வீடு கட்டினால் மட்டுமே போதுமா? பராமரிக்க வேண்டாமா?

 House Maintenance
House Maintenance
Published on

'வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார்' என்று ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் இரண்டுமே பொருள் மற்றும் உடலுழைப்பு சார்ந்த விஷயம் என்பதால். அந்த காலத்தில் மேஸ்திரி, கொத்தனார் என்று இருப்பார்கள். அவர்களை வைத்து தாங்களே முன் நின்று செங்கல், மண் போன்றவற்றை சுமந்து பார்த்துப் பார்த்து தங்களுக்கான வீடு கட்டியவர்கள் உண்டு. இன்னும் கூட 70 அல்லது 100 வருட கட்டிடங்கள் அந்த கட்டிடங்களை கட்டியவர்களின் உழைப்பிற்குச் சான்றாக உள்ளது.

ஆனால் அந்த காலம் போல் இந்த காலத்தில் தரமான உறுதி தரும் எந்த பொருளும் கிடைப்பதில்லை என்ற ஒரு கருத்து உண்டு. அதில் சிமெண்ட், செங்கல், மரம் ,கம்பி போன்ற கட்டுமானப் பொருட்களும் அடங்கும். அதற்குச் சான்றாக கட்டிய பாலங்கள் சில நாட்களிலேயே இடிந்து விழுவதை காண்கிறோம். அதேபோல் பிளாட்டுகளும் வாங்கி 10 வருடங்களுக்குள்ளாக பொலிவிழந்து பழைய வீடு போல் காட்சி அளிக்கும் நிலை கண்டு "நான் எவ்வளவு அரும்பாடு பட்டு பணம் சேர்த்து இஎம் ஐ கட்டி இந்த வீட்டை வாங்கினேன் இப்படி இருக்கிறதே" என்று மனம் வருந்துபவர்களும் உண்டு.
     

பல லட்சங்கள், சில கோடிகள் போட்டு வீடு கட்டுபவர்கள் அதற்குப் பின்னான அந்த கட்டிடத்தின் பராமரிப்புகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே காலத்துக்கும் அந்த வீடு நிலைத்து நிற்கும். இதோ ஒரு வீட்டில் என்னென்ன பாதிப்புகள் வரும் அதன் தீர்வு என்ன என்பதைப் பற்றி இங்கே காண்போம்.

1. சிமெண்ட் அதிகம் மற்றும் வெயில் காலம் போன்ற காரணங்களால் சுவர்களில் விரைவில் விரிசல் விழும் வாய்ப்புகள் உண்டு ஆகவே அப்படி சுவர்களில் சிறு விரிசல் என்றால் உடனே கவனித்து அதை மீண்டும் சிமெண்ட் கலவை வைத்து பூசி அடைப்பது நல்லது இல்லையெனில் விரிசல் அதிகமாகி பெரும் செலவுடன் சுவரும் அழகான தோற்றத்தை இழந்து விடும்

2. அத்துடன் சுவரில் உள்ள பைப் லைன்களை நிச்சயம் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். அதன் மூலம் சிறிய கசிவு இருக்கும் பட்சத்தில் உடனடியாக அதை அடைக்க வேண்டும். பெரியதாக கசிவு இருந்தால் அந்த பைப்பையே மாற்ற வேண்டும். இல்லை எனில் ஈரப்பதம் சுவர்களை வீணாக்கும்.

3.  வீட்டின் மேலுள்ள நீர் சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டி என்பது மிக மிக அத்தியாவசியமான நம் நலம் பேணும் வீட்டின் பகுதியாகும். சிலர் வருடக்கணக்கில் அதைக் கழுவாமல் இருப்பது உண்டு. இதன் விளைவாக பாசம் பிடித்த அந்த நீரை பயன்படுத்தும் போது பலவிதமான நலப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டும். இதைத் தவிர்க்க ஆறு மாதத்திற்கு ஒரு முறை தண்ணீர்த் தொட்டியை கழுவுவது நல்லது.

