
பண்டைய காலத்தில் பாண்டிய மன்னனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லையா?" எனக் கேட்டான். இப்போதைய கேள்வி, "மனிதரில் ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்துவமான உடல் வாசனை உண்டா? இல்லையா?" என்பது. இதற்கான விடை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்கள் உடலிலிருந்து தொடர்ந்து நறுமணம் வீச நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
உங்கள் உடலிலிருந்து எப்பொழுதும் ஒருவித நறுமணம் கமழ, அதற்காக ப்ரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொருட்களை வாங்கி உபயோகிப்பதுடன், ஒரு முறையான பழக்கத்தையும் உண்டு பண்ணி அதை தினசரி பின்பற்றி வரும்போது உங்கள் உடல் நாள் முழுவதும் சுகந்தமான நறுமணம் பெற்றுத் திகழ்வதுடன் உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்யும்.
நீங்கள் அலுவலகம் சென்று உங்கள் அறைக்குள் நுழையும்போது பல ஜோடிக் கண்கள் உங்களைத் திரும்பிப் பார்க்கும். அதன் காரணம் டிப்-டாப்பான உங்கள் உடை அல்ல. உங்களிடமிருந்து வரும் நறுமணம். இதற்கு நீங்க பின்பற்ற வேண்டிய தினசரிப் பழக்கம் என்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
முதலில் நறுமணம் கலந்த சோப் உபயோகித்து குளியல் போடவும். இதனால் உடலிலுள்ள அழுக்கு, வியர்வை நாற்றம், துர்நாற்றம் உண்டு பண்ணும் பாக்டீரியா ஆகியவை நீங்கும். பாதம், இடுப்பு மற்றும் அக்குள் போன்ற இடங்களை அதிக கவனத்துடன் சுத்தம் செய்யவும். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் துர்நாற்றத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே முறைப்படி இறந்த செல்களை உரித்தெடுத்து, சருமத்தை புத்துயிர்ப்புடன் வைக்கவும்.
பிறகு உங்கள் பர்ஃப்யூம் வாசனையுடன் ஒத்துப்போகக் கூடிய நறுமணம் கலந்த லோஷன் அல்லது பாடி க்ரீமை உடலில் தடவுங்க. அதன் பின் மணிக்கட்டு போன்ற நாடித் துடிப்புள்ள இடங்கள், கழுத்து, காதுகளின் பின்புறம் ஆகிய இடங்களில் பர்ஃப்யூமை தெளித்து விடவும். இப்படிப்பட்ட வெது வெதுப்பான இடங்களில் பர்ஃப்யூம் தெளிக்கையில் அதன் மணம் கொஞ்சம் தூக்கலாக வெளிப்படும். தெளித்து விட்ட பர்ஃப்யூமை இயற்கை முறையில் உலர விடுங்கள். கைகளால் துடைக்க வேண்டாம்.
உடலை துர்நாற்றமின்றி புத்துணர்வுடன் வைக்க டியோடோரன்ட் நன்கு உதவி புரியும். வாசனைகளை சமநிலைப்படுத்தி வைக்கவும், வியர்வைத் துவாரங்கள் அடைபடாமல் பாதுகாக்கவும் உதவக்கூடிய தரமான டியோடோரன்டை தேர்ந்தெடுத்து உபயோகிப்பது நலம்.
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் ஹைப்போ-அலர்ஜெனிக் அல்லது இயற்கை முறையில் தயாரிக்கப்படும் டியோடோரன்ட் உபயோகிக்கலாம்.
நீங்கள் அணியும் ஆடை எப்போதும், துணி மென்மை யூட்டி (fabric softener) சேர்த்து, நறுமணம் கலந்த டிடெர்ஜென்ட்களால் சலவை செய்யப்பட்டு, புது மெருகுடன் தோற்றமளிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரிகளில் உலர்ந்த லேவெண்டர் மற்றும் மணமுள்ள மூலிகை இலைகளைத் தூவி வைக்கலாம். உலர்ந்த, மணம் நிறைந்த பூக்களின் இதழ்களால் நிரப்பப்பட்ட பாக்கெட்களையும் போட்டு வைக்கலாம். இது, நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளிலிருந்தும் நறுமணம் வீச உதவி புரியும்.
மேற்கூறிய வழிமுறைகளை, அதாவது சுத்தமான உடல், மணம் நிறைந்த கிரீம் போன்ற வர்த்தகப் பொருட்கள், துர்நாற்றம் நீக்கும் டியோடோரன்ட், சுத்தமுடன் நறுமணமும் ஊட்டப்பட்ட ஆடைகள் என வாசனை குறையாமல் உடலைப் பாதுகாக்க உதவும் வழிகளை, அதன் அடுக்கு முறை தவறாமல் பின்பற்றி நீங்களும் மணமுள்ள மனிதராக வலம் வரலாமே!