
இண்டர்நெட் வேகமெடுக்க எடுக்க, ஒவ்வொருவரின் குணாதிசயங்களும் மாறி வருகிறது. முன்பெல்லாம் தொலைப்பேசி என்பது ஒருவருடன் மற்றொருவர் தொடர்பில் இருப்பதற்காக மட்டும் தான் கொண்டு வரப்பட்டது, உபயோகிக்கவும் பட்டது. ஆனால் நாளுக்கு நாள் இண்டர்நெட் என்பது கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நமக்கு தேவையான தரவுகளை சேகரித்து கொள்ளும் வகையில் இருந்தது. இது படிப்பு, வேலை என அனைத்திற்கும் உபயோகமாக இருந்தது. இன்னும் சிறுது காலம் செல்ல இலவச இண்டர்நெட், எந்த நேரமும் இண்டர்நெட் கிடைக்கும் என்று டெக்னாலஜி மாறவே, அனைவரும் அதில் அடிமையாகிவிட ஆரம்பித்துவிட்டோம். இதில் குழந்தைகள் மட்டும் விதி விலக்கா? அவர்களும் நாளுக்கு நாள் அடிமையாகி வருகின்றனர்.
பெற்றோர்கள் உபயோகிப்பதாலேயே, குழந்தைகளும் இதை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். உணவு ஊட்ட, குளிக்க வைக்க என குழந்தைகளின் அடத்தை குறைக்க கொடுக்கப்பட்ட மொபைல் போன்கள், நாளுக்கு நாள் போன் இருந்தால் தான் இதை செய்வேன் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதையே போன் அடிக்ஷன் என்று கூறுகின்றனர்.
குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் அதிகமாகவே மொபைல் போனுக்கு அடிமையாகி வருகின்றனர். உள்ளங்கையில் உலகமே வந்துவிட்டது என்று கூறி பெருமைப்படுவதா, அதற்கு நாம் தினசரி அடிமையாகி வருவதை நினைத்து கவலை கொள்வதா என்றே தெரியவில்லை. அப்படி உங்கள் குழந்தைகளும் இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தால் எப்படி வெளிகொண்டு வருவது என தெரிந்து கொள்ளலாம் வாங்க...
பெற்றோர்கள் முதலில் மாற வேண்டும்:
பெற்றோர் அதிகம் செல்போனை பயன்படுத்திக் கொண்டு குழந்தைகளை கண்டித்தால் அவர்கள் திருந்தமாட்டார்கள். குழந்தைகளுக்கு பெற்றோரே முன்மாதிரியாக இருக்க வேண்டும். உதாரணமாக குழந்தைகளை படிக்க சொல்லும்போது பெற்றோரும் ஏதேனும் புத்தகம் படிக்கலாம். இது அவர்களை படிப்பை நோக்கி உந்தித் தள்ளும்.
அறிவுரை கூற வேண்டும்:
குழந்தைகளுடன் அவர்களுடைய எதிர்காலத்தை குறித்து பெற்றோர் உரையாட வேண்டும். வெறும் செல்போனை மட்டும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை குறித்து அன்பாகவும், கனிவுடனும் சொல்ல வேண்டும். செல்போனை எப்படி பயனுள்ள முறையில் பயன்படுத்துவது, அதற்கென குறிப்பிட நேரத்தை ஒதுக்குவது குறித்து குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே விழிப்புணர்வு வழங்க வேண்டும். அவர்கள் அழும்போதும், அடம் பிடிக்கும் போதும் செல்போன் கொடுத்து பழக்கவே கூடாது.
ஊக்குவிக்கலாம்:
குழந்தைகள் தங்களுடைய வீட்டு பாடங்களை சரியாக செய்வதை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு அவ்வப்போது சிறு சிறு பரிசுகளை வழங்கலாம். பள்ளி விட்டு வந்ததும் செல்போனை எடுக்காமல் மற்ற விஷயங்களில் அவர்கள் ஈடுபடும் போது அதை பாராட்டலாம். இது அவர்களை உற்சாகப்படுத்தும்.
நேரம் ஒதுக்க வேண்டும்:
பெற்றோர்கள் குழந்தைகளுடன் விளையாட நேரம் செலவிட்டாலே, பாதி பிரச்சனை குறைந்துவிடும். இதனால் அவர்கள் பள்ளி விட்டு வந்ததும் படிக்க சொல்லாமல், விளையாடுவதை வழக்கமாக வைத்திருங்கள். பாரதியே மாலை முழுவதும் விளையாட்டு என்றே கூறியுள்ளார். விளையாட்டு என்பதும் அத்தியாவசியமானதாகும். இதுவே அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். வேலைக்கு செல்லும் பெற்றோர்களாக இருந்தால் சிரமம் பார்க்காமல் இரவில் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி விளையாடலாம்.
வேறு வேலைகள் கொடுக்கலாம்:
போனில் அடிமையாகாமல் இருக்க மற்ற வேலைகளில் ஈடுபடுத்தலாம். வீட்டு வேலை, கடைக்கு செல்லும் வேலை அல்லது அவர்களுக்கான ஆக்டிவிட்டீஸ்களை கொடுக்கலாம். இது அவர்களின் மூளைக்கு வேலை கொடுப்பதால் போனை தவிர்ப்பார்கள்.