‘உள்ளத்திலே அன்பு இருந்தால் மட்டும் போதாது. அது செயலில் பயன்படவும் வேண்டும்’ என்கிறார் பிரிஸ்வெல். அன்பும் கருணையும் ஒருவருக்கு வாழ்வில் மகிழ்ச்சியை ஈட்டித் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அன்னியருக்காக கதவை திறந்து வைத்தல், அண்டை வீட்டாருடன் ஒற்றுமையாக இருத்தல், தம்பி தங்கைகளுக்காக மூத்தோர் இளையோருக்கு துணிகளை துவைதோ, பெட்டி போட்டோ கொடுத்தல் ஆகிய செயல்களைச் செய்தோரின் மகிழ்ச்சி அதிகரிக்கிறது. அத்தகைய அன்பான உதவிகளை அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
போட்டிகளும் போராட்டங்களும் நிறைந்த இந்த அவசர உலகிலே அன்பும் கருணையும் மகிழ்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகின்றன. பெரியோர் மட்டுமின்றி தருவோருக்கும் அவை மகிழ்ச்சியை அள்ளித் தருகின்றன. தெரிந்தவரோ தெரியாதவரோ யாராக இருப்பினும் அவரிடம் காட்டும் அன்பு, கருணை நமக்கு ஆனந்தமே. அது தவிர எதிர்பாராத விதத்தில், நேரத்தில் நமக்கு அவர்களில் ஒரு சிலர் உதவியும் புரியலாம்.
உறவுகளை வலுப்படுத்தும் திறன் வாய்ந்தவை அன்பும், கருணையும். மேலும், ஒருவரது மனச்சோர்வையும் அவை போக்குகின்றன. நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்துகின்றன. சிறப்பான மனநலத்தை பேணுதல் ஒருவரது அன்பிற்கும், அவரது உடல் நலம், மனநலம், மகிழ்ச்சி ஆகியவற்றிற்கும் நல்ல பொருத்தம் உண்டு.
அன்பும் கருணையும் தானாக வருபவை. பிறர் நம்மிடம் காட்டும் அன்பும் கருணையும் நாம் மற்றவரிடம் காட்டத் தூண்டுகோலாக இருக்கும். மேலும், அன்பும் கருணையும் காட்டுபவர்கள், மகிழ்வோடு உயர்ந்த வாழ்க்கை வாழ்வதை காணும் பிறரும் தாமும் அத்தகைய வாழ்க்கை வாழும் பொருட்டு பிறரிடம் அன்பும் கருணையும் காட்டக்கூடும்.
நாளொன்றிற்கு சில அன்பு செயல்கள் புரிந்து, நாள்தோறும் இயன்ற அளவு அதனை அதிகரித்து வந்தால் நாம் பெறும் மகிழ்ச்சிக்கு எல்லையேது.
குறிப்பாக உயிர்களிடத்து காட்டும் அன்பு நம்மை வேறுபடுத்தி காட்டுவதுண்டு. அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவவிடாதீர்கள். அதை பயன்படுத்துங்கள்.
எங்கள் அம்மா உயிர்களிடத்தில் மிகவும் அன்பாக இருப்பார். செவ்வாய், வெள்ளி அன்று பசுவை குளிக்க வைத்து, பொட்டிட்டு, சாம்பிராணி காட்டி, அதற்கு உணவு அளித்துவிட்டு, நாய்க்கும் உணவு வைத்துவிட்டு, பிறகுதான் எங்க அம்மா அருந்துவார்.
அம்மா இறப்பதற்கு முதல் நாளில் இருந்து பசுக்களும், நாயும் யார் வைத்தாலும் உணவருந்தவில்லை. இறந்த பிறகும் உணவருந்த வில்லை. மூன்று நாட்கள் விரதம் இருந்தன. அவற்றின் கண்களில் தாரை தரையாக கண்ணீர் வடிந்தது. அதை வந்திருந்த அனைவரும் கண்ணுற்று ஆச்சரியமடைந்தனர். எங்க அம்மாவை வைத்திருந்த இடத்தில் நாய் மூன்று நாட்கள் மட்டிப்போட்டு தவம் இருப்பதுபோல் கண்களில் தாரை தாரையாக நீரை உகுத்த வண்ணம் படுத்திருந்தது. நான்காவது நாள் என் அப்பா அவற்றிடம் அன்பாகப் பேசி, வருடிக் கொடுத்து உணவை வைத்த பிறகுதான் அவை தண்ணீர் குடித்து சாப்பிட்டன. அன்பின் மிகுதியால் அவை பழக்க வழக்கமே மாறி இருந்ததை அப்பொழுதுதான் கவனித்தேன்.
இந்த நிகழ்வை வலியுறுத்தும் வகையில் இதோ அன்பினால் எல்லாம் நடக்கும் என்பதற்கான ஒரு குட்டிக் கதை.
செல்வந்தர் ஒருவர் விலை உயர்ந்த குதிரை ஒன்றை வாங்கினார். அழகாக இருந்த அதன் மீது சவாரி செய்ய விரும்பினார். ஒவ்வொரு முறை அவர் அந்த குதிரையில் அமரும்போதும் அது மேலும், கீழும் துள்ளிப் பாய்ந்து அவரை கீழே தள்ளியது. இப்படியே பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. அவரும் பலவித முயற்சிகள் செய்துபார்த்தும் ஏதும் பயன் தரவில்லை. 'ஏராளமான பொருள் கொட்டி வாங்கிய அழகிய குதிரை இது. இதில் சவாரி செய்ய முடியவில்லையே' என்று வருந்தினார் அவர்.
அந்த ஊருக்கு ஞானி ஒருவர் வந்தார். அவரைச் சந்தித்த செல்வந்தர் தன் சிக்கலை எடுத்துச்சொன்னார். எல்லாவற்றையும் கேட்ட ஞானி, “நீர் குதிரையுடன் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்? அதற்கு தீனி வைத்துக் காட்டுகிறீரா? அதன் உடலை தேய்த்து குளிப்பாட்டுகிறீரா?” என்று கேட்டார்.
"அவற்றுக்கு தீனி வைப்பதும், குளிப்பாட்டுவதும் என் வேலையாட்களின் வேலை. சவாரி செய்ய மட்டும்தான் நான் அதை வெளியே அழைத்து வருகிறேன். எதற்காகக் கேட்கிறீர்கள்?'' என்று கேட்டார் செல்வந்தர்.
"நாளை முதல் குதிரையுடன் நீர் அதிக நேரத்தைச் செலவிடும். உன் கைகளாலேயே அதற்கு உணவுவையும். தண்ணீர் காட்டும். அதன் உடலைத் தேய்த்து குளிப்பாட்டும். உன் அன்பை அதனிடம் காட்டும். அன்பினால் எல்லாம் நடக்கும்'' என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார் ஞானி.
அவர் சொன்னபடியே செய்தார் செல்வந்தர். அவர் அன்பில் திளைத்தது குதிரை. அதன் பிறகு அந்த குதிரை அவர் சவாரி செய்யும்போது எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அவரை மகிழ்ச்சியுடன் சுமந்துசென்றது.
அன்பினால் எல்லாம் நடக்கும்தானே?