விருந்தோம்பல்!

விருந்தோம்பல்!
Published on

ருசமயம் மகாத்மா காந்தியின் ஆசிரமத்துக்கு விருந்தாளியாக வந்திருந்தார் முகமது அலி ஜின்னா. "என்ன சாப்பிடுகிறீர்கள்" என்று ஆசிரமப் பணியாளர் ஒருவர் கேட்க, பழக்க தோஷத்தில் முகமது அலி ஜின்னா சிக்கன் பிரியாணி கேட்டார்.

அதைக் கேட்டதும் ஆசிரமப் பணியாட்கள் வெலவெலத்துப் போய்விட்டார்கள். காரணம், அசைவம் வெறுக்கும் மகாத்மாவின் ஆசிரமத்தில் அசைவத்துக்கு எப்படி அனுமதிக்க முடியும் என்று தயங்கிக்கொண்டே மகாத்மா காந்தியிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.

அதற்கு மகாத்மா, "அவர் இப்போது நம் விருந்தாளி. அவருக்குப் பிடித்ததை வாங்கிக் கொடுக்க வேண்டும். நமக்குப் பிடித்ததை அவரிடம் திணிக்கக் கூடாது" என்று கூறி, சிக்கன் பிரியாணி வரவழைத்துக் கொடுத்தாராம்.

அதுபோல்தான் நாமும் நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களின் விருப்பத்தை கேட்டறிந்து உணவு படைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களும் நன்கு சாப்பிடுவார்கள். நமக்கும் நன்கு சமைத்து பரிமாறிய திருப்தி கிடைக்கும். அதை விடுத்து நமக்குப் பிடித்ததை சமைத்து வைத்துக்கொண்டு அவர்களை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினால், அவர்கள் வேண்டா வெறுப்பாக சாப்பிடலாம். அல்லது பிடிக்காமல் உணவுப் பொருட்களை வீணடிக்கலாம். இதனால் உணவு பொருட்கள் குப்பைத் தொட்டிக்குத்தான் போகும். இதனால் ஈ, கொசுக்கள் பரவும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம். இத்தனையும் ஒரு விருந்தோம்பலில் அடங்கி இருக்கிறது.

ஒரு சமயம் என் தோழியின் வீட்டிற்கு அவர்களின் விருந்தினர் குழந்தை வந்திருந்தது. அதுவோ, தனக்கு மதிய சாப்பாட்டிற்கு நூடுல்ஸ்தான் வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. என் தோழியோ சமைத்து வைத்திருந்த அத்தனை பதார்த்தங்களையும் காண்பித்து, ‘இதில் உனக்கு எது பிடித்திருக்கிறதோ அதை சாப்பிடு. நூடுல்ஸ் உடம்புக்கு நல்லது இல்லை’ என்று கூறினார். பொதுவாக, ‘குழந்தைகள் உலகமே தலைகீழாக நின்றாலும் யாருக்கும் அடிபணிந்து போவதில்லை’ என்ற தத்துவத்தின்படி, குழந்தை மீண்டும் எனக்கு நூடுல்ஸ்தான் வேண்டும் என்று அடம் பிடித்தது.

பிறகு, வேறு வழியின்றி என் தோழி அந்தக் குழந்தைக்கு அதன் விருப்பப்படி நூடுல்ஸ் செய்து பரிமாறினார். அது எதையும் மீதம் வைக்காமல் விருப்பமுடன் சாப்பிட்டு முடித்து, ‘நன்றி அத்தை’ என்று கூறியது. இதனால் இருவருக்கும் திருப்தி கிடைத்தது. ஆதலால், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதை கேட்டறிந்து சமைத்து, வருவிருந்து காத்து நல் விருந்து ஓம்புவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com