தாத்தா-பாட்டி கதைகள் குழந்தைகளை எப்படி அறிவாளியாக மாற்றுகின்றன?

குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் மொழித்திறனை உயர்த்தும் குடும்பக் கதைகளின் மகத்தான சக்திகள்!
குடும்ப கதைகள்
குடும்ப கதைகள்Gemini image
Updated on

அன்புடன் சொல்லப்படும் குடும்பக் கதைகள் குழந்தைகளின் தன்னம்பிக்கை, மொழித்திறன் மற்றும் சமூக-உணர்ச்சி வளர்ச்சிக்கு எப்படி குடும்ப கதைகள் உதவுகின்றன?

90s கிட்ஸ் என்று அழைக்கப்படும் தலைமுறையினரின் குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்த்தால், அதில் தாத்தா, பாட்டியின் அரவணைப்புக்கும் அன்புக்கும் தனி இடம் உண்டு. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் “சாப்பிட்டாயா?” என்று கேட்கும் பாட்டி, வெளியே விளையாடிவிட்டு வந்ததும் அருகில் அமரவைத்து தலைகோதிவிடும் தாத்தா, இரவு நேரத்தில் தூங்கச் செல்லும் முன் பழைய கதைகளைச் சொல்லி மகிழ்விக்கும் அந்தத் தருணங்கள் என பல இனிய நினைவுகள் இன்றும் மனதில் பசுமையாக இருக்கின்றன.

அந்தக் காலத்தில் குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்த சூழல் அதிகமாக இருந்ததால், குழந்தைகளுக்கும் தாத்தா, பாட்டிக்கும் இடையேயான உறவு இயல்பாகவே நெருக்கமாக இருந்தது. பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரங்களில் குழந்தைகளுக்குத் துணையாக இருந்ததும் பல நேரங்களில் தாத்தா, பாட்டிகள்தான். அவர்களிடம் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு கதை, ஒரு அனுபவம் அல்லது ஒரு வாழ்க்கைப் பாடம் பதிலாகக் கிடைத்தது.

தலைமுறைகளை இணைக்கும் பாலமாகும் குடும்பக் கதைகள்:

தாத்தா, பாட்டி சொல்லும் கதைகளில் சில உண்மையான சம்பவங்களாகவும், சில சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்ட குடும்ப நினைவுகளாகவும் இருக்கலாம். ஆனால் அவை குழந்தைகளின் உலகத்தை வெவ்வேறு வழிகளில் வளப்படுத்துகின்றன.

இன்றைய சூழலில் நகரமயமாக்கல், வேலைக்காக வெவ்வேறு நகரங்களில் வசிப்பது, வெளிநாட்டு வாழ்க்கை, கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனிக் குடும்பங்கள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் பல குழந்தைகள் தாத்தா, பாட்டியுடன் தினமும் நேரம் செலவிடும் வாய்ப்பை இழந்துள்ளனர். நேரில் பேசுவதற்குப் பதிலாக வீடியோ அழைப்புகள் மூலம் உறவைத் தொடரும் நிலையும் அதிகரித்துள்ளது.

குடும்ப கதைகள்
குடும்ப கதைகள்Gemini image

அதே நேரத்தில், குழந்தைகளின் பொழுதுபோக்கிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில நொடிகளில் ஆயிரக்கணக்கான வீடியோக்களையும் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களையும் திரையில் பார்க்க முடிகிறது. ஆனால் திரையில் கிடைக்கும் தகவலுக்கும், நம்மை நேசிக்கும் ஒருவர் அருகில் அமர்ந்து தனது வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

1. குடும்பக் கதைகள் குழந்தைகளின் தன்னம்பிக்கை யையும் அடையாள உணர்வையும் வளர்க்கும்

“உன் அம்மாவும் சிறுவயதில் இப்படித்தான் பயந்தாள்”, “உன் தாத்தாவும் ஒருமுறை தோல்வியடைந்து மீண்டும் முயற்சி செய்தார்” போன்ற குடும்பக் கதைகள் குழந்தைகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் தங்களைப் பற்றிய புரிதலை, தங்களது குடும்பத்தின் கடந்தகாலக் கதைகளுடன் இணைத்தே படிப்படியாக உருவாக்கிக் கொள்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிரும்போது, “நானும் இந்தக் குடும்பத்தின் ஒரு முக்கியமான அங்கம்” என்ற உணர்வு குழந்தைகளிடம் உருவாகலாம்.