4. தண்ணீர்த் தொட்டியை சிலர் சுத்தமாக்க ஆர்வத்துடன் பவர்புல்லான ஆசிட் போன்றவற்றை பயன்படுத்தி கழுவுவது உண்டு. தயவுசெய்து அதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த ஆசிட் நீரில் கலந்து உடல் நலத்தை பாதிக்கும். தண்ணீர்த் தொட்டியில் உள்ள நீர் கசியாமல் இருக்கிறதா என அடிக்கடி செக் செய்வது வீட்டுக்குள் நீர்க்கசிவு ஊடுருவுவதைத் தடுக்கும்.

5. செப்டிக் டேங்க் மேலும் கவனம் வேண்டும். பெரும்பாலும் நாம் அதை அதிகம் கவனிக்க மாட்டோம். ஏதேனும் அடைப்பு வந்தால் மட்டும் பதறுவோம்.அதை விடுத்து வருடம் ஒரு முறை செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய வேண்டும்.

6. பாத்ரூமில் பேப்பர் நாப்கின் போன்ற அடைக்கும் பொருள்களை போடாமல் அதற்கென தனியே வெளியே குப்பைக்கூடை வைப்பது நல்லது

7. விருந்தினர் வந்தாலும் சரி அல்லது ஓய்வெடுக்க வேண்டுமானாலும் சரி அனைவரும் நாடுவது வீட்டில் பால் கனியை . அதேபோல் வீட்டில் உள்ள வேண்டாத பொருட்கள் அடைக்கலமாவதும் அந்த பால்கனியில்தான். ஆகவே அங்கு இருக்கும் துருப்பிடித்த பொருட்களை அகற்றுவதும் கைப்பிடிகளை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்வதும் அவசியம் .

8. அடுத்து மொட்டை மாடி. மொட்டை மாடியில் இப்போது அழகுக்காக பலரும் கற்களை பதிப்பதும் அல்லது அப்படியே விடுவதும் உண்டு. மழை பெய்யும் போது அந்த கற்களில் மழை நீர் தேங்கி அவை விதானத்தில் இறங்கி வீட்டுக்குள் வரும் வாய்ப்பு உண்டு . ஆகவே அப்படி நிகழாமல் தடுக்க தற்போது வாட்டர் ப்ரூப் பெயிண்டுகள் அதற்கெனவே கடைகளில் உள்ளது. அதை பயன்படுத்தி மொட்டை மாடி தரையை பாதுகாக்க வேண்டும்.

9. தற்போது நவீன மாடலில் வீடுகள் கட்டுவதால் நிச்சயம் மரத்தினாலான வடிவமைப்புகள் காணப்படும். ரேக்குகள் , அடுக்குகள் என மரவடிவமைப்புகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை பாதுகாப்பதிலும் அதிக கவனம் தேவை. காரணம் கரையான அரிப்பு வந்துவிட்டால் பெரும்பாடாக மற்றவற்றிலும் எளிதில்  பரவி பெரும் பிரச்சினை உண்டு பண்ணும் என்பதால்  கரையான் அரிப்பை பார்த்து விட்டால் உடனடியாக அதற்கு அவன் செய்து தடுக்க வேண்டும். அவ்வப்போது வார்னிஷிங் அடித்து  மரப்பொருட்களை பராமரிப்பது நல்லது .

10. தற்போது அனைத்து வீடுகளிலும் விதவிதமான டைல்ஸ்  பதிப்பது நடைமுறையில் உள்ளது. அதில் ஏதேனும் ஒரு டைல்ஸ்ல் கீறலோ, விரிசலோ விட்டிருந்தால் ஒன்று தானே என்று அலட்சியம் காட்டாமல் உடனடியாக அந்த ஒரு டைல்ஸை மாற்றி கலவை போட வேண்டியது அவசியம். இல்லையெனில் அந்த ஒரு டைல்ஸ் பாதிப்பால் மற்ற டைல்ஸ்களும்  விரைவில் பாதிக்கும் வாய்ப்பு உண்டு.

வீடு கட்டினால் மட்டும் போதாது அந்த வீட்டை அதிக கவனமுடன் பராமரித்து வந்தால் மட்டுமே நமது வீடு நமது பெருமைக்கு சான்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com