சொத்து பத்திரங்களை பத்திரமாகப் பாதுகாப்பது எப்படி?

சொத்து பத்திரம்
சொத்து பத்திரம்
Published on

வீடு தொடர்பான ஆவணங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லதுதான். ஆனால், அவற்றை வைக்கும்போது லாக்கரில் பல பொருட்களையும் சேர்த்து வைக்க வேண்டி இருந்தால் வீட்டு ஆவணங்களை மடித்து வைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக வைக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு சிலர் ஆவணங்களை லாமினேட் செய்து விடுகிறார்கள். இதனால் ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால், ஏதாவது சட்ட சிக்கல் வந்தாலோ, வீட்டை அடமானம் வைத்து வங்கி கடன் பெற வேண்டி இருந்தாலோ சிக்கல்கள் ஏற்படலாம். அதாவது, லாமினேட் செய்து பல வருடங்களுக்குப் பிறகு எடுத்துப் பார்த்தால் சில நேரங்களில் பத்திரங்கள் கவருடன் ஒட்டிக்கொண்டு எழுத்துக்கள் அழிய வாய்ப்புள்ளது. எனவே, பிளாஸ்டிக் கவர்களில் போட்டு பத்திரங்களை தனியாக பைல்களில் வைத்து பராமரிப்பதே சிறந்தது.

பத்திரங்களை பத்திரமாக ஈமெயில் ஐடி (id)யில் ஸ்கேன் செய்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வீட்டுப் பத்திரங்களை மட்டுமல்ல, காலேஜ் சர்டிபிகேட், ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி, ஸ்மார்ட் கார்டு, பர்த் சர்டிபிகேட், ஆதார் கார்டு போன்ற அனைத்து முக்கியமான ஆவணங்களையும் மெயிலில் எடுத்து வைத்துக் கொண்டால் பாதுகாப்பாக இருக்கும்.

கவனக்குறைவாக ஜெராக்ஸ் கடைக்கு எடுத்துச் செல்லும்பொழுது ஒரிஜினல் பத்திரத்தை திரும்பி வாங்க மறந்து விட்டால் போச்சு! அதேபோல் பத்திர எழுத்து அலுவலகங்களிலும் சிலர் தவற விடுகிறார்கள். இம்மாதிரி முக்கியமான ஆவணங்களை கவனக்குறைவினால் தவற விடாது  பத்திரப்படுத்துவது மிகவும் அவசியம்.

சிலர் பீரோவிலோ அல்லது லாக்கரிலோ ஆவணங்களை பத்திரப்படுத்தும் போது அவற்றின் மீது வேறு பல பொருட்களையும் வைத்து அடுக்கி விடுவார்கள். இதன் காரணமாக ஆவணங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு விட வாய்ப்பு உண்டு. அதுவும் வீட்டின் தாய் பத்திரம் ரொம்பவும் பழைமையானதாக இருந்தால் பேப்பர்கள் உதிர்ந்து  மோசமான நிலைக்கு தள்ளப்படும். எனவே, இவற்றை தனியாக பத்திரப்படுத்த வேண்டியது அவசியம்.

வீட்டு முக்கியமான ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. காலப்போக்கில் ஆவணங்களில் உள்ள எழுத்துக்கள் மங்கி விட்டாலோ அல்லது செல்லரித்துவிட்டாலோ இந்த ஸ்கேன் செய்த பிரதிகள் உதவும். ஸ்கேன் செய்த ஆவணங்களை நாம் நம்பும் முக்கியமான குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கலாம். மற்றொன்றை நம் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
அல்சரை குணப்படுத்தும் இயற்கை வழிமுறை சிகிச்சைகள்!
சொத்து பத்திரம்

முக்கியமான ஆவணங்களை நாம் அடிக்கடி வெளியே எடுப்பதில்லை. அவற்றை கையாளும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் பீரோவுக்குள் வைத்து பத்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதனுடன் ஒன்றிரண்டு பாச்சா உருண்டைகளையும் போட்டு வைக்கக்கூடாது. நாளடைவில் அவை பத்திரங்களில் படிந்து சேதப்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

ஒருவேளை நம்முடைய முக்கியமான சொத்து பத்திரங்களை லாக்கரில் வைத்தால் அது தொடர்பான விஷயங்களை (எந்த லாக்கர், லாக்கர் எண் போன்ற விவரங்கள்) நெருங்கிய உறவினருக்கு தெரியப்படுத்தி விடுவது நல்லது. இது அவசர ஆபத்திற்கு உதவும்.

முக்கியமான ஆவணங்களை நன்கு பராமரிக்க வேண்டும். அவற்றை எங்கு வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றிய கவனமும் தேவை. இல்லையெனில் தேவைப்படும் சமயத்தில் எங்கு வைத்தோம் என்று பதற்றத்துடன் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com