உணவை வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி?

உணவை வீணாக்காமல் பயன்படுத்துவது எப்படி?
Published on

ளவாக சமைப்பது என்பது ஒரு கலை. எவ்வளவுதான் பார்த்து பார்த்து சமைத்தாலும் சில சமயங்களில் உணவு மீதமாகி வீணாகி போவதுண்டு. எதையுமே வீணாக்கக் கூடாது. உணவு வீணாவதை நாம் அனைவருமே தடுக்க முடியும். எந்தவொரு மீதமான உணவையும் வீணாக்காமல் அதை நமது கற்பனைக்கேற்ற புதுமையான உணவாக மாற்ற முடியும். இதற்குப் பல வழிமுறைகள் உள்ளன.

சாதம் மீதமானால் ஃப்ரைட் ரைஸ், தோசை செய்யலாம். மீதமான சப்பாத்தியில் பக்கோடா, நூடுல்ஸ், ரோல்ஸ் என வெரைட்டியாக செய்து குடும்பத்தினரை அசத்தலாம். மீதமான பருப்புகளை பரோட்டா, தோசை, சப்பாத்தி செய்ய பயன்படுத்தலாம். பொரியல் மீதமாகிவிட்டால் ஸ்பிரிங் ரோல்ஸ், கொழுக்கட்டையாக அதை மாற்றலாம். அதிகமான சாம்பார், ரசத்தில் வடை செய்து போட்டு டிபனாகக் கொடுக்கலாம். மீதமான பிரெட்டை காய வைத்து பிரெட் க்ரம்ப்ஸ் செய்து வைத்துக்கொண்டால் கட்லெட், கபாப் போன்றவை செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். 

மேலும், அதிகப்படியாக பழுத்த பழங்கள், காய்கறிகளை வைத்து ஜாம், ஜூஸ் வகைகள், ஸ்மூதி, ஊறுகாய் என செய்யலாம். காலிபிளவர், முள்ளங்கி போன்ற காய்கறிகளின் சத்து மிகுந்த தண்டு, இலைகள், தோல்களைப் பயன்படுத்தி சூப், துவையல், கூட்டு போன்றவை செய்யலாம்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு, தர்பூசணி போன்றவற்றின் தோலை எறியாமல் எண்ணெயில் பொரித்து சிப்ஸாக மாற்றி சாப்பிடலாம். பீர்க்கங்காய், சௌசௌ இவற்றின் தோல், புடலை, பாகற்காய் போன்றவற்றின் விதைகளில் துவையல் செய்து பயன்படுத்தலாம்.

வெங்காய சருகு, அழுகிய பழங்கள், காய்கறிகளைக் கூட குப்பையில் எறியாமல் இயற்கை உரமாக மாற்றி நம் வீட்டுத் தோட்டத்துக்குப் பயன் படுத்திக்கொள்ளலாம். மறுபயன்பாடு செய்யவோ, மறுசுழற்சி செய்யவோ முடியாத மக்கும் தன்மையுடைய எந்தப் பொருளும் உரம் தயாரிக்கப் பயன்படுகிறது. அதனால் எதையும் வீணாக எறிய வேண்டாம்.

வேஸ்ட் இல்லாத சமையல் முறை சுற்றுச்சூழல் ரீதியாக நல்லது மட்டுமல்ல, செலவு குறைந்ததாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com