர் சுருக்கு வராது.
மண்பானைகளில் பழையது வைப்பது, நீர் அருந்துவது, கூழ் வகைகள் செய்வது போன்றவற்றிற்கு பயன்படுத்தினால் நல்ல குளிர்ச்சி கிடைக்கும். முக்கியமாக தயிர் துவைத்து சாப்பிட்டு பாருங்கள். நல்ல கெட்டியான தயிரும், வாசனையுடன் கூடிய தயிரும் கிடைக்கும். மோரைக் கடைந்து அதில் வைத்து ருசிக்கலாம்.
அதேபோல் வறுப்பது, பொரித்து சாப்பிடுவது போன்ற உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளாமல், கூட்டு, அவியல் குருமா, குழம்பு வகைகள், போன்றவற்றை செய்து சாப்பிட்டால் உடம்பு நீர் ஏற்றத்துடன் இருக்கும். அடிக்கடி தாகம் எடுக்காது. உடம்பில் சுருக்கம் ஏற்படாது. ஒரு மினுமினுப்பு இருப்பதை காணலாம். அதுபோல் உப்பை குறைத்து சாப்பிட்டாலும் அதிகம் வியர்க்காது.
கோடைக்கென்று சில பருத்தி ஆடைகளை வாங்கி வைத்திருப்போம். அவற்றை எடுத்து உடுத்துக் கொள்வது நல்லது. போர்வை, தலையணை, உறை, பெட்ஷீட் அனைத்தும் பருத்திகளில் இருப்பது நல்லது.
மின்சாதன புழக்கம் குறைத்து, இயற்கையான காற்று, இயற்கையான உணவு, இயற்கையான உடை என்று எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையாக இருக்க முடியுமோ, அவ்வளவு நம்மை சுறுசுறுப்பாகவும், அதிகம் வெப்பம் தாக்காமலும்
கசகச வென்று வியர்க்காமலும் இருக்கலாம். அவ்வப்பொழுது சிறிது வெந்நீர் அருந்தினால் தாகம் குறையும்.
இதுபோல் எளிமையான சில குறிப்புகளை பயன்படுத்தி கோடையை சமாளிப்போம்!