மனித சமுதாயத்தை ஆட்டு மந்தை கூட்டம் என்று சொல்வதுண்டு. ஏனென்று எதையும் சிந்தித்துப் பார்க்காமல் பலர் ஒரு விஷயத்தை செய்கிறார்கள் என்ற காரணத்தால் அதை அப்படியே கடைப்பிடிப்பது பலரின் வழக்கம். ஆனால், இது பெரும்பான்மையான சமயங்களில் எந்தவிதமான முன்னேற்றமும் தராது. வாழ்க்கைத் தரமும் உயராது. அவர்கள் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ற மனநிலை முதலில் மாற வேண்டும். ஒரு நடிகரின் ரசிகரோ, அரசியல் தொண்டனோ தலைவர் சொல்லிவிட்டால் அப்படியே அதை கேள்வி கேட்காமல் கண்மூடித்தனமாக கடைபிடிக்கும் பழக்கம் மிகவும் ஆபத்தானது. சராசரிக்கும் சற்று மேலே இருந்தால் வாழ்வு சிறக்கும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உயர்ந்த விஷயங்களில் கவனம்: எதையும் சிந்தித்துப் பார்க்காமல் பிறர் செய்கிறார்களே என்று எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதும் இல்லை. அதை கடைப்பிடிக்க வேண்டியதும் இல்லை. இதையெல்லாம் தவிர்த்து விட்டு நல்ல குணங்களான நேர்மை, துணிவு, பொறுமை, புரிந்துகொள்ளும் தன்மை, கருணை இவற்றை ஒருவர் தன்னுடைய வாழ்வின் உயர்ந்த விஷயங்களாகக் கருத வேண்டும். தனக்கு எது சந்தோஷமும் மகிழ்ச்சியும் தருமோ, தன் வளர்ச்சிக்கு எது உதவுமோ அந்த விஷயங்களை செய்தால் போதும்.
மேலோட்டமான விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள்: சமூக வலைதளங்களில் உபயோகமற்ற 10 வினாடி வீடியோக்கள் பல மில்லியன் நபர்களை சென்றடைந்து விடுகிறது. நூலகங்களிலும் புத்தகக் கடைகளிலும் எத்தனையோ அருமையான நூல்கள் மற்றும் காவியங்கள் வாசிக்கப்படாமல் தூசு படிந்து கிடக்கின்றன என்பது எவ்வளவு வேதனையான விஷயம்.
நமது சிந்தனை, ஆழ்ந்த அறிவை தூண்டுவதாகவும் பேசும் உரையாடல்கள் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். சிறப்பான விஷயங்களைத் தேட வேண்டும். தேவையில்லாத அரட்டையை தவிர்க்க வேண்டும். செய்யும் வேலைகளில் கவனமும் அக்கறையும் இருக்க வேண்டும்.
கண்களைத் திறந்து உலகை ரசியுங்கள்: எப்போதும் பொருள் சார்ந்த சிந்தனையிலேயே இருந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப சாதனங்களுடன் பயணித்துக்கொண்டு தன்னைச் சுற்றிலும் உள்ள அழகான உலகை ரசிக்கத் தவறியவர்கள் பலர். தன் கையில் இருக்கும் மொபைல் ஃபோனிலேயே காலம் கழித்துக்கொண்டு வீட்டு ஜன்னலைக் கூட திறந்து வெளியில் இருக்கும் அழகான மேகத்தையும், அற்புத ஜாலம் காட்டும் வண்ணமயமான ஆகாயத்தையும் மரம், செடி, கொடிகளையும் ரசிக்காமல் ஒரு மாய உலகத்திற்குள் வாழ்ந்து கொண்டிருப்போர் ஏராளம். அவற்றிலிருந்து தினமும் சில மணி நேரங்களாவது வெளியே வந்து கடவுள் படைத்த இந்த அற்புதமான உலகை கண்களால் நன்கு ரசித்து மனதால் உணர்ந்து ஆனந்த வாழ்வு வாழ வேண்டும்.
அனைவரையும் மரியாதையோடு நடத்துங்கள்: நம் வாழும் வாழ்வு மிகச் சிறியது. இந்த வாழ்வில் யாரையும் எதற்காகவும் காயப்படுத்தாதீர்கள். மரியாதை குறைவாக நடத்தாதீர்கள். அதேசமயம், உங்களுக்கும் அதுபோல நடக்க அனுமதிக்காதீர்கள்.
சிறப்பாக பணி புரிதல்: உங்களுக்குத் தரப்படும் பணிகளை மிகச் சிறப்பாக செய்யுங்கள். அமைதியான சூழ்நிலையிலும் அமைதியான மனதோடும் வேலை செய்யுங்கள். அதனுடைய விளைவுகள் நல்ல பயன் தரும். தினமும் சில நிமிடங்களாவது அமைதியை கடைப்பிடியுங்கள்.
எப்போதும் துணிவோடு இருங்கள்: பயம் என்ற உணர்ச்சி எந்த வழியிலும் உங்கள் வாழ்வில் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். துணிச்சலோடு எதையும் எதிர்கொள்ளுங்கள். துணிச்சலுடன் செயல்படும் நபர்களுக்கு காலமும் கடவுளும் கை கொடுத்து தேவையான ஆற்றலை தந்து வாய்ப்புகளையும் வழங்கும். அருமையான இந்த வாழ்வை சராசரிக்கும் சற்று மேலே மிகச் சிறப்பாக வாழ்ந்து கொண்டாடுவோமே!