நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் பழையதாகிவிட்டால் அதை தெருவில் பழைய பொருட்கள் வாங்குபவர்களிடம் விற்பது வழக்கம். இன்னும் சிலவற்றை அப்படியே கொடுத்து விடுவோம். அதற்கு பதில் மாற்றி யோசித்து, அதிலும் சில மினமலிசத்தை கடைபிடிக்கலாம். இதனால் அது நல்ல வெல்த்தி வேஸ்ட்டாக ஆகும். அது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
ஃப்ரிட்ஜ்: ஃபிரிட்ஜ் பழையதாகி விட்டால் அதை இரண்டாகப் பிரித்து குழிவான உள்பகுதியை குளியல் அறையில் வைத்து, 'டப்'பாகப் பயன்படுத்தலாம். இதனால் குளிக்க அடம் பிடிக்கும் குழந்தைகள் பள்ளி செல்லும்போது குதூகலமாகக் குளிக்கச் செல்வார்கள். நமக்கும் அவர்களை பள்ளிக்கு கிளப்பி அனுப்புவது சுலபமாக முடியும். மேலும், இதை பயன்படுத்திவிட்டு நேராக நிமிர்த்து வைத்து விடலாம். 'டப்'பை நன்றாக அன்றன்று துடைத்தும் வைத்து விடலாம். டப் சுத்தமாக இருக்கும். இதை மற்றவர்கள் உபயோகித்தாலும் குளிர் காலத்தில் தொற்றும் ஏற்படாது. எல்லாவற்றுக்கும் மேலாக, 'டப்'பில் குளித்த திருப்தி குழந்தைகளுக்குக் கிடைக்கும். அதன் அடுத்த பகுதியை மண், எரு நிரப்பி புதினா, கொத்தமல்லி, கடுகு, வெந்தயம் தெளித்து செடி வளர்க்கப் பயன்படுத்தலாம்.
சூட்கேஸ்: இதுவும் அப்படித்தான். ரெண்டாகப் பிரித்து அவற்றில் சிறு தானியங்கள், வற்றல், வடாம் போன்றவற்றை காய வைக்கப் பயன்படுத்தலாம். இதனால் மழைக்காலத்தில் வைப்பதும், எடுப்பதும் எளிது. தரையில் துணி விரித்து காயப்போட்டு எடுப்பதை விட இதை அப்படியே தூக்கி வைத்து எடுப்பது இன்னும் சுலபமாக வேலை முடியும். நாம் சாப்பிடச் செல்லும் நேரத்தில் அதன் மீது துணியை சுற்றி மூடி வைத்துவிட்டுப் போகலாம். இதனால் பறவைகள் அதில் அமரும் அச்சம் இருக்காது. இதன் அடுத்த பகுதியிலும் செடிகள் வளர்க்கப் பயன்படுத்தலாம். மாடியில் ஒரு ஓரத்தில் வைத்தாலே, அன்றைக்கு வேண்டிய சிறு சிறு கீரைகளை பறித்துக் கொள்ளலாம். நமக்கும் நல்ல பொழுதுபோக்கு அம்சமாக அமையும். செடி வளர்க்கத் தேவையான இடப்பற்றாக் குறையை அழகாக இதனால் சமன் செய்ய முடியும்.
பவுடர் டின்: பெரிய பெரிய பவுடர் டின்களை அப்படியே தூக்கி போடாமல், அதைப் பிரித்து முறமாகத் தயார் செய்து வைத்தால், குப்பை எடுக்க வசதியாக இருக்கும். இதை குப்பை முறமாகவும் பயன்படுத்தலாம். மேலும், பவுடர் டின்களின் அதன் வாய் பகுதியை எடுத்துவிட்டு, அதை பென் ஸ்டாண்டாக, ப்ரஷ் ஸ்டாண்டாக, ஏன் உண்டியலாகக் கூட பயன்படுத்தலாம். இதுபோல் ஒவ்வொன்றையும் மாற்றி யோசித்து பயன்படுத்தினால் தேவையற்ற குப்பைகள் சேர்ந்து மாசு அதிகரிப்பதை தடுக்கலாம். நமக்கும் நல்ல உபயோகமாக இருக்கும்.