குழந்தைகளிடம் பிடிவாத குணம் உருவாவதற்கு முழுமுதற் காரணமும் பெற்றோரையே சாரும். செல்லம் கொடுக்க வேண்டிய நேரத்தில் செல்லம் கொடுத்து, கண்டிப்பு காட்ட வேண்டிய நேரத்தில் கண்டிப்பு காட்டினால் குழந்தைகளிடம் பிடிவாத குணம் வளராது. பிள்ளைகள் ஏதேனும் ஒரு பொருளைக் கேட்டு அடம் பிடித்தால் உடனே வாங்கிக் கொடுக்காதீர்கள். அவர்களை ஏதேனும் ஒரு செயலில் ஈடுபடுத்தி அதை திறம்பட முடித்தால் அதற்குப் பரிசாக அந்தப் பொருளை அளியுங்கள். அப்படிச் சின்னச் சின்ன பொருட்களையும் அவர்களுடைய செயலுக்கு பரிசாகப் பெறும் குழந்தைகள் உழைப்பின் மகத்துவத்தை அறிவார்கள். அத்துடன் அவர்களுக்கு அது ஒருவிதமான ஊக்கத்தையும் அளித்து, எதுவுமே நமக்குக் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும்.
பிடிவாதம் என்பது பொதுவாக குழந்தைகளிடம் காணப்படும் ஒரு குணம். அது நம்முடைய வீட்டின் சூழலில் இருந்துதான் உருவாகிறது. பிடிவாதத்தை போக்குவதற்கு நாம் அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. பிடிவாதம் பிடித்தால் நினைத்ததை சாதிக்கலாம் என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் பதிய விடக்கூடாது. அதற்கு பிடிவாதம் பிடிக்கும் சமயங்களில் அவர்கள் கேட்கும் விஷயங்களை செய்ய சம்மதிக்கக் கூடாது. கொஞ்ச நேரம் பிடிவாதம் பிடித்து அழுதோ, கத்தியோ, முரண்டு பிடித்து இது வேலைக்கு ஆகாது என்று நிறுத்தி விடுவார்கள். பிடிவாதம் பிடிப்பதால் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து கொள்வார்கள்.
முக்கியமாக, பிள்ளைகள் பிடிவாதம் பிடிக்கும் சமயம் அவர்களை தண்டிக்கக் கூடாது. தண்டிப்பதால் பிடிவாதம் அதிகமாகுமே தவிர குறையாது. அதற்கு பதில் அழுது முடித்த பின் அவர்களுக்குப் புரியும் விதத்தில் எடுத்துச் சொல்லி தெளிவுபடுத்தினால் பிடிவாதம் பிடிக்கும் குணம் வளராது. சாம, தான, பேத, தண்டம் என்பதில் தண்டத்தை விட்டு மீதி மூன்று வகைகளில் அன்பையும் சேர்த்து குழந்தைகளைக் கையாளலாம். இக்கால குழந்தைகளை விட்டுப்பிடித்துதான் வளர்க்க வேண்டும். கிடையாது, முடியாது, மாட்டேன் என்று எதிர்மறையாக பேசினால் வேலைக்கு ஆகாது. அதற்கு பதில் அவர்களிடம் சிறு சிறு நீதி போதனைக் கதைகளை எடுத்துச் சொல்லி அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் பிடிவாதம் தளரும்.
குழந்தைகள் நம் பேச்சை கேட்கவில்லை என்றால் வேறு வழி தெரியாமல் அடிக்கிறோம். அடித்து, பயமுறுத்தி நாம் சொல்வதைக் கேட்க வைப்பது எளிது என்று எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் அடிப்பதாலும் பயமுறுத்துவதாலும் ஒரு பயனும் இல்லை. அன்பு என்னும் ஆயுதத்தை எடுத்தாலொழிய குழந்தைகளின் பிடிவாத குணத்தை மாற்ற இயலாது. சில பெற்றோர்கள், ‘எங்களுக்கு என்ன வேண்டுதலா? அவர்களை அடிக்க நாங்களும் விரும்புவதில்லை. அவர்களின் குறும்புத்தனத்தையும் பிடிவாதத்தையும் போக்கும் வழி தெரியாததால்தான் அடிக்கிறோம். அடித்த பிறகு அந்த குற்ற உணர்வு எங்களையும் வெகுவாக பாதிக்கிறது. மனதளவில் வருந்துகிறோம்’ என்கிறார்கள். அடித்தால்தான் ஒழுங்கு வரும் என்று தவறாக முடிவு எடுக்கிறார்கள்.
தினமும் குழந்தைகளுக்கு நீதிக் கதைகளை சொல்லி வரலாம். தேவையற்ற பிடிவாதம் பிடித்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை சிறு சிறு கதைகள் மூலம் தெளிவாக்கலாம். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்ற அக்கறை மட்டும் இருந்தால் போதாது. பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகளை அரவணைத்து கண்டிப்பும் அன்பும் கலந்து ஊட்டி நல்ல பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். சில குழந்தைகள் எவ்வளவு பொறுமையாக எடுத்துச் சொன்னாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல் பிடிவாதமாக இருப்பார்கள்.
பிடிவாதம் பிடிக்கும் சமயங்களில் அவர்களை சமாளிப்பதற்காக சரி என்று ஒப்புக்கொள்வதற்கு பதில், பிள்ளைகள் கேட்பதை ஏன் செய்ய முடியாது அல்லது இப்பொழுது முடியாது என்று தெளிவாக திட்டவட்டமாக எடுத்துக் கூற வேண்டும். அவர்களின் பிடிவாதத்தைக் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும். அதற்கு வீட்டில் உள்ள அனைவரும் ஒருமித்த கருத்தில் இருக்க வேண்டும். ஒருவர் கண்டிக்கும்பொழுது மற்றொருவர் சப்போர்ட் செய்யக்கூடாது. இதனால் யாரிடம் கேட்டால் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு இன்னும் பிடிவாதமாக சாதிக்க நினைப்பார்கள். சில பெற்றோர்கள் அவர்களின் பிடிவாதம் தாங்காமல் அடித்து விட்டு பின்பு அவர்கள் கேட்பதை வாங்கித் தருவார்கள். இதுவும் தவறான அணுகுமுறை.
இப்படிப் பிடிவாதம் பிடித்து நினைத்ததை சாதித்து கொள்ளும் குழந்தைகள் எதிர்காலத்தில் அவர்கள் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை என்றால் சின்ன ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ள இயலாமல் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே, சிறுவயதிலிருந்து குழந்தைகளின் பிடிவாதத்தை வளர விடாமல் இருக்க அவர்கள் பிடிவாதம் பிடிக்கும்பொழுது கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவர்களின் எண்ணத்தை திசை திருப்பவும் முயற்சிக்க வேண்டும்.