வரவேற்பறை (Drawing Room) என்பது நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் மனதில் நிறுத்தி, வடிவமைக்கப்படும் ஓர் அறையாகும். இந்த அறை பொதுவாக வீட்டில் நுழைந்தவுடனே இருக்கும். ஏனெனில், விருந்தினர்கள் உள்ளே வந்தவுடன் வரவேற்பறையில் அமர்ந்துபேசுவது அவர்களுக்கும் எளிதாக இருக்கும். நமக்கும் வசதியாக இருக்கும். நமது வீட்டிற்குள் நாம் மற்றும் நமது குடும்பம் மட்டுமே இருப்போம் என்பதால் நமக்கு பிடித்த வகையில் வீட்டைப் பராமரிக்கலாம். ஆனால், வரவேற்பறை ஒரு பொழுதுபோக்குக்கான இடம் என்பதாலும் விருந்தினர்களின் கண்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதாலும் நாம் இதனை கூடுதல் அக்கறையுடன் வடிவமைப்பது மிகவும் அவசியம்.
மையசுவர்: வரவேற்பறையின் மையப்பகுதியில் உள்ள சுவரில் வெவ்வேறு நிறங்களில் பெயிண்ட் அடிக்கலாம். இந்த இடம் விருந்தினர்கள் நுழைந்தவுடன் தெரியும் வகையில் இருப்பதால் அழகழகான வால் பேப்பர்கள் தேர்ந்தெடுத்து ஒட்டுவதும் நல்லது.
கண்கவர் ஓவியங்கள்: அறையில் மையப்பகுதி இல்லாத சுவரில் உங்கள் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அல்லது உங்களுடைய வேலைப்பாடுகளை மாட்டி வைக்கலாம். உங்களுக்குப் பிடித்த ஓவியங்களைக் கடையில் வாங்கியும் மாட்டலாம்.
செயற்கை செடிகள்: வரவேற்பறையை மேலும் அழகுப்படுத்த செயற்கை செடிகளை மேஜை மீது அல்லது ஜன்னல் அருகே வைக்கலாம். செயற்கை செடிகளுக்குப் பதிலாக கற்றாழையும் பயன்படுத்தலாம். ஏனெனில், கற்றாழையை தினமும் பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
குறைந்த மரச்சாமாங்கள்: அறையை எளிய வகையில் அழகுப்படுத்துவது அவசியம். அதிகமான மேஜைகள், மரச்சாமான்கள் வைப்பதைத் தவிர்க்கவும். ஒரு நான்கு அல்லது ஐந்து பேர் அமர்வதற்கான நாற்காலிகள் மற்றும் நடுவில் பொதுவாக ஒரு மேஜை மட்டும் வைத்துக்கொள்வது நல்லது. மேலும், சுவருக்கு ஏற்ற நிறத்தில் மரச்சாமன்கள் வைப்பது அழகாக இருக்கும்.
சுவரில் கண்ணாடி: வரவேற்பறையில் கண்ணாடிப் பொருட்கள் வைப்பது இன்னும் அழகைக் கூட்டும். இது பார்ப்பதற்கு பழைமை வாய்ந்த இடமாக இருப்பதுபோல் காண்பிக்கும். அழகான வடிவமைப்புகளுடன் இருக்கும் கண்ணாடியை சுவரில் மாட்டுவது, அந்த இடம் விசாலமாக இருப்பது போன்ற உணர்வைத் தரும்.
அறை முழுவதும் ஒரே நிறம்: சுவரின் நிறம், சோபா நிறம், மரச்சாமான்கள் நிறம் ஆகியவை ஒரே நிறத்தில் இருந்தால் தனித்துவமாக இருக்கும். மற்றும் அனைத்தையும் ஒரே நிறத்தில் வைத்துவிட்டு நாற்காலி மெத்தைகளை (Cushions) மட்டும் வேறு நிறத்தில் வைக்கலாம்.
எலக்ட்ரிக் லைட்ஸ்: சிறிய அறையாக இருப்பின், மேற்கூரையில் மாட்டப்படும் பெரிய அலங்கார விளக்கைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக சுவரில் மாட்டப்படும் எலக்ட்ரிக் லைட் வாங்கி மாட்டுவது நல்லது. பெரிய அறையாயின் மேற்கூரையில் சிறிய அலங்கார விளக்கு பயன்படுத்தலாம்.
சிறிய செல்ஃப்: அறையில் குறைந்த அளவு செல்ஃப் வைக்க வேண்டியது அவசியம். இதில் அதிகமான பொருட்களை வைக்காமல், உங்களுடைய விருதுகள், கோப்பைகள் அல்லது சில அலங்கார சிறிய அளவு சிலைகள் வைப்பது நல்லது.
தனித்துவம் வாய்ந்த அறை: கருப்பு மேஜைகள் தனித்துவமான அழகைத் தரும். அதேபோல், வெள்ளை நிற சுவரில் மரப் பலகை, மரக் கதவு, மரச்சாமான்கள் வைப்பது அழகான வரவேற்பறையாக இருக்கும். இது கொஞ்சம் அதிக செலவாகும். ஆனால், அந்த அளவுக்கு அழகுமிக்கவையாகவும் இருக்கும்.