மனித வாழ்வில் பிரச்னைகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், அதை ஒவ்வொருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது முக்கியம். சின்னச் சின்ன விஷயத்திற்கும் கவலைப்படுவதால் உடல் நலம் மட்டுமல்ல, மன ஆரோக்கியமும் கெடும். எனவே, கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அதை புத்திசாலித்தனமாக எதிர்கொள்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலில் எந்த பிரச்னைக்கும கவலைப்படுவது தீர்வாகாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மனதில் கவலை சூழும்போது அதை புறம் தள்ளிவிட்டு புதிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். புதிதாக ஏதேனும் கற்றுக்கொள்ள வேண்டும்.
பிறருக்கு உதவலாம். பிறருக்கு உதவும்போது அவர்களுடைய விஷயத்தில் ஆர்வமாக இருக்கும்போது நமக்கான கவலைகள் மறந்து விடும்.
நம்பிக்கை தரும் விஷயங்களைச் செய்ய வேண்டும். அதனால் கவலை தள்ளிப் போகும்.
பிசியாக வைத்துக்கொள்வது கவலைகளில் இருந்து விடுபட வைக்கும்.
கவலையை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள சில வழிகள்:
1. பொதுவாக, சின்னச் சின்ன விஷயங்களுக்குதான் கவலைப்படுவது மனித இயல்பு. அப்படி என்ன மோசமாக நிகழ்ந்துவிடப் போகிறது? பெரும்பாலும் வாழ்வா? சாவா? போராட்டம் இருக்கப்போவதில்லை. இதுவும் கடந்து போகும் என்று எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஆபீஸ் மீட்டிங்கிற்கு லேட் ஆக போய் பாஸ் கத்தக்கூடும். வரும் என்று நினைத்திருந்த பிரமோஷன் தள்ளிப் போகலாம். அவ்வளவுதானே?
2. பிரமோஷன் தள்ளிப்போவதோ, திட்டு வாங்குவதோ வாழ்வின் முடிவல்ல என்ற எண்ணம் தோன்றினால் அந்தக் கவலையை தூர எறிந்து விடுவோம்.
3. நமக்கான வேலைகளை அமைதியாகச் செய்ய வேண்டும். என் தற்போதைய சூழ்நிலையை இன்னும் சிறப்பாக மாற்ற என்ன செய்யலாம்? என்று யோசித்து முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். அடுத்து என்ன என்று யோசியுங்கள். ஆட்டோமேட்டிக்காக கவலையிலிருந்து விடுபட்டு அதற்கான தீர்வுகள் கிடைக்கும்.
4. ஒரு மூன்றாம் மனிதரைப் போல உங்கள் கவலையிலிருந்து தூர நின்று இதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசித்தால் அதற்கான வழிகள் கிட்டும். அதை உடனே செயல்படுத்த வேண்டும்.