புத்தகம் படிக்க ஆசை இருந்தாலும் நிறைய பேர் அதற்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டுமே என்று புத்தகத்தைத் தொடுவதே இல்லை. புத்தகப் பிரியர்கள்தான் எத்தனை வேலைகள் இருந்தாலும் தினமும் புத்தக வாசிப்பு செய்கிறார்கள். வேக வாசிப்பு முறையையும். இன்னும் சில டெக்னிக்குகளையும் கற்றுக் கொண்டால் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 100 பக்க புத்தகத்தை படிக்கலாம். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. கண்களுக்கு பயிற்சி கொடுங்கள்: பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு வார்த்தையிலும் தனித்தனியாக தங்கள் கண்களைப் பதித்து வாசிக்கிறார்கள். அதனால் அவர்களால் ஒரு புத்தகத்தை முழுதாக படித்து முடிக்க நீண்ட நேரம் ஆகிறது. வேகமாக வாசிக்கப் பழக வேண்டும். ஒரே நேரத்தில் பல வார்த்தைகளை எடுத்துக்கொண்டு புத்தகத்தின் வரிகளில் சீராக வேகமாக நகர்ந்து செல்வதற்கு கண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
2. வாய் விட்டு வாசிக்க வேண்டாம்: சிலர் ஒவ்வொரு வார்த்தையையும் தன் காதுகளில் கேட்கும்படி வாய் விட்டு நிதானமாக வாசிப்பார்கள். இதனால்தான் படிக்கும் வேகம் குறைகிறது. அதனால் ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்து வாசிப்பதற்கு பதிலாக அந்த உரையின் அர்த்தத்தில் கவனம் செலுத்தி மௌனமாக வாசிக்கலாம்.
3. காட்சித் தன்மையை விரிவுபடுத்துவது: ஒரு பத்தியின் முக்கிய கருத்தை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அதனுடைய பிற வார்த்தைகளை தவிர்த்து விட்டு முக்கியமான விஷயங்களில் மட்டும் நமது பார்வையை விரிவுபடுத்த வேண்டும்.
4. கவனச் சிதறல்களை தடுப்பது: புத்தகம் வாசிக்கும்போது கவனச்சிதறல்கள் இல்லாமல் இருப்பது மிக அவசியம். மொபைலை சைலன்ட் மோடில் போடுவது, உங்களை யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்வது போன்றவை. வாசிக்கும் சூழல் அமைதியாக இருப்பது முக்கியம். இதனால் கவனம் குவிந்து வாசிப்பதில் வேகம் கூடும்.
5. புத்தகத்தை சுறுசுறுப்பாக வாசிப்பது: ஒரு நூலை வாசிப்பது என்பது அதில் உள்ள தகவல்களை ஒரு இயந்திரம் போல உள்வாங்கிக் கொள்வது அல்ல. ஆழ்ந்து ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது அதனுடன் நமது கவனம் ஒன்றி விடும். முக்கியமான பாயிண்டுகளை சுருக்கமாக தனக்குத்தானே கூறுவது, கேள்விகள் கேட்பது, அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை பற்றி ஏற்கெனவே நமக்கு தெரிந்துள்ள அறிவை வைத்து அந்த புத்தகத்தை வாசிப்பது போன்றவை வேகத்தை கூட்டும்.
6. வாசிப்புக் கருவிகளை பயன்படுத்தவும்: தற்போதுள்ள தொழில்நுட்பம் வாசிப்பை விரைவு படுத்துவதற்கான சக்தி வாய்ந்த கருவியாக இருக்க்கிறது. புத்தகமாக வாசிப்பதை விட, ஆடியோ புத்தகம் கேட்பது, அந்த புத்தகத்திலிருந்து முக்கியமான தகவல்கள் அடங்கிய விஷயங்கள் பற்றிக் கேட்பது போன்றவற்றை செய்யலாம். மேலும் சிறப்பு வேக வாசிப்பு பயன்பாடுகளை பயன்படுத்தலாம்.
7. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள்: எல்லா திறமைகளையும் போலவே வாசிப்பை வேகப்படுத்துவதற்கான பயிற்சியும் அதற்காக நேரம் ஒதுக்குவதும் மிகவும் முக்கியம். மெல்ல மெல்ல வாசிப்பில் வேகம் கூடிவிடும். வேக வாசிப்பு நுட்பங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் ஒருவரால் ஒரு மணி நேரத்தில் 100 பக்கம் உள்ள புத்தகத்தை வாசித்து விட முடியும்.