தோல்விகளையும் சவால்களையும் எதிர்கொள்ளக் கற்றுக்கொடுக்கும் கதைகள்.

தாத்தா, பாட்டி தங்களது சிறுவயது பயங்கள், தோல்விகள், சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு எதிர் கொண்டார்கள் என்பதைப் பகிரும்போது, குழந்தைகளுக்கு வாழ்க்கையில் சிரமங்கள் வருவது இயல்பானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

“எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?” என்ற எண்ணத்திற்குப் பதிலாக, “இதுபோன்ற சூழலை மற்றவர்களும் சந்தித்திருக்கிறார்கள்; அதை சமாளிக்க முடியும்” என்ற நம்பிக்கை உருவாகலாம். இதன் மூலம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனவலிமையும் வளர வாய்ப்புள்ளது.

2. கதை கேட்பதால் மொழித்திறனும் கற்பனைத் திறனும் மேம்படும்.

ஒரு கதை என்பது வெறும் சில வாக்கியங்களின் தொகுப்பு அல்ல. அதில் புதிய சொற்கள், கதாபாத்திரங்களின் உரையாடல்கள், சம்பவங்களின் வரிசை, காரணங்கள் மற்றும் விளக்கங்கள் என பல்வேறு மொழிக் கூறுகள் இடம் பெறுகின்றன.

இதுபோன்ற கதைகளைத் தொடர்ந்து கேட்கும் குழந்தைகள் புதிய சொற்களைக் கற்றுக்கொள்வதோடு, நீளமான வாக்கியங்களையும் சிக்கலான கருத்துகளையும் புரிந்துகொள்ளப் பழகுகிறார்கள்.

கதை அமைப்பைப் புரிந்துகொள்ள உதவும் உரையாடல்கள்.

ஒரு சம்பவம் எப்படி தொடங்குகிறது, அதன் நடுவில் என்ன நடக்கிறது, இறுதியில் என்ன முடிவு ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம் குழந்தைகள் கதை அமைப்பையும் நிகழ்வுகளின் தொடர்பையும் கற்றுக்கொள்கிறார்கள்.

மேலும், தாத்தா, பாட்டிகளிடம் இருக்கும் கதைகள் பெரும்பாலும் பெற்றோர் சொல்லாத வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டிருக்கும். அவர்களின் சிறுவயது வாழ்க்கை, கிராமத்து அனுபவங்கள், பழைய விளையாட்டுகள், குடும்ப நிகழ்வுகள் போன்றவை குழந்தைகளின் கற்பனை உலகத்தை மேலும் விரிவுபடுத்தலாம்.

3. சமூக மற்றும் உணர்ச்சி திறன்களை வளர்க்கும்.

ஒரு குழந்தை தாத்தா அல்லது பாட்டியின் அருகில் அமர்ந்து கதை கேட்கும்போது, அது ஒருவழிப் பேச்சாக மட்டும் இருப்பதில்லை. குழந்தை கேள்விகள் கேட்கும், கருத்துகளைச் சொல்லும், தனது அனுபவங்களுடன் கதையை ஒப்பிட்டுப் பார்க்கும்.

இத்தகைய உரையாடல்கள் மற்றவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கின்றன.

உணர்வுகளைப் புரிந்துகொள்ளச் செய்யும் வாழ்க்கை அனுபவங்கள்.

தாத்தா, பாட்டி தங்களது பயம், மகிழ்ச்சி, ஏமாற்றம், தோல்வி போன்ற உணர்வுகளைப் பற்றி பேசும்போது, வாழ்க்கையில் பலவிதமான உணர்வுகள் இருப்பதை குழந்தைகள் புரிந்துகொள்கின்றனர்.

ஒரு பிரச்னையை எதிர்கொண்ட பிறகு அதை எவ்வாறு சமாளிப்பது, தவறு நடந்தால் எப்படி மீண்டும் முயற்சி செய்வது, மற்றவர்களின் உணர்வுகளை எப்படி மதிப்பது போன்ற விஷயங்களையும் இயல்பான உரையாடல்கள் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.

