குழந்தைகளை வீட்டு வேலைகள் செய்யப் பழக்குவது எப்படி?

How to get kids used to housework
How to get kids used to houseworkhttps://familyfelicity.com
Published on

ல வீடுகளில் அடிப்படை வீட்டு வேலைகள் கூட தெரியாமல் தற்காலப் பிள்ளைகள் வளருகின்றனர். பள்ளி விடுமுறை விட்டதும் குழந்தைகளை சிலர் சம்மர் கேம்ப் வகுப்புகளில் சேர்ப்பார்கள். அதே சமயம் வீட்டு வேலைகளை குழந்தைகளுக்கு பழக்குவது மிகவும் அவசியம். அவர்களுக்கு அதனால் தன்னம்பிக்கையும், தைரியமும், தனித்து செயல்படும் இயல்பும் வளரும். டிவி மற்றும் மொபைல் போன்களில் அதிக நேரம் செலவழிப்பது தவிர்க்கப்படும். குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற வேலைகளைத் தரலாம்.

5லிருந்து 7 வயது குழந்தைகளுக்கு: இவர்களுக்கு விளையாடிய பொம்மைகளை எடுத்து வைப்பது, சாப்பிட்ட தட்டுகளை எடுத்து சிங்கில் போடுவது, அங்கங்கே தேவையில்லாமல் கிடக்கும் பொருட்கள், நாளிதழ்கள், புத்தகங்கள் போன்றவற்றை எடுத்து ஒழுங்காக அடுக்கி வைப்பது போன்ற வேலைகளை தரலாம். தங்களுடைய பொருட்களை சரியாக வைத்துக்கொள்ள கற்றுத்தரலாம்.

8 முதல் 12 வயதான குழந்தைகளுக்கு: இவர்களுக்கு சற்று பெரிய வேலைகளை ஒதுக்கலாம். வீடு கூட்டுதல், தரையைத் துடைத்தல், பொருட்களை தூசி தட்டி அடுக்கி வைத்தல், சிறிய பாத்திரங்களை கழுவி வைத்தல், செல்ஃபில் புத்தகங்கள், துணிமணிகள், பாத்திரங்களை ஒழுங்காக அடுக்கி வைத்தல், துவைத்த துணிகளை மடித்து வைத்தல், காய்கறிகளை நறுக்கித் தருதல், ஆம்லெட் போடுதல், உணவு மேசையை துடைத்தல், செல்லப்பிராணிகளை வாக்கிங் அழைத்துச் செல்லுதல், செருப்புகளை செல்பில் அடுக்கி வைத்தல், தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், குப்பைகளைக் கொண்டு சென்று குப்பைத் தொட்டியில் போடுதல் போன்ற பணிகளைத் தரலாம்.

13 முதல் 18 வயதுப் பிள்ளைகளுக்கு: டீனேஜ் பிள்ளைகளுக்கு சற்று சிக்கலான வேலைகளைத் தரலாம். அதேசமயம் அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். இட்லி, தோசை ஊற்றுவது, உப்புமா போன்ற எளிய உணவுகளை சமைத்தல், குக்கரில் சாதம் வைத்தல், சமைத்த சாதத்தை எடுத்து ஹாட் பேக்கில் நிரப்புவது, மிக்ஸியில் சட்னி அரைப்பது, சட்னிக்கு தயார் செய்வது, ரசம் வைப்பது, சாலடுகள் செய்வது, ஜூஸ் போட கற்றுத் தருவது, வாஷிங் மெஷினில் துணிகளை போட்டு செட் செய்தல், துணிகளை கொடியில் உலர்த்துதல், உலர்ந்த துணிகளை எடுத்து வருவது, அயர்ன் செய்வது, குளியலறை வாஷ்பேஷன் சுத்தம் செய்தல், தோட்டத்தில் புல்வெளியை செதுக்குதல், உதிர்ந்த இலைகளை அகற்றுதல், வீட்டில் இருக்கும் கார் பைக்கை கழுவுதல், துடைத்தல் போன்ற வேலைகளைத் தரலாம். கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருவது போன்ற வேலைகளையும் தர வேண்டும்.

https://tamil.boldsky.com

பெற்றோர் செய்யக் கூடாதவை: ஆரம்பத்தில் பிள்ளைகள் சரியாக வேலை செய்யாவிட்டால், அவர்களைத் திட்டாமல் பொறுமையாக கையாள வேண்டும். வேலையில் ஏதேனும் தவறு நேர்ந்தால், பரவாயில்லை என்று தட்டிக்கொடுத்து செய்யச் சொல்ல வேண்டும். ‘உனக்கு ஒரு வேலையும் உருப்படியா செய்யத் தெரியாது’ என்று திட்டக்கூடாது. அவர்களை வீட்டு வேலை செய்யும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி சிலர் கண் சிமிட்டுவதன் காரணங்களும் தீர்வுகளும்!
How to get kids used to housework

பெற்றோர் செய்ய வேண்டியவை: இந்த வேலைகளை செய்யும் குழந்தைகளுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கித் தர வேண்டும். அதில் அவர்கள் சேமிப்பதற்கு ஒரு பகுதியையும் தங்களுக்கு விருப்பம் போல செலவு செய்ய ஒரு பகுதியும் அனுமதிக்க வேண்டும். இதனால் பிள்ளைகள் சந்தோஷமாக வேலை செய்வார்கள். கோடைகால விடுமுறையும் பயனுள்ளதாக கழியும். மேலும் பொறுப்புள்ள பிள்ளைகளாக வளருவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com