மழைக்காலத்தில் பல உயிரினங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனிதர்களுக்கு ஆபத்தையும் தீங்கையும் விளைவிக்கலாம். அவற்றிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மழைக்கால விஷ ஜந்துக்களும், அவை எற்படுத்தும் பாதிப்புகளும்:
பாம்புகளும் பூரான்களும்: வீட்டைச் சுற்றி தோட்டம் இருக்கும் பகுதிகளில் பாம்புகளின் வருகை அதிகமாக இருக்கும். மழைக்காலத்தில் பாம்புக்கடியினால் பாதிக்கப்படுவோர் அதிகம். விஷமுள்ள பாம்புகள் மரணத்தை ஏற்படுத்தும். அதேபோல, பூரான்களும் மழைக்காலத்தில் அதிகரிக்கும். இவை கடித்தால் உடலில் தடிப்பு, வலி, வீக்கம், ஒவ்வாமை போன்றவை ஏற்படும்.
அட்டைப்பூச்சிகள்: சமையலறை, கொல்லைப்புறம், குளியலறை போன்ற ஈரமான பகுதிகளில் காணப்படும் மனிதர்களைத் தாக்கி அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும். இவை நோய்களை பரப்புவதில்லை என்றாலும் இவை கடித்தால் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை ஏற்படலாம்.
தேள், எலி, ஈ, கரப்பான், கம்பளிப்பூச்சி: மழைக்காலத்தில் வீட்டுக்குள் நுழையும் மற்றொரு உயிரினம் தேள். இது கொட்டினால் விஷம் பரவி மரணத்தைக் கூட ஏற்படுத்தும். எலிகள் லெப்டோ ஸ்பைரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். ஈக்களின் வருகை மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும். அவை ஒவ்வாமை, அரிப்பு மற்றும் பலவிதமான நோய்களைப் பரப்பும். கரப்பான் பூச்சிகளும் மழைக்காலத்தில் வீட்டுக்குள் படையெடுக்கும் வாய்ப்பு அதிகம். அவை ஆஸ்துமா உள்ளிட்ட பலவிதமான சுவாசப் பிரச்னைகளை உண்டாக்கும். கம்பளிப்பூச்சி உடலில் தடிப்பு, வலி, வீக்கத்தை உண்டாக்கும்.
கொசுக்கள்: மழைக்காலத்தில் கொசுக்கள் அதிகமாக முட்டையிட்டு பெருகிவிடும். ஜிகா வைரஸ், டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற பல்வேறு நோய்களைப் பரப்பும். இதற்கு நாம் செய்ய வேண்டியது வீட்டைச் சுற்றி தேங்கி நிற்கும் நீரை அகற்ற வேண்டியது அவசியம்.
மழைக்கால ஜந்துக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் குப்பைகள் இன்றி சுத்தமாகப் பராமரிப்பது அவசியம். இலைகள், விறகுகள் மற்றும் குப்பைகளின் குவியல்கள் இருக்கக் கூடாது. அவற்றின் அடியில் பாம்புகள் தேள்கள் மற்றும் பூரான்கள் இருக்கக்கூடும். தோட்டத்தில் இருக்கும் புல்வெளிகளை வெட்டி சீர்படுத்த வேண்டும். அடர்த்தியான தாவரங்கள் மற்றும் மரங்களின் தாழ்வான கிளைகளை வெட்டி விட வேண்டும். தொட்டிச் செடிகளுக்கு அடியில் பூரான், பல்லி, அட்டை போன்றவை வந்து தங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வீடுகளுக்குள் பாம்புகள் உள்ளிட்ட ஜீவராசிகள் வருவதைத் தடுக்க சுவர்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் ஏதேனும் இடைவெளி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஜன்னல்களுக்கு நெட்லான் அமைக்க வேண்டும். கதவுகள் பாதுகாப்பாக மூடப்பட்டு இருக்கின்றனவா என்பது உறுதி செய்ய வேண்டும்.
வீட்டைச் சுற்றி அல்லது வீட்டிற்கு வெளியில் செல்லும்போது எப்போதும் காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். கணுக்கால்களை மறைக்கும் பூட்ஸ் அல்லது ஷூக்கள் அணிவது நல்லது.
கற்பூரம், வேப்ப எண்ணெய் போன்ற இயற்கை விரட்டிகள் அல்லது அந்துப்பூச்சி போன்ற அடர்த்தியான வாசனை உள்ள பொருட்களை பயன்படுத்தினால் விஷ ஜந்துக்கள் உள்ளே நுழையாது.
ஷூக்கள் மற்றும் காலணிகளை அணியும் முன்பு உள்ளே தட்டி பார்த்துவிட்டு அணிய வேண்டும். உள்ளே பாம்பு, பூரான் போன்ற ஜந்துக்கள் மறைந்திருக்கலாம். பூரான், பாம்பு, தேள் போன்றவை கடித்துவிட்டால் பதற்றப்படாமல் உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கரப்பான்களின் வருகையைத் தடுக்க, சமையலறை சிங்கை சுத்தமாக உணவுத் துணுக்குகள் இன்றி வைத்துக் கொள்ளவும். வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலந்த கலவையை தெளித்து விட்டால் அவை ஓடிவிடும்.