ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விளைவை பயன்படுத்தி உறவுகளை மேம்படுத்துவது எப்படி?

Florence Nightingale effect
Florence Nightingale effecthttps://www.austco.com

வ்வொரு மனிதருக்கும் உறவுகள் மிகவும் முக்கியம். உறவுகளை அனுசரித்து அன்பு காட்டி அரவணைத்துச் செல்வது மிகவும் அவசியம். ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விளைவை பயன்படுத்தி உறவுகளை மேம்படுத்துவது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விளைவு என்றால் என்ன?

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவர் ஒரு பிரிட்டிஷ் செவிலியர். 19ம் நூற்றாண்டில் நடந்த கிரிமியன் போரில் அடிபட்ட நோயாளிகளுக்கு அதீத அக்கறையுடனும் அன்புடனும் சிகிச்சை கொடுத்து பராமரித்தவர். செவிலியர்களின் தாய் என்று கருதப்படுகிறார். அவர் காயமடைந்த வீரர்களை இரக்கமும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் கவனித்துக் கொண்டார். ‘கை விளக்கு ஏந்திய காரிகை’ என்ற சிறப்புப் பெயரும் அவருக்கு உண்டு.

‘ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் எஃபெக்ட்’ என்பது செவிலியர்கள் தங்கள் நோயாளிகளை அதீத அன்புடன் கவனித்துக் கொள்வதை குறிக்கிறது. நோயுற்ற உறவுகளிடம் மட்டுமல்ல, மனரீதியாக துன்பப்படும், சிக்கலில் இருக்கும் உறவுகளிடம் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விளைவைப் பயன்படுத்தி உறவு மேலாண்மையை பலப்படுத்தலாம்.

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விளைவை உறவுகளிடம் பயன்படுத்தும் விதம்:

1. அக்கறையுடன் கவனித்துக் கேட்பது: உறவுகளிடம் உண்மையான அன்பு மற்றும் பாசம் வைத்திருப்போர் அவர்கள் சொல்வதை காது கொடுத்து பொறுமையாக கேட்க வேண்டும். இது அவர்களுக்கு உணர்வு பூர்வமான ஆறுதலை அளிக்கும். தங்களுடைய கவலைகளை பகிர்ந்து கொள்ளும்போது அக்கறையுடன் கேட்க வேண்டும். அப்போது அவர்கள் அவற்றிலிருந்து விடுபட்டது போன்ற ஒரு உணர்வை அடைகிறார்கள்.

2. பச்சாதாபம் மற்றும் புரிதல்: எம்பத்தி எனப்படும் பச்சாதாப உணர்வுடன் அவர்களுடைய நிலையிலிருந்து அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் போராட்டங்கள், சிக்கல்கள் மற்றும் துயரங்களைப் புரிந்து கொண்டு பரிவாகப் பேசுவதன் மூலம் பச்சாதாபத்தையும் இரக்கத்தையும் வழங்க முடியும்.

3. கருணையுடன் உதவுதல்: நோயுற்ற உறவுகளிடம் கருணையான செயல்கள் மூலம் அக்கறையையும் பாசத்தையும் வெளிப்படுத்தலாம். உடல் ரீதியாக அவர்கள் துன்பப்படும்போது உணவு ஊட்டி விடலாம். காயங்களை துடைத்து மருந்திடலாம். மாத்திரைகளையும் தண்ணீரும் எடுத்துக் கொடுத்து விழுங்கச் சொல்லலாம். அக்கறையுடன் அருகில் அமர்ந்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லலாம்.

வீட்டு வேலைகளில் உதவுவது, பிடித்த உணவை தயாரித்துக் கொடுப்பது, சிறிய பரிசை கொடுத்து ஆச்சரியப்படுத்துவது போன்ற செயல்களைச் செய்யலாம். பண உதவி தேவைப்படுவோருக்கு பொருள் அல்லது பணம் கொடுத்து உதவலாம்.

4. ஆறுதல் தருவது: நோயுற்ற உறவுகளிடம், 'விரைவில் குணமாகி விடுவீர்கள்' என்கிற அன்பு வார்த்தைகளை அடிக்கடி சொல்லி ஆறுதல் தர வேண்டும். அதேபோல மனரீதியாக துன்பத்தில் இருக்கும் உறவுகளிடம் 'இதுவும் கடந்து போகும்' என்கிற உறுதி வார்த்தைகள் அவர்களுக்கு மனதில் வலிமை சேர்க்கும். என்ன நடந்தாலும் நீங்கள் அவர்களுக்காக இருக்கிறீர்கள் என்கிற தைரியத்தை தர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிக்கனமாக இருக்க சிறந்த 6 வழிகள்!
Florence Nightingale effect

5. உற்சாகம் தருதல்: மலர்ந்த முகத்துடன் அவர்களுடன் பேசி புன்னகையை வரவழைக்க வேண்டும். உற்சாகமான பேச்சுக்கள் மற்றும் செயல்களின் மூலம் அவர்கள் மனதில் ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் விதைக்க வேண்டும்.

6. பாராட்டுதல்: அன்புக்குரியவர்களின் கடந்த கால சாதனைகள் மற்றும் தனித்துவமான குணங்களை எடுத்துச் சொல்லி மனதார பாராட்ட வேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து கூடுதல் பலம் பெற்றது போல உணர்வார்கள். உடல் ரீதியாக, மன ரீதியாக அல்லது பண ரீதியாக துன்பப்படும் உறவுகளுக்கு இத்தகைய பாராட்டு வார்த்தைகள் மிகுந்த தன்னம்பிக்கையும் நேர்மறையான சக்தியையும் கொடுக்கும்.

7. உணர்ச்சிகளை அங்கீகரித்தல்: அவர்களது உணர்ச்சிகளை அங்கீகரிப்பதன் மூலம் உறவு பலப்படும். அன்புக்குரியவர்கள் உடனான உறவு செழித்து வளரும். அவர்கள் மனதில் தனியிடம் பிடிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com