மழலைப் பருவத்திலிருந்தே, படிக்கும்போதும், எழுதும்போதும் நம் தலை நன்கு குனிந்திருக்கிறது. இடது கரம் புத்தகத்தைப் பற்றியிருக்க, எழுதுபொருளைப் பிடித்துக்கொள்ளும் வலதுகை எழுதுகிறது, அல்லது ஓவியம் வரைகிறது. மனம் அந்தப் படிப்பில் அல்லது எழுத்தில் அல்லது ஓவியத்தில் ஆழ்ந்து ஈடுபடுகிறது; படிப்பதை அப்படியே உள்வாங்கிக்கொள்ள முயல்கிறது; எழுதுவதைச் சற்றும் பிழையில்லாமல் எழுதச் சொல்கிறது. வரைவதை பிசிறில்லாமல் வரைய வைக்கிறது.
இந்தச் செயலால் நம் உடல், பணிவை வெளிப்படுத்துகிறது. அதாவது, பால பருவத்திலிருந்தே நாம் படிப்போடு, பணிவையும் கூடவே பயிலவேண்டியதும் அவசியம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆனால், இந்த செய்கையின்போது உடல் பணிந்தாலும், மனம் இந்தப் பணிவுப் பயிற்சியில் ஆர்வம் காட்ட மறுக்கிறது. காரணம், படிப்பதால் நிறைய வருமானம் கிடைக்கக்கூடிய வேலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பிலேயே கல்வியின் நோக்கம் அடிபட்டுவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம், ‘கற்க, நிற்க, அதற்குத் தக’ என்பது பள்ளி நாட்களிலேயே பெரிதும் வலியுறுத்தப்படாததுதான்.
அப்படி வலியுறுத்தப்பட்டிருக்குமானால், ‘பஸ் டே’ என்ற பெயரில் பேருந்துகளை அவமதிப்பதும், பள்ளி மாணவப் பருவத்திலேயே அரசியல் சாயம் பூசிக்கொள்ளும் அநாகரிகமும் தோன்றியிருக்காது. தினமும் பத்திரிகைகளில் செய்திகளைப் படிக்கும்போது மனம் பதைபதைக்கிறது. மாணவப் பருவம் என்பது வீண் சாகசங்கள் செய்வதற்கும், தன்னைச் சுற்றியிருப்பவர்கள் அதனைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும்தானா? இதனால் பேருந்து மற்றும் ரயில் வண்டிப் படிகளில் பயணம் செய்யும் மாணவர்களில் சிலர் கீழே விழுந்து உயிரிழக்கும் துயரமும் நிகழ்ந்திருக்கின்றனவே, அந்த சம்பவங்களை நேரே பார்த்தும் அதேபோன்ற ஆபத்தான செயல்களில் மாணவர்கள் ஏன் ஈடுபடுகிறார்கள்?
புறநகர் ரயில்களில் அவை குறிப்பிட்ட நிறுத்தத்திலிருந்து புறப்படும்போது, பெட்டி வாசலருகே வந்து, குனிந்து பட்டா கத்தியை பிளாட்பாரத்தின் தரையில் உரசி தீப்பொறி பறக்க வைக்கும் பேராபத்து செயல்களிலும் சில மாணவர்கள் ஈடுபடுவது, மனதை பதைபதைக்க வைக்கிறது.
அது அவர்களுடைய சுய விளம்பரத்துக்காகத்தான். ‘அடேயப்பா எவ்ளோ தைரியமா பஸ் படியில ஒத்தைக் கால்ல பாலன்ஸ் செய்துகிட்டு வர்ரான்! ‘ரயில்வே பிளாட்பாரம் அப்படியே பத்திக்கிச்சு’ என்றெல்லாம் சொல்லி சக மாணவர்கள் பிரமிக்கத்தான். தன் மனதுக்கினியவள் அதே வாகனத்தில் இருப்பாளானால் அவள் விழிகளில் தெறிக்கும் வியப்பு அல்லது பயம், பதற்றம் எல்லாவற்றையும் தனக்குப் பாராட்டு என்று நினைத்துக்கொள்ளும் அறியாமைதான்.
இவ்வாறு, சாகச செயல்களில் ஈடுபடும் மாணவர்கள், தங்களின் பெற்றோருக்கு எத்தகைய மன வேதனையைத் தருகிறோம் என்பதை உணர்வதேயில்லை. என்னதான் பிள்ளை மீது பாசம் இருந்தாலும், இப்படி ஊராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகும் மகனை அவர்கள் பாராட்டவா செய்வார்கள்? அவர்கள் படிக்கும் கல்வி நிலையத்துக்குதான் எத்தனை கெட்ட பெயர்!
சென்னையைப் பொறுத்தவரை இன்னொரு கொடுமை, கல்லூரி மாணவர்களுக்கிடையே எழும் மோதல்களும், கல் மற்றும் ஆயுத வீச்சுகளும்தான். அந்த மோதல்களுக்கு நிச்சயமாக தனிப்பட்ட பகை, சொந்த வன்மம்தான் காரணமாக இருக்க முடியும். ஆனால், கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத பொதுமக்கள் ஏன் அவதிப்படவேண்டும்?
தற்போதைய இத்தகைய சில மாணவர்களின் ஒழுங்கீனத்துக்குக் காரணம் என்ன? அவர்களுடைய அபரிமிதமான உடல் தினவுதான். அதற்கு உரிய வடிகால் இல்லாததுதான். அந்த காலத்தில் ‘நீதிபோதனை’ வகுப்புகள் பள்ளிகூடங்களில் நடத்தப்பட்டன; அதோடு விளையாட்டும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் தம் வலிமையை அங்கே நிரூபித்து, நீதி போதனை வகுப்புகளால் மனம் பண்பட்டவர்களாகவும் விளங்க முடிந்தது. ஆனால் இப்போது இரண்டும் இல்லை என்ற அவலம்தான், மாணவர்களை இப்படி வன்முறை வடிகாலைத் தேட வைத்திருக்கிறது. சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு மைதானமே இல்லை என்ற உண்மை மனதில் வலியைக் கூட்டுகிறது.
‘இளமையில் கல்’ என்று இளவயதில் கல்வி பயில வேண்டிய அவசியத்தைதான் நம் முன்னோர்கள் வற்புறுத்தினார்களே தவிர, ‘இள வயதில் கையில் கல் எடு‘ என்று சொல்லவில்லை என்பதை வன்முறை மாணவர்கள் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.