அன்றாட உபயோகப் பொருட்களை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்!

அன்றாட உபயோகப் பொருட்களை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்!

ன்றாட வாழ்வில் நாம் உபயோகப்படுத்தும் சில பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் மாற்ற வேண்டும். மாத்திரை, ஆயின்மெண்ட், சமையல் பொருட்களுக்கு அவற்றின் கவர்களில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், பல் தேய்க்கும் பிரஷ், காலணிகள் போன்றவற்றில் காலாவதி தேதி இருக்காது. அதுபோன்ற பொருட்களை  எத்தனை நாட்களுக்கு ஒரு முறை  மாற்ற வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

1. பல் தேய்க்கும் பிரஷ்: தினமும் நாம் பயன்படுத்தும் பல் தேய்க்கும் பிரஷ்ஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது என்கிறார்கள் பல் மருத்துவர்கள். மேலும், அதன் குச்சங்கள் வளைந்து தேய்ந்து இருந்தால் உடனடியாக அதை மாற்றிவிட வேண்டும். மூன்று மாதங்கள் காலக்கெடு தேவையில்லை.

2. காலணிகள்: சிலர் ஒரே செருப்பை அடிப்பகுதி தேய்ந்துபோனாலும் இரண்டு மூன்று  வருடங்களுக்குப் பயன்படுத்துவர். ஆனால், அது மிக மிக தவறு. நல்ல தரமான செருப்புகள் ஒரு வருடம் வரும். வேலைக்கு செல்பவர் அல்லது தினமும் செருப்பு அணிந்து நடப்பவராக இருந்தால் ஒரு வருடம் வரை உழைக்கும். அதிகமாக வெளியில் செல்லாதவர் எனில் இரண்டு வருடங்கள் வரலாம். செருப்பின் அடிப்பகுதி தேய ஆரம்பித்தால் அவற்றை மாற்றி விட வேண்டும். ஏனென்றால், நம் மொத்த உடம்பையும் தாங்கிப் பிடிப்பது நம் பாதங்கள்தான். அதற்கு சரியான காலணியோ ஷூக்களோ அணிவது மிக மிக அவசியம். இல்லையென்றால் பாத வலி, மூட்டு வலி எல்லாம் வரக்கூடும்.

3. ஸ்டிக்கர் பொட்டு: சில பெண்கள் ஸ்டிக்கர் பொட்டை  காலையில் குளிக்கும் போது அதை குளியல் அறை சுவர்களிலோ அல்லது படுக்கையறை கதவு,  ஜன்னலிலோ ஒட்டி வைத்துவிட்டு மறுபடியும் உபயோகிப்பார்கள். ஆனால், அவற்றை தினமும் மாற்றுவதே நல்லது. சுவரில் ஒட்டி வைக்கும்போது அதில் உள்ள அழுக்கு பொட்டில் ஒட்டிக்கொண்டு நெற்றியில் அரிப்பு மற்றும் சருமத்தில் வியாதி வரக்கூடும். விசேஷங்களின்போது உபயோகிக்கும் கிரிஸ்டல்கள், கண்ணாடி, கல் வைத்த ஸ்டிக்கர் பொட்டுகளை, வீட்டிற்கு வந்ததும் அதற்குரிய அட்டையில் ஒட்டி வைத்து,  இரண்டு மூன்று முறை பயன்படுத்தலாம்.

4. உள்ளாடைகள்: நல்ல  தரமான உள்ளாடைகளாக இருந்தாலும், தினந்தோறும் உபயோகப்படுத்துவதால் அவற்றை எட்டு முதல் ஒன்பது மாதங்களுக்குள் மாற்றி விட வேண்டியது நல்லது. அவை அணிவதற்கு மென்மையானதாக இருப்பது அவசியம்.

5. குழந்தை டயப்பர்கள்: பிறந்த குழந்தை ஒரு நாளில் பலமுறை சிறுநீர் கழிக்கும். மூன்று மணி நேரங்களுக்கு ஒரு முறை கட்டாயம் டயப்பர் மாற்றியாக வேண்டும். இல்லையெனில் பலவித தொற்று மற்றும் சரும நோய்கள் வரக்கூடும். குழந்தைக்கு ஏழு, எட்டு மாதம் ஆகி, அது படுக்கையில் சிறுநீர் கழிக்காது என்றால் நல்ல தரமான டயப்பர்களை ஆறு மணி நேரம் உபயோகிக்கலாம்.

6. சானிட்டரி நாப்கின்: பெண்கள் நாள் முழுக்க ஒரே  நாப்கினை உபயோகப்படுத்தினால், புற்று நோய், கர்ப்பப்பைத் தொற்று தாக்கலாம். எனவே, நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை  அதை மாற்றுவது அவசியம்.

7. பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள்: பஸ், ரயில் பிரயாணங்களின்போதும் விருந்து விசேஷங்களின் போதும் கொடுக்கப்படும் பாட்டில்களை ஒரு முறை உபயோகித்த உடனே அவற்றை நசுக்கி குப்பையில் போட வேண்டும். மற்ற பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். சில சமயங்களில் ஒரு வருடம் முடிவதற்கு முன்பாகவே அதனுடைய கலர் மங்கத்தொடங்கி விடும். அப்போது அந்த பாட்டில்களை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.

8. இட்லி மாவு: பெரும்பான்மையான பெண்கள் இட்லி மாவு அரைத்து, ஒரு வாரம், பத்து நாளுக்கு பிரிட்ஜில் வைத்து உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால், அது மிகத் தவறு. இதனால் அசிடிட்டி பிரச்னை வரும். மூன்று நாட்களுக்கு மேல் அதை  உபயோகிக்கக் கூடாது.

9. காய்கறிகள், பழங்கள்: பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வைத்த காய்கறி, பழங்களை இரண்டு மூன்று நாட்களில் உபயோகித்து முடித்துவிட வேண்டும். கீரைகளை வாங்கி வந்த அன்றே  சமைத்து முடிக்க வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள சத்துக்களை இழக்க நேரிடும்.

10. பாத்திரம் தேய்க்கும் பிரஷ்: பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பாத்திரம் தேய்க்கும் பிரஷ்களை கட்டாயம் மாற்ற வேண்டும். ஒவ்வொரு முறை உபயோகித்ததும் நீரில் நன்கு கழுவி பிழிந்து வைக்க வேண்டும். இல்லையெனில் பூஞ்சைத் தொற்று தாக்கும்.

11. தலையணை உறை, மெத்தை விரிப்பு, போர்வை, துண்டு: தலையணை உறைகளை நான்கு நாட்களுக்கு ஒரு முறையும், மெத்தை விரிப்பு, போர்வையை வாரம் ஒரு முறையும் அவசியம் மாற்றி விட வேண்டும். துண்டுகளை மூன்று நாட்களுக்கு ஒரு முறை துவைத்துப் பயன்படுத்துவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com