
நாம் நம் வாழ்க்கையில் பலதரப்பட்ட மனிதர்களோடு பழகிக் கொண்டிருப்போம். அவர்களில் சிலர் உறவினர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்கலாம். மேலும், சிலர் சிறிது காலமே அறிமுகமானவர்களாகக் கூட இருக்கலாம். இவர்கள் அனைவரும் நம்முடன் உண்மையான அன்புடன் பழகுபவர்கள் எனக் கூறிவிட முடியாது. சிலர் சந்தர்ப்பவாதியாகக் கூட இருப்பதுண்டு. அவர்களை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. அவர்களுக்கு நம்மிடமிருந்து ஏதாவது நன்மை கிடைக்கும்போது மட்டுமே அவர்கள் நம்முடன் பழகிக் கொண்டிருப்பர். அதாவது, நம் வாழ்க்கை வெற்றிப் பாதையில் முன்னோக்கிச் சென்று கொண்டிக்கும் வரை. நாம் கஷ்ட நிலையில் இருக்கிறோம் என்று தெரிந்தால் அவர்களின் வருகை படிப்படியாகக் குறைந்துவிடும்.
2. அவர்களுக்கு நம்மை விட கொஞ்சம் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தால், அந்தப் புதியவர்களிடமிருந்து கிடைக்கும் தனிப்பட்ட லாபத்தை மனதில் நினைத்து, நம்முடன் வைத்திருந்த உண்மையான உறவை நொடியில் தூக்கிப் போடத் தயங்க மாட்டார்கள்.
3. சமுதாயத்தில் செல்வாக்குள்ள ஒரு நபருடன் அவர்களுக்குப் பழக்கம் ஏற்படும்போது, அந்த உறவை ஊர் முழுக்க பறைசாற்றிக்கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொள்வார்கள். அந்தப் புதிய உறவு ஆழமற்று, மேலோட்டமானதாக இருந்தபோதும், தன்னுடைய செல்வாக்கும் உயரும் என்ற ஆசையில் அதைப் பற்றியே அனைவரிடமும் பேசிக்கொண்டிருப்பர்.
4. அவர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் பட்சத்தில், அவர்களின் சொந்த கருத்தைப் பிரதிபலிக்காமல், நமது கருத்துக்களுடன் அவை ஒத்திருக்கும்படி இணைத்துப் பகிர்ந்துகொள்வர். அவர்களின் உண்மையான நிலைப்பாட்டை எவரும் அறிய முடியாது.
5. பச்சாதாபப்பட்டோ அல்லது ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி புரிவது போலவோ, அவர்கள் எவருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு உடனடி பரிசுகள் கிடைக்குமென்றால் அல்லது எதிர்காலத் தேவை ஏதாவது பூர்த்தியாகுமென்றிருந்தால் மட்டுமே அவர்கள் உதவிக் கரம் நீட்டத் தயாராவார்கள்.
6. குழுவாக இணைந்து ஒரு செயல் புரிந்து வெற்றி பெற்று விட்டால், அவர்கள் தங்களால்தான் அந்த வெற்றி என்றும், பிறர் முயற்சி எதுவும் அதில் குறிப்பிடும்படி இல்லை என்றும் பேசி, தங்கள் பிம்பத்தை உயர்த்தி அதன் மூலம் வேறு ஆதாயம் தேட முயல்வார்கள்.
7. நாம் கஷ்டத்தில் இருக்கும்போது, அவர்கள் குறைந்தபட்ச ஈடுபாடு மட்டும் காட்டிவிட்டு, கஷ்டத்திலிருந்து விடுபட்டதும், அவர்களால்தான் அனைத்தும் முடிந்தது என அனைவரிடமும் கூறவும், அதற்கு பதிலாக ஏதாவது கிடைக்குமா என எதிர்பார்க்கவும் செய்வர்.
8. அவர்கள் நம்முடன் சேர்ந்திருக்கும் தருணங்களை ஒரு வியாபார ரீதியான கண்ணோட்டத்திலேயே பார்த்துக் கொண்டிருப்பர். அன்புப் பிணைப்பாக ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்.
9. சோஷியல் நிகழ்வுகளில் இணைந்திருக்கும்போது, அவர்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்தை முன்னிறுத்தியே அவர்களின் உரையாடல் செல்லும். மற்றவர்களின் புரிதல் மற்றும் வசதிகளை அவர்கள் ஒரு பொருட்டாகவே கொள்வதில்லை.