கோடை காலம் வந்துவிட்டாலே தமிழகத்தில் சுட்டெரிக்கும் சூரியனை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. குறிப்பாக சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இது போன்ற காலங்களில் நம்மை நாம் குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கும் சில வழிகள் பற்றி பார்க்கலாம்.
நீரேற்றத்துடன் இருங்கள்: கோடை காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். வியர்வை மூலம் இழந்த திரவங்களை சமன் செய்ய நாள் முழுவதும் அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும். இத்துடன் இளநீர் மோர் அல்லது பழச்சாறு போன்ற குளிர்பானங்களை அருந்துங்கள். இதிலும் சர்க்கரை அதிகம் நிறைந்த பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
குளிர்ந்த நீரில் குளியுங்கள்: குளிர்ந்த நீரில் குளிக்கும்போது வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இது உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். அல்லது உங்களால் குளிக்க முடியவில்லை என்றால், ஒரு துண்டை ஈரமாக்கி கழுத்தில் சுற்றிக் கொள்ளுங்கள்.
இயற்கையாக குளிரூட்டும் நுட்பங்களைப் பயன்படுத்தவும்: இயற்கையான குளிரூட்டும் முறை என்றால், அந்த காலத்தில் திரைச்சீலை அல்லது பெட் ஷீட்டுகளை ஈரமாக்கி ஜன்னல்களில் கட்டி தொங்க விடுவார்கள். இது பாரம்பரிய குளிரூட்டும் முறைகளில் ஒன்றாகும். அல்லது அறையின் ஈரப்பதத்தை அதிகரிக்க, ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஐஸ் போட்டு வைக்கலாம்.
புத்திசாலித்தனமாக வெளியே செல்லுங்கள்: உடற்பயிற்சி, விளையாட்டு போன்ற விஷயங்களுக்கு நீங்கள் வெளியே செல்லும் நபராக இருந்தால், அதிகாலை அல்லது மாலை நேரத்தை திட்டமிட்டு வெளியே செல்லலாம். அதிலும் கோடை காலங்களில் மிதமான செயல்களில் ஈடுபடுங்கள். வெயிலில் அதிக உழைப்பு உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தலாம்.
பொருத்தமான உடை அணியுங்கள்: காற்றோட்டத்தை அனுமதிக்கும் பருத்தி மற்றும் கைத்தறி போன்ற இலகுரக உடைகளைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள். சூரியனை பிரதிபலிக்கும் தளர்வான வெளிர் நிற ஆடைகளைத் தேர்வு செய்து பயன்படுத்தவும். அத்துடன் வெளியே செல்லும்போது கூலிங் கிளாஸ், தொப்பி போன்றவற்றைப் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.
நிழலில் இருங்கள்: நீங்கள் தினசரி பணிக்காக வெளியே செல்லும் நபராக இருந்தால், முடிந்தவரை நிழலிலேயே இருக்க முயலுங்கள். வெயில் அதிகமாக உங்கள் மீது படாமல் பார்த்துக் கொள்ளவும். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நேரடியாக சூரிய ஒளியைத் தவிர்க்கவும். வெளியே சென்றால் கட்டாயம் குடையைப் பயன்படுத்துங்கள்.
இதுபோக நீங்கள் வீட்டில்தான் இருக்கிறீர்கள் என்றால், வெயில் சமயங்களில் ஒருபோதும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். குறிப்பாக வெயில் அதிகமாக இருக்கும் மதிய நேரங்களில், வீட்டுக்குள்ளேயே இருப்பது நல்லது. எப்போதாவது வெப்பத்திலிருந்து தப்பிக்க அருகில் இருக்கும் மால்கள், நூலகங்கள் அல்லது திரையரங்குகள் போன்ற இடத்திற்கு சென்று வாருங்கள்.