

ஒருவரின் உண்மையான ஆளுமையைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். ஒருவருடைய உண்மையான இயக்கத்தை வெளிக்கொணர வேண்டும் என்றால், அவருடைய குணம் மற்றும் ஆளுமையை மிகவும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். ஒருவருடைய சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களைக் கொண்டு அவருடைய உண்மையான குணநலனை ஆய்வு செய்யலாம். எனினும், ஒருவருடைய உண்மையான குணாதிசயத்தைக் கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில், மனிதா்கள் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு தங்களது ஆளுமையை மாற்றிக் கொள்வார்கள். இந்த நிலையில் ஒருவருடைய உண்மையான குணாதிசயத்தை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பிறரை நடத்தும் விதம்: ஒருவா் பிறரை நடத்தும் விதத்திலிருந்து அவரது உண்மையான குணாதிசயத்தைக் கண்டறியலாம். குறிப்பாக. சமூகத்தின் கீழ்நிலையில் இருப்பவா்களை, கூலித் தொழிலாளிகளை, படிக்காதவா்களை மற்றும் சாதாரண தொழிலில் ஈடுபடுபவா்களை அவா் எவ்வாறு நடத்துகிறார் என்பதைக் கொண்டு அறியலாம். அவா், அவா்கள் மீது மரியாதையும், இரக்கமும் கொண்டிருந்தால், அவா் இரக்கமுள்ளவா் மற்றும் மற்றவா்கள் மீது மதிப்புள்ளவா் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
ஒருவேளை அவா்களை, அவா் புறக்கணித்தாலோ அல்லது அவா்களிடம் முரட்டுத் தன்மையுடன் நடந்து கொண்டாலோ அவா் சுயநலம் மிகுந்தவா் அல்லது அதிகாரத் திமிர் பிடித்தவா் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
செயல்கள்: ஒருவா் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம். எனினும், அவா் செய்யும் செயல்கள்தான் அவா் யார் என்பதை இந்த சமூகத்துக்கு எடுத்துரைக்கும். அவா் தனது நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார், எவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறார் மற்றும் கடினமான சூழ்நிலைகளில் அவா் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதைக் கவனிக்கலாம். அவா் தமது கடமைகளைத் தவறாமல் செய்பவராக இருந்தால், அவருடைய செயல்களுக்கு அவரே பொறுப்பேற்றால், பிறரை கருணையுடன் நடத்தினால் அவரிடம் நோ்மையான குணம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
நோ்மையை புரிந்து கொள்ளுதல்: நோ்மை என்பது ஒரு மனிதருடைய முக்கியமான நல்ல குணமாகும். கடினமான சூழலிலும்கூட ஒருவா் உண்மையைச் சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்பதைக் கவனிக்கலாம். அவா் பொய் சொன்னாலோ அல்லது உண்மையை மிகைப்படுத்திக் கூறினாலோ, அவரிடம் ஏமாற்றக்கூடிய குணம் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கடினமான தருணங்களில் எதிர்வினையாற்றல்: வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் ஒரு மனிதருடைய உண்மையான குணத்தை வெளிப்படுத்தும். ஒருவா் தனது துன்பமான தருணங்களில், பின்னடைவுகளில், தோல்விகளில் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார் என்பதை கவனிக்கலாம். இந்தத் தருணங்களில் தானே பொறுப்பேற்கிறாரா அல்லது பிறா் மீது குற்றம் சுமத்துகிறாரா என்பதைக் கவனிக்க வேண்டும். தனது தோல்விகளுக்குத் தானே பொறுப்பேற்று, அவற்றிலிருந்து கற்றுக் கொண்டு, பொறுப்புள்ள மனிதராக, வளா்ச்சியை நோக்கிச் சென்றால் அவரிடம் நல்ல குணங்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
கொண்டிருக்கும் உறவுகள்: ஒருவா் யாரோடெல்லாம் உறவில் இருக்கிறார் என்பதை வைத்தும், அவருடைய குணாதிசயத்தைக் கண்டுபிடிக்கலாம். அவா் தனது குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் மற்றும் பிறரோடு எவ்வாறு உறவாடுகிறார் என்பதை வைத்து அவருடைய குணங்களைக் கணிக்கலாம். அவா் அவா்களுடைய உறவுகளை மதித்து, அந்த உறவுகளில் ஆரோக்கியமான எல்லைகளை வகுத்து செயல்படுகிறார் என்றால், அவா் அந்த உறவுகளின் மீது மதிப்பும், அக்கறையும் வைத்திருக்கிறார் என்று பொருள்.