இந்த வைரம் இருந்தால் நீங்களே உலகின் சிறந்த பணக்காரர்!

If you own this diamond you are the richest man in the world
If you own this diamond you are the richest man in the worldhttps://ta.quora.com

ரு சாது, நாம் நினைப்பதையெல்லாம் வரவழைத்துத் தருகிறார் என்று செய்தி கேட்டு அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் ஆவலுடன் சென்று அவரை சந்தித்தனர். அனைவரையும் பார்த்துப் புன்னகைத்த அந்த சாது, "உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நான் அறிந்தேன். அதை அப்படியே உங்களிடம் தந்துள்ளேன். பத்திரமாக எடுத்துச் சென்று நன்மை அடையுங்கள்" என்று சொல்லி விட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

மக்கள் ஏமாற்றத்துடன் முணுமுணுத்து கலைந்தனர். சாதுவின் உதவியாளருக்கும் ஒன்றும் புரியவில்லை என்பதால் தியானம் கலைந்து எழுந்த சாதுவிடம், “நீங்கள் அவர்களுக்கு என்ன தந்தீர்கள் சாமி?” என்று கேட்க, “அட நீயும் அவர்களைப் போலவே அறிவிலியாக இருக்கிறாயே? எவரோ சொன்ன புரளியை நம்பி இங்கே வந்தார்கள்.  நான் அவர்களுக்குள் நல்ல எண்ணம் எனும் கண்ணுக்குத் தெரியாத வைரத்தை விதைத்து அனுப்பி விட்டேன். இனி அவர்கள் பாடு" எனச் சொல்லிவிட்டு அடுத்த ஊருக்குப் பறந்தார் சாது.

ஆம். சாது சொன்னது போல் உலகின் மிகச்சிறந்த வைரம், நம்மிடம் தோன்றும் எண்ணங்களே. ஆனால், அறிவியல் வசதிகள் பெருகி விட்ட இக்காலத்தில் மனிதருக்குள்தான் எத்தனை எத்தனை வக்கிரம் கலந்த எண்ணங்கள்? எங்கு பார்த்தாலும் மனித மனங்களில் ஏதேதோ எண்ணங்கள். பார்க்கும் மனித முகங்கள் எல்லாம் ஏதோவொரு சிந்தனை வயப்பட்டதாகவே தோன்றுகிறது.

இறுக்கமான மனிதர்களாகவும், எந்திரகதியான மனிதர்களாகவுமே இங்கு அனைவரும் உலாவுகின்றோம். வேறுபாடான கருத்து கொண்ட எண்ணக் குவியல்களின் மோதல்களையும், சிந்தனைகளையுமாகக் கொண்ட மக்கள் கூட்டத்தை, காணும் திசை எல்லாம் காண்கிறோம்.

சாதித்திருந்தாலும் சக மனிதனைக் கண்டு பாராட்டி மகிழும் உள்ளமோ, மரணமே எனினும் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணமோ இல்லாமல் இணையதளம் எனும் மாய உலகில் தனியொருவராக பயணிக்கும் உலகமாக மாறி விட்டது தற்போது. இதற்கெல்லாம் அடிப்படை என்னவென்று சிந்தித்தால் அவரவருக்கான தனிப்பட்ட எண்ணங்களே ஆகும்.

எண்ண ஓட்டங்கள் தவறாக இருக்கும்போது அங்கே வாழ்வியல் நெறிகளில் மாற்றம் ஏற்படுகிறது. மனித நடத்தைகளின் மாறுபாடுகளை மாற்றி அமைக்கும் வல்லமை எண்ணங்களுக்கே உண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும். ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கும். கெடுதலான எண்ணங்கள் கெடுதலான செயல்களில் முடியும்.

இதையும் படியுங்கள்:
உடல் எடையை குறைக்க உதவும் ஆறு விதமான பழங்கள் எவை தெரியுமா?
If you own this diamond you are the richest man in the world

நமது எண்ணங்களே செயல்களாகும். செயல்களே நமது அன்றாடப் பழக்க வழக்கங்களாகும். பழக்க வழக்கங்களே ஒருவருடைய நடத்தையையும் வெற்றியையும் நிர்ணயம் செய்யும். அலைபேசியையும் இணையத்தையும் நம் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வாழ்வை நெறிப்படுத்தும் எண்ணத்தை கைக்கொண்டு நேரங்களை நமதாக்கி மகிழ பயிற்சி எடுக்க வேண்டும்.

நம் மனதில் தோன்றும் எந்த எண்ணமும் வீணாவது இல்லை என்பதை நினைவில் கொள்வோம். மகிழ்ச்சியான, உயர்வான வாழ்க்கைக்கு அடிப்படையான நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம். நல்லதையே நினைத்து வாழ்வோம். வரமாக வாங்கி வந்த நல்ல எண்ணங்கள் எனும் வைரத்தைப் பாதுகாத்து உலகின் சிறந்த பணக்காரராக மாறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com