

ஒருவர் நம்மை ஏமாற்றப் போகிறார் என்பதை அவர்களின் பேச்சிலும் நடந்து கொள்ளும் விதத்திலும் அறிந்து கொள்ளலாம். அவர்களின் போக்கை கவனிப்பதன் மூலம் நம்மால் இதனை எளிதில் கண்டறிய முடியும். அந்த வகையில், ஒருவர் நம்மை ஏமாற்றுகிறார் என்பதை எப்படி அறிந்து கொள்வது என்பது குறித்து இந்தப் பதிவில் கண்போம்.
1. ஏமாற்றுபவர்களின் தந்திரங்கள் சில: ஏமாற்றுபவர்கள் சில தந்திரங்களை உபயோகிப்பார்கள். யோசிப்பதற்கு நமக்கு நேரமே கொடுக்க மாட்டார்கள். பிறரிடம் இருந்து நம்மை தனிமைப்படுத்துவார்கள். நாம் கேட்காமலேயே, தன்னைப் பற்றி மிகவும் உயர்வாகவும், பிறருக்கு உதவுபவராகவும் தன்னிலை விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், அவர்களின் கண்களே உண்மையை சொல்லிவிடும். நாம் பேசும்போது நம் கண்களைப் பார்க்காமல் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டே பேசுவார்கள். இதனை நாம் சற்று கூர்ந்து கவனித்தாலே எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.
2. முரண்பாடான பேச்சு: அவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே முரண்பாடுகள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். நாம் கேட்கின்ற கேள்விகளுக்கு நேரடியான பதில் கிடைக்காது. சுற்றி வளைத்து பேசுவதும், மழுப்பலாக பதில் கொடுப்பதும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதுமாக இருப்பார்கள். பொய்யை உண்மை போலவே அடித்துப் பேசுவார்கள். முக்கியமாக, அவர்களின் பேச்சில் தடுமாற்றம் இருக்கும். ஒரே நேரத்தில் பல விஷயங்களைப் பற்றிப் பேச முயற்சிப்பது, கேட்கும் விஷயங்களுக்கு நேர்மாறாக பேசுவது போன்ற முரண்பாடுகள் இருக்கலாம். இதைக் கொண்டு எளிதில் அடையாளம் காணலாம்.
3. உணர்வுகளை புறக்கணித்தல்: நம் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், நம் கவலைகளையும் தேவைகளையும் புறக்கணித்தால் அதை ஒரு அறிகுறியாக எண்ணி சிறிது கவனமுடன் இருக்கலாம். நாம் ஏமாற்றப்பட்டதாக உணரும்பொழுது அதைப் பற்றி அவர்களிடம் பேச முயற்சிக்கும்பொழுது, அந்த விஷயத்தை தவிர்ப்பது அல்லது நம்மைக் குற்றவாளியாக்குவது போன்றவற்றை செய்ய முற்படுவார்கள். இதைக் கூர்ந்து கவனித்தால் நன்கு தெரியும்.
4. திடீர் மாற்றங்கள்: அவர்களின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் சந்தேகத்தை உண்டாக்கலாம். முன்பிருந்ததை விட திடீரென அதிகம் இரக்கம் உள்ளவராகவோ, அக்கறை காட்டுபவராகவோ நடிப்பது அல்லது நம் நம்பிக்கையை மீண்டும் பெற முயற்சிப்பதாகக் கூறுவது போன்றவை கவனிக்க வேண்டியவை. வித்தியாசமாக நடந்து கொள்வது, முன்னர் இல்லாத அளவிற்கு ரகசியமாக இருப்பது, ஏதேனும் கேள்வி எழுப்பினால் அதிக தற்காப்பு உணர்வுடன் நடந்து கொள்வது, கோபப்படுவது போன்றவை நமக்கு சந்தேகத்தை உண்டுபண்ணும்.
5. நேர்மையின்மை: பொய் சொல்வது அல்லது உண்மைகளை மறைப்பது போன்ற நேர்மையற்ற செயல்களில் ஈடுபடுவது ஏமாற்றுவதற்கான ஒரு தெளிவான அறிகுறியாகும். அவர்களின் பேச்சில் அல்லது செயல்களில் நேர்மையின்மை இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலர் நல்லவர்களைப் போல் நடித்துக் கொண்டு கூடவே இருந்து குழி பறிப்பார்கள்.
6. சந்தேகத்தை எழுப்பும் உடல் மொழி: அவர்களின் உடல் மொழிகளின் மூலம் இதனை எளிதாகக் கண்டறியலாம். ஏமாற்ற நினைக்கும்பொழுது நம் முகத்தை நேருக்கு நேர் பார்த்து பேசுவதைத் தவிர்ப்பார்கள். கண் சிமிட்டுவது, முகம் சுழிப்பது அல்லது பதற்றத்துடன் காணப்படுவது போன்ற உடல் மொழி மாற்றங்களை வைத்தும் இதைக் கண்டு கொள்ளலாம்.