2024ஆம் ஆண்டு மலேசியாவில் 9 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், தாத்தா, பாட்டியுடனான உறவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் அதிக அன்பும் ஆதரவும் கிடைக்கும் குழந்தைகளிடம் சமூகத் திறன்கள் வலுவாக இருப்பதற்கான தொடர்பு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
உங்கள் குழந்தை கோகோமெலன் அடிமையா? பெற்றோர்கள் கவனத்திற்கு!
குடும்ப கதைகள்

கதை சொல்லும் நேரத்தை மீண்டும் உருவாக்குவோம்.

தாத்தா, பாட்டி சொல்லும் ஒவ்வொரு கதையும் குழந்தையின் வாழ்க்கையில் ஒரு பெரிய பாடமாக மாற வேண்டிய அவசியமில்லை. சில கதைகள் சிரிக்க வைக்கும்; சில கதைகள் ஆச்சரியப்படுத்தும்; இன்னும் சில கதைகள் குடும்பத்தின் கடந்தகாலத்தை அறிமுகப்படுத்தும்.

ஆனால் அந்தக் கதைகளின் பின்னால் இருக்கும் அன்பான உறவுதான் மிக முக்கியமானது.

குழந்தையுடன் செலவிடும் நேரமே முக்கியம்.

குழந்தை கேள்வி கேட்கும்போது பொறுமையாகப் பதில் அளிப்பதும், அதன் எண்ணங்களை மதிப்பதும், மொபைல் போனை ஒதுக்கிவைத்து குழந்தையுடன் நேரம் செலவிடுவதும் உறவை வலுப்படுத்தும்.

தாத்தா, பாட்டியுடன் நேரில் சந்திக்க முடியாத குடும்பங்கள்கூட வீடியோ அழைப்புகள் மூலம் கதை சொல்லும் நேரத்தை உருவாக்கலாம். “உங்கள் சிறுவயதில் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவத்தைச் சொல்லுங்கள்” என்று குழந்தைகள் கேட்க ஊக்குவிக்கலாம்.

ஒரு சிறிய கதை… நீண்ட கால நினைவாக.

இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகளுக்கு தகவல்கள் கிடைப்பது எளிதாகிவிட்டாலும், வாழ்க்கையை நேரடியாக அனுபவித்த ஒருவரின் குரலில் அந்த அனுபவங்களைக் கேட்பது தனித்துவமான அனுபவமாகும்.

இதையும் படியுங்கள்:
குழாய்களில் உள்ள நீர்க் கறைகளை நீக்க முடியவில்லையா? அலுமினிய ஃபாயில் போதும்!
குடும்ப கதைகள்

தாத்தா, பாட்டியின் ஒரு சிறிய கதை, ஒரு குடும்ப வரலாறு, ஒரு தோல்வியின் அனுபவம் அல்லது ஒரு வேடிக்கையான சம்பவம் கூட குழந்தையின் மனதில் நீண்ட காலம் பதிந்திருக்கலாம்.

எனவே, “நான் சிறுவயதில் நடந்த ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்…” என்று தாத்தா அல்லது பாட்டி கதையைத் தொடங்கும்போது, அதை அவசரமாக முடிக்காமல் குழந்தை கேட்கும் வரை சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

அந்தக் கதைகள் குழந்தையின் நினைவில் மட்டுமல்ல; அவர்களின் குடும்ப அடையாளம், மொழி வளர்ச்சி, கற்பனை, சமூகத் திறன் மற்றும் உணர்ச்சி வளர்ச்சியிலும் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்யக்கூடும்.

தாத்தா, பாட்டியின் கதை நேரம் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அன்பையும் அனுபவத்தையும் நினைவுகளையும் கொண்டு செல்லும் அழகான பாலம்.

இந்தத் தொகுப்பைப் படிப்பதன் மூலம், உங்கள் குழந்தைகளின் கவனச்சிதறலைக் குறைத்து, அவர்களிடம் தன்னம்பிக்கை, சிறந்த உரையாடல் திறன் மற்றும் சிக்கலான சூழ்நிலைகளைக் கையாளும் மனவலிமையை இயல்பாக வளர்க்கும் அன்றாடக் கதைசொல்லல் முறைகளை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com