ஆண்கள், பெண்கள் என தற்போது இருவரும் திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்குப் பின்பும் வேலைக்குச் செல்லும் கட்டாயமான சூழ்நிலைகளில் உள்ளனர். ஆதலால், குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் மகிழ்ச்சியை பேண வேண்டியது மிகவும் அவசியமாகிறது. பணியிடத்தில் மகிழ்ச்சியாக வேலை செய்வதற்கான மந்திரங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
நெகிழ்வுத்தன்மை மற்றும் ஏற்கும் திறன்: பணியிடங்களில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது நீண்ட காலத் தேவையாகும். அதில் ஏற்படும் மாற்றங்களை கிடைத்த வாய்ப்பாகக் கருதி நம் வளர்ச்சிக்கான மாற்றமாக நினைத்து அச்சம் கொள்ளாமல் ஏற்கும் நெகிழ்வுத் தன்மை உடைய திறனுடையவர்களாக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். புதிய யோசனைகளும் நேர்மறையான எண்ணங்களும் பணியிடத்தில் கட்டுப்பாடும் நம் கைகளில் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் பணியிடத்தில் மகிழ்ச்சியாக வேலையைத் தொடர முடியும்.
நன்றி: ஒரு நல்ல புராஜெக்ட்டில் உங்களுக்குக் கிடைத்த வேலையை நீங்கள் திறம்பட செய்வதனால் உடன் பணிபுரிபவர்கள் பாராட்டும்போது அதை நீங்கள் நன்றியோடு ஏற்பது ஒரு நேர்மறையான மனநிலையை ஏற்படுத்தும். இதனால் உங்கள் மனநிலை மன அழுத்தத்தில் இருந்து மனநிறைவுக்கு மாறும்.
எல்லைகளை வகுத்து, அதை செயல்படுத்த வேண்டும்: அதிகப்படியான பணி சுமையால் பாதிக்கப்படாமல் இருக்க தெளிவான எல்லைகளை வகுத்துக் கொண்டு பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, உங்களுக்கென்று தெளிவான எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள். பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டுக்கும் இது அவசியம். எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் இமெயில்களை பார்ப்பதில்லை. சிறிது இடைவெளி விட்டு பணியை தொடர்வது என செய்தாலே புத்துணர்ச்சி கிடைத்து மகிழ்ச்சியாக வேலை செய்ய முடியும்.
தொடர் கற்றல்: வாழ்நாள் முழுவதும் நீங்கள் கற்றுக்கொண்டே இருந்தால்தான் பணியிடத்தில் மகிழ்ந்திருக்கலாம். எனவே, தொடர்ந்து வாய்ப்புக்களை பயன்படுத்தி புதிய திறன்களை வளர்த்துக்கொண்டு அறிவை தேடிப் பெறுங்கள்.
பணியிடத்தில் அர்த்தமுள்ள உறவுகள்: பணியிடத்தில் நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் குழுவினருக்கு ஆதரவு கொடுங்கள். ஒரு நல்ல ஒற்றுமையான பணிச்சூழலை உருவாக்குங்கள். நீங்கள் யாருடன் சேர்ந்து பணிபுரிகிறீர்களோ அவர்களுடன் நல்ல உறவைப் பேணி வளர்த்தால், உங்களின் பணி மிகவும் மகிழ்ச்சிகரமானதாக மாறும். மன அழுத்தமும் குறையும்.
நீங்கள் எதை கட்டுப்படுத்த முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்: எந்த பணியிடத்திலும், சில விஷயங்கள் உங்களின் கட்டுப்பாட்டை மீறியிருக்கும். ஆதலால், உங்கள் ஆற்றலால் எதில் சிறப்பாக செயல்பட முடியும் என்பதைத் தெரிந்து கொண்டு நேரத்தை செலவழிக்க வேண்டும். உங்களின் முயற்சிகளை, சவால்களை நோக்கிச் செலுத்தினால், உங்களால் எதையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும். நீங்கள் அதிக அதிகாரம் பெற்றவராக மகிழ்ச்சியாக உணர முடியும்.
சிறிய வெற்றிகளைக் கொண்டாடுங்கள்: பெரிய செயல்களில் கிடைத்த வெற்றியைத்தான் கொண்டாட வேண்டும் என்பதில்லை. கொண்டாட்டங்களுக்கு சிறிய வெற்றியே போதுமானது. சிறிய வெற்றிகளுக்கு அங்கீகாரம் கொடுத்து உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
சரியான நேரத்தில் வேலையை முடிப்பது அல்லது புதிய விஷயங்களைக் கற்பது அல்லது உங்கள் உடன் பணிபுரிபவருக்கு உதவுவது அல்லது இந்தத் தருணங்களை கொண்டாடுவது உங்களின் மகிழ்ச்சியை அதிகரித்து உற்சாகப்படுத்தும்.