புதிதாக வீடு கட்டி உள்ளீர்கள். புதுமனை புகுவிழாவினை அதிகம் செலவு செய்யாமல் எளிமையாக செய்ய பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றலாம்.
1. மிகவும் நெருங்கிய வட்டத்தினை மட்டும் விழாவிற்கு அழைக்கலாம். இதன் மூலம், விழாவிற்கான சாப்பாட்டு செலவு மிச்சமாகும்.
2. விருந்தினர்களை சாப்பாட்டிற்கு அழைப்பதற்கு பதிலாக, புதுமனை புகுவிழாவினை குடும்ப உறுப்பினர்களோடு முடித்துக்கொண்டு , அன்று மாலை இனிப்பு, காரம், காபி என்ற சிற்றுண்டிக்கு உறவினர்கள், நண்பர்களை அழைக்கலாம். இதற்கு ஆகும் செலவு குறைவாக இருக்கும்.
3. அழைப்பிதழை அச்சடிக்காமல், கைப்பேசியில் தயாரித்து, வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் அழைத்துவிடலாம். அழைப்பிதழ் செலவு மிச்சமாகும்.
4. புதுமனைப் புகுவிழா சம்பந்தமான பூஜையினை விரிவாக செய்யாமல், ஒரு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் என்ற குறைந்த அடிப்படை பூஜைகளைக் கொண்டு முடிக்கலாம். இதனால், பூஜை சாமான்களுக்கு, அர்ச்சகர்களுக்கு ஆகும் செலவு குறையும்.
5. புகைப்படம் எடுக்க தனியாக புகைப்பட வல்லுநரை அழைக்காமல், குடும்பத்தில் புகைப்படம் எடுப்பதில் ஈடுபாடு கொண்ட நபரைக் கொண்டு, நல்லதொரு கைப்பேசி உள்ள நபரின் கைப்பேசியிலும் எடுக்கலாம். புகைப்படச் செலவு மிச்சமாகும். இவற்றை இணையத்திலுள்ள google photos போன்ற இலவச பதிவேற்றுத் தளங்களில் சேமிக்கலாம். தேவைப்படும் குறிப்பிட்ட புகைப்படங்களை மட்டும் ப்ரிண்ட் போட்டுக் கொள்ளலாம்.
6. உணவு வகைகளை வெளியிலிருந்து தருவிப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே தயார் செய்து விருந்தினர்களுக்குப் பரிமாறலாம்.
7. வெளியில் இருந்து உணவு வாங்கினால், உணவுப் பட்டியலை எளிமையாக வைத்திருக்கலாம். அதன் மூலம், உணவிற்கு ஆகும் செலவு குறையும்.
8. வெளியில் இருந்து உணவு வாங்கினால் குறைந்த செலவில் நல்லதொரு உணவு வழங்கும் சமையல் ஒப்பந்த நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் பணத்தை மிச்சம் பிடிக்கலாம்.
9. நிதி திட்டமிடலை ஒவ்வொரு செலவிற்கும் செய்யலாம். உணவிற்கு இவ்வளவு, பூஜைக்கு இவ்வளவு என்று திட்டமிடுதலின் மூலம் பணம் செலவாகுவதை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
10. தேவையற்ற அலங்காரங்களை தவிர்க்கலாம். புதிதாக வண்ணம் பூசிய புதிதாக தயாரான வீடு அலங்காரம் தான். இதற்கு மேலும் அலங்காரங்களை அங்கு அமைத்து பணத்தை செலவழிக்காமல் பணத்தை மிச்சப் படுத்தலாம்.
11. நாதஸ்வரம் போன்றவற்றை தனியாக குழு ஏற்பாடு செய்யாமல் ஏற்கனவே பதிவேற்றப்பட்ட நாதஸ்வர இசையை ஒலிபெருக்கியில் ஒலிபரப்பலாம்.
12. காலை சிற்றுண்டி, மதியம் உணவு என்று இரண்டு வேளைகளில் உணவு என்று இருக்காமல் ஒருவேளை மட்டும் காலைஉணவினை சீக்கிரமாக பரிமாறி விடலாம்.
13. விழாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு எளிமையான நினைவு பரிசுப் பொருளைப் வழங்கலாம். அது கையில் தயாரித்த அலங்கார அட்டையாக கூட இருக்கலாம்.
14. உணவுகளை மேஜையில் பரிமாறுவதற்கு, மேஜை நாற்காலிகள் என்று இல்லாமல் எளிமையாக தரையிலேயே இலையில் உணவினை பரிமாறலாம். இதனால் மேஜை நாற்காலிகளுக்கான செலவு மிச்சமாகும்.
இவ்வாறு எளிமையான புதுமனை புகுவிழாவினை நடத்துவதன் மூலம் பணத்தை மிச்சம் பிடிக்கலாம்.