
முதல் குழந்தை வந்ததும், அந்தப் பிஞ்சு பாதங்களின் ஸ்பரிசமும், மழலைக் குரலும் தரும் மகிழ்ச்சி அளவற்றது. அதன்பிறகு குடும்பத்தை மேலும் விரிவாக்கி, இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் எண்ணம் பல தம்பதிகளுக்கு இருக்கும். இது ஒரு அற்புதமான முடிவு என்றாலும், இரண்டாவது குழந்தைக்குத் திட்டமிடுவதற்கு முன் சில முக்கிய அம்சங்களைப் பற்றி நிதானமாகச் சிந்திப்பது நல்லது. அவசரப்படாமல் சில விஷயங்களைக் கருத்தில் கொள்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நன்மையளிக்கும்.
முதல் குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பது அவசியம். பொதுவாக, மூன்று முதல் நான்கு வருடங்கள் இடைவெளி இருப்பது முதல் குழந்தையின் தேவைகள் ஓரளவு பூர்த்தியாகி, அவன்/அவள் ஓரளவு சுயமாகச் செயல்படப் பழகியிருப்பார்கள். இதனால் பெற்றோர்களுக்கு அடுத்த குழந்தையைக் கவனிப்பதற்குச் சற்று எளிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. தாயின் உடல் முதல் பிரசவத்திலிருந்து முழுமையாகத