

நாம் அனைவரும் புதிதாக சுட்ட, மென்மையான, சூடான சப்பாத்திகளை விரும்புகிறோம். ஆனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் ஒவ்வொரு வேளையும் அப்படியே சுட்ட சப்பாத்திகளை சாப்பிடுவது சாத்தியமல்ல. அப்படிப்பட்ட சமயங்களில் கேசரோல் உதவியாக இருந்து, சப்பாத்திகளை நீண்ட நேரம் சூடாகவும் மென்மையாகவும் வைத்திருக்கிறது.
ஆனால், கேசரோலில் சப்பாத்திகளை வைத்தால் அவற்றில் மேலேயும் அடியிலும் இருக்கும் சப்பாத்திகள் ஈரப்பதத்துடன் காணப்படும். இதனால் அவற்றை பரிமாறுவதும் சாப்பிடுவதும் சிரமமாகிறது. இது பல வீடுகளில் தினசரி நடைபெறும் ஒரு சிறிய பிரச்னைதான்.
மேல் மற்றும் கீழ் சப்பாத்திகள் ஏன் நனைந்து விடுகின்றன?
சமையல் நிபுணர்கள் கூறுவதாவது, புதிதாக சுட்ட சூடான நாம் அவற்றை உடனே கேசரோலில் வைத்து மூடியை மூடிவிட்டால், சப்பாத்திகளின் வெப்பத்தால் வரும் அந்த நீராவி வெளியேற வழியில்லாமல் உள்ளே தங்கி விடுகிறது. பின்னர் அது மீண்டும் சப்பாத்திகளின் மேல் தணிந்து, மேலேயும் கீழேயும் இருக்கும் சப்பாத்திகளை நனைத்துவிடுகிறது.
மேலும், மிகவும் சூடான சப்பாத்திகளை கேசரோலில் வைப்பது ‘கண்டென்சேஷன்’ (நீர்த்துளி உருவாகுதல்) அதிகரிக்கச் செய்கிறது. பல கேசரோல்கள் காற்று புகாத வகையில் இருப்பதால், உள்ளே ஈரப்பதம் அதிகரித்து சப்பாத்தியின் அமைப்பை பாதிக்கிறது.
நாம் பொதுவாக துணியில் சப்பாத்திகளை மடக்கி வைப்போம். ஆனால் அந்த துணி சரியாக பயன்படுத்தப் படவில்லை என்றால், அது ஈரத்தை உறிஞ்சாமல், அதையே உள்ளே தக்கவைத்து சப்பாத்திகளை மேலும் நனைத்துவிடும்.
அதை எப்படி தவிர்க்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
வழி 1: நீராவி வெளியேற அனுமதிக்கவும்
சுட்டவுடன் சப்பாத்தியை நேரடியாக கேசரோலில் போட்டு மூடி விடுவது தவறு. அதற்கு பதிலாக, சப்பாத்தியை ஒரு ஜல்லி அல்லது வயர் ஸ்டாண்டில் வைத்து சிறிது நேரம் ஆற விடவேண்டும். அதன் பிறகே கேசரோலில் வைக்க வேண்டும்.
வழி 2: பெரிய கேசரோல் பயன்படுத்துங்கள்
சிறிய கேசரோலில் சப்பாத்திகள் நெருக்கமாக அடுக்கப்படுகின்றன. இதனால் வெப்பமும் நீராவியும் உள்ளே அடைத்து, மேலேயும் கீழேயும் இருக்கும் சப்பாத்திகளை நனைத்து விடுகின்றன.
பெரிய கேசரோல் பயன்படுத்தினால், சப்பாத்திகளுக்கு இடைவெளி கிடைக்கும். இதனால் நீராவி சுற்றிலும் பரவி, மெதுவாக வெளியேறும். இதனால் சப்பாத்திகள் மென்மையாகவும் உலர்ச்சியாகவும் இருக்கும்.
வழி 3: பருத்தி துணி பயன்படுத்துங்கள்
கேசரோலின் அடியில் ஒரு பருத்தி துணி விரித்து, சப்பாத்திகளை வைத்து, மேலேயும் ஒரு துணி போட்டு மூடுங்கள். இது நீராவியை உறிஞ்சி, சப்பாத்திகளில் படியாமல் தடுக்கிறது.
பருத்தி துணி மிகவும் ஈரத்தை உறிஞ்சக்கூடியதும் காற்றோட்டம் தரக்கூடியதும் ஆகும். அதனால் அது அதிக ஈரப்பதத்தை தடுக்கிறது. இதனால் சப்பாத்திகள் உள்ளே மென்மையாகவும் வெளியே உலர்ச்சியாகவும் இருக்கும்.
வழி 4: தட்டு அல்லது ஸ்டாண்ட் பயன்படுத்துங்கள்
கேசரோலின் உள்ளே ஒரு சிறிய தட்டு அல்லது ஸ்டாண்ட் வைத்து, அதன் மேல் துணியில் மடக்கிய சப்பாத்திகளை வைக்கலாம். இதனால் சப்பாத்திகள் அடிப்பகுதியைத் தொடாது இருக்கும். இதன் மூலம் நீர்த்துளிகள் கேசரோலின் அடியில் சேரும்; சப்பாத்திகளில் அல்ல.
வழி 5: பட்டர் பேப்பர் அல்லது ஃபாயில் பயன்படுத்துங்கள்
சப்பாத்திகளை பட்டர் பேப்பர் அல்லது அலுமினியம் ஃபாயிலில் மடக்கி வைக்கலாம். கேசரோலின் அடியிலும் மேலேயும் இவற்றை விரித்து பயன்படுத்தினால், ஈரப்பதம் சப்பாத்திகளை பாதிக்காமல் தடுக்கலாம்.
இவ்வாறு, சிறிய கவனிப்புகள் மூலம் சப்பாத்திகளை நனைந்து போகாமல், நீண்ட நேரம் மென்மையாகவும் சுவையாகவும் வைத்திருக்க முடியும். சமையலில் சுவை மட்டுமல்ல, சிறு கவனமும் அவசியம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.