
நம்முடைய ஆடையை தேர்ந்தெடுப்பதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ, அதே மாதிரி, வீட்டுக்கான பொருள்களை தேர்ந்தெடுப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இப்போ இருக்கிற காலத்துல, 'ஹோம் ஃபேஷன்' அப்படிங்கிறது ரொம்ப பிரபலமாகி வருது. ஹோம் ஃபேஷன் என்றால், நம்ம வீட்டுக்கு ஏற்ற ஸ்டைலான பொருட்களை வாங்கி வைத்து, அந்த வீட்டுக்கு மேலும் அழகையும், தனித்துவத்தையும் கொடுப்பது.
ஒளியால் வீட்டு அழகு உயரும்
வீடுகளில் ஒளி இருந்தால் தான் அந்த வீட்டினுடைய தோற்றம் அழகாக இருக்கும். அதனால் வீட்டிற்கு தேர்ந்தெடுக்கப்படும் விளக்குகள் அழகானதாகவும், புதிய வடிவமைப்பில் இருக்கக் கூடியதாகவும் வாங்க வேண்டும். அதற்கு ஏற்ற இடத்தில் அதனை பொருத்தினால் அது இன்னும் அழகாக தோன்றும்.
மர அலமாரியும், செடிகளும் சேர்க்கும் அழகு
மர சுவர் அலமாரிகள் இப்போது நிறைய வடிவங்களில் உண்டு. சிலவற்றை அறையின் மூலையில் வைக்கலாம். இந்த வகையான சிறு அலமாரிகளை வீட்டின் ஹாலில், டிவியின் இடது புறமும், வலது புறமும் வைப்பார்கள். அதில் சிறிய பொம்மைகளை வைத்து, வீட்டின் ஹாலுக்கு அழகு சேர்க்கலாம்.
சிறு செடிகளை வீட்டில் வளர்ப்பது, உங்கள் வீட்டிற்கான தனித்துவத்தை உருவாக்கும். நாகப்பாம்பு செடி, ZZ செடி, போதோஸ், ஸ்பைடர் பிளாண்ட் உள்ளிட்ட சில செடி வகைகளை வீட்டின் உள்புறத்தில் வளர்க்கலாம். இது வீட்டிற்கு அமைதியான சூழ்நிலையையும், தனித்தன்மையையும் வழங்குகிறது.
சுவரில் கலை படங்கள் மற்றும் 3D ஓவியங்கள்
வீடுகள் மேலும் அழகாக தெரிய, கலைகள் (Art) நிறைந்த படங்கள் அல்லது சிலைகளை வைக்கலாம். அது உங்கள் வீட்டிற்கு மேலும் அழகு சேர்க்கும். இயற்கையான சூழல்கள் அல்லது உங்கள் குடும்பப் படங்களை சுவர்களில் மாட்டுவதன் மூலம் உங்கள் வீடு மிகவும் அழகாக தோன்றும். மேலும் சிலர் சுவர்களில் 3D-யில் படங்களை வரைந்து வைக்கிறார்கள். இது ஒரு ராயல் லுக் தருகிறது.
சுவர் வண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்வு
ஒரு வீட்டிற்கு அழகூட்ட எப்படி பொருட்கள் அவசியமோ, அதேபோல் ஒரு வீட்டுக்கு சுவரின் வண்ணங்கள் மிகவும் முக்கியம். அவற்றை தேர்வு செய்வதில் நிதானம் தேவை. வண்ணங்கள் மென்மையான நிறங்களில் இருந்தால், அமைதியான சூழ்நிலை தரும். இருண்ட வண்ணங்களாக இருந்தால், வலிமை உணர்ச்சியை தரும்.
உணவறையின் அழகு மற்றும் செயல்திறன்
உணவறை என்பது ஒரு வீட்டில் மிகவும் முக்கியமான இடம். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு பழக்கத்தை மேம்படுத்தும் இடம் . மேசைகள், நாற்காலிகள் மற்றும் மேசை துணிகள் முக்கியமானவை. இப்போது பல வகையான மேசைகள் உருவாக்கப்படுகின்றன. இவை இடத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் செலவைக் குறைக்கும் விதத்திலும் இருக்கின்றன.
அறை பிரிப்பான் மற்றும் ஷூ ராக் ஐடியா
சுவர் அறை பிரிப்பான் (Wall Room Divider) என்பது ஒரு சிறிய ஃபிரேம் போல தோன்றும். சில நேரங்களில் அது செடிகள், புத்தகங்கள் வைக்கக்கூடிய அலமாரி மாதிரியும் இருக்கும். இது ஒரு பெரிய அறையை இரண்டு பிரிவுகளாக பிரிக்க பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல், சில வீடுகளில் ஷூ ராக் ஆர்டர் செய்து வீட்டின் முன்பக்கத்தில் வைக்கிறார்கள். அதில் காலணிகளை வைப்பதால் வீடு சுத்தமாகவும், அழகாகவும் தெரிகிறது.
புதிய பொருட்கள் சேர்த்து வீட்டு டிசைன் அப்டேட்
இப்போது வீடுகளை மேலும் அழகாக்க, பல புதிய பொருட்களை சேர்க்கிறார்கள். துணி வைக்கும் கூடை, சிறிய செடிகள், செல்லப்பிராணி பொம்மைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் போன்றவை வீட்டு அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவை வீடுக்கு ஒரு புதுமையும், அழகையும் சேர்க்கிறது.
இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்கள் கூட வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன.