மனிதப் பிறப்பு என்பது அரிதாகக் கிடைத்த வரம். அந்த வரத்தைப் பயன்படுத்தி வளமான வாழ்வு காண்பது நம் நல்ல எண்ணங்களால் மட்டுமே சாத்தியம். நற்குணங்கள், துர்குணங்கள் அடிப்படையிலேயே ஒருவர் நல்லவராகவும் தீயவராகவும் அறியப்படுகிறார். நமது ஆத்மா பொதுவாக தூய்மையானதே. அதை சில தேவையற்ற துர்குணங்கள் கொண்டு இருளாக்குவது நாம்தான். தூய ஆத்மாவே வாழ்தலில் சிறப்பு. நம் ஆத்மாவை மறைக்கும் கீழ்காணும் இந்த 10 துர்குணங்களை விலக்கி விட்டால் வாழ்வே சொர்க்கமாகும். அந்த 10 துர்குணங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. காமம்: தனம், தானியம், தாரம், தன் பிள்ளைகள், அவர்கள் வாரிசுகள் மீதுள்ள அளவிலா ஆசை, பாசம் என்றாலும் பற்றற்ற மிதமான பாசமே சிறந்தது.
2. குரோதம்: மற்றவருக்கு தீமை விளைவிக்க முற்படுவது. அறியாமல் கூட நம் போன்ற சக உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணத்தைத் தவிர்க்க வேண்டும்.
3. லோபம்: மற்றவருக்கு ஈயாதவனின் இயல்பு. எல்லா செல்வங்களும் சூழ இருந்தாலும் உதவி எனத் தேடி வருபவர்களை இல்லை என உதறுவது.
4. யோகம்: மனைவி, மக்கள் மீது அதிக பாசம் வைத்து அதிக செல்வம் தேடும் முயற்சியில் ஈடுபடுவது. ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.’ மூன்று வேளை உணவு, இருக்க இடம், உடுக்கத் துணி ஆகியவை போதுமான அளவு இருந்தாலும் இன்னும் இன்னும் என அலைந்து பொருள் சேர்ப்பது தீமையைத் தரும்.
5. மதம்: மற்றவர்களை துச்சமாக நினைத்து கர்வத்துடன் செயல்படுவது. நான் எனும் ஈகோவை விலக்கினால் நிம்மதி நிச்சயம்.
6. மாச்சர்யம்: மற்றவர் நன்கு வாழ்வதைக் கண்டு பொறாமைப்படுதல். இன்றைய நிலையில் இந்தத் தவறை பெரும்பாலோர் செய்கிறோம். ஆனால், இது பெரும் தவறு. ஒப்பீடு காண்பது நன்மை தராது.
7. டம்பம்: நான்கு பேர் மெச்சுவதற்காகவே நல்ல காரியம் செய்தல். வறட்டு கௌரவம் கொண்டு அடுத்தவர் புகழ வேண்டும் என்பதற்காகவே போலியாக விளம்பரம் வேண்டி நல்ல காரியம் செய்வது மனசாட்சிக்கு விரோதமானது.
8. தர்ப்பம்: செல்வம், செல்வாக்கு இவற்றில் தன்னை மிஞ்சியவர் யாருமில்லை என்று கர்வம் கொள்ளல். தலைக்கனம் மிகுந்த ஆபத்தானது. நம்மைத் தனிமையில் தள்ளி வேதனைப்படுத்தி விடும் கர்வம் விட்டொழித்து அடக்கத்துடன் வாழ்வது நல்லது.
9. ஈர்ஷை: தனக்கு நேர்ந்த கஷ்டமும் துக்கமும் பிறருக்கும் ஏற்பட வேண்டும் என நினைப்பது. ‘நான் இவ்வளவு கஷ்டப்படறேன். அவன் மட்டும் நல்லா இருக்கணுமா?’ எனும் எண்ணமே நம்மை துன்பத்தில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் எனும் எண்ணமே நலம் தரும்.
10. அசூயை: தீமை செய்பவருக்கு பதிலுக்கு தீமை செய்ய விரும்புவது. ஒருவர் சாக்கடையில் விழுந்தால் நாமும் அதே சாக்கடையில் தெரிந்து விழுவோமா? அப்படித்தான் இதுவும். தீமை செய்தவர் நாணும்படி விட்டு விலகுவதே மேன்மக்களின் செயல். நாமும் மேன்மக்களாக மாற முயற்சிப்போம்.
மேற்சொன்ன இந்த பத்து குணங்களும் நீரை மூடியுள்ள பாசி போல நமது ஆத்மாவை மறைக்கின்றன. இனி, இவற்றை விலக்கி வாழும்போதே பூமியில் சொர்க்கம் காண்போம்.