

ஆரோக்கியமான சத்துமாவு என்பது பல தானியங்கள், பருப்பு வகைகள், தினை வகைகள் மற்றும் பருப்புகள் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த கலவையாகும். இது செரிமானத்தை மேம்படுத்துவதுடன் உடலுக்கு ஆற்றலை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். இதனை கேழ்வரகு, கம்பு, கோதுமை, பயறு போன்ற சிறுதானியங்கள் சேர்த்தும் செய்யலாம். பாதாம், முந்திரி, அக்ரூட் போன்ற நட்ஸ் வகைகளை பயன்படுத்தியும் ஆரோக்கியமான மாவை தயாரிக்கலாம்.
கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் மாவு விலையும் அதிகம், தரமும் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே இதனை வீட்டில் செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் சமயம் சூடான பாலில் கலந்து பருகலாம் அல்லது நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து சிறிது சூடான பால் தெளித்து உருண்டைகளாக பிடித்து சத்துருண்டைகளாகவும் உண்ணலாம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எடுத்துக் கொள்ள ஏற்ற உணவு இது.
ஆரோக்கியமான ஹெல்த் மிக்ஸ் பவுடர்:
பாதாம் 1 கப்
முந்திரி 1 கப்
வால்நட் 1 கப்
மக்கானா 3 கப்
வெள்ளை எள் 1 கப்
வேர்க்கடலை 1 கப்
கொள்ளு 1/2 கப்
பம்கின் (அ) சன் ஃபிளவர் சீட் 1 கப்
ஏலக்காய் 4 (விருப்பப்பட்டால்)
சர்க்கரை (அ) நாட்டு சர்க்கரை 2 கப்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொன்றையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு வறுக்க பொருட்கள் தீயாமல் பதமாக வறுபடும். வறுத்த பொருட்களை நன்கு ஆறவிட்டு ஒன்றாக சேர்த்து அத்துடன் நாட்டுச்சக்கரை சேர்த்து மிக்ஸியில் நைசாக பொடித்து எடுக்கவும். இவற்றை ரொம்ப நேரம் மிக்ஸியில் பொடித்தால் அதிலுள்ள எண்ணெய்கள் வெளிவந்து பவுடர் போல் இல்லாமல் சேர்ந்து குழைந்து கெட்டியாகி விடும். எனவே ரொம்ப நேரம் பொடிக்காமல் (மிக்ஸி சூட்டில் கெட்டியாகாமல் இருக்க) எடுக்கவும்.
அரைத்த மாவை காற்று புகாத ஏர்டைட் பாக்ஸில் போட்டு பிரிட்ஜில் வைத்து இரண்டு மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். தேவைப்படும் சமயத்தில் ஒரு கப்பில் இரண்டு ஸ்பூன் சத்துமாவை சேர்த்து, ஒரு கப் சூடான பால் கலந்து தேவைப்பட்டால் சிறிது நாட்டு சர்க்கரை (அ) சர்க்கரை கலந்து பருக சத்தான ஆரோக்கியமான பானம் தயார்.
இதன் நன்மைகள்:
செரிமானத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் எடை மேலாண்மைக்கு உதவும். சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி குழந்தைகளின் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் உதவும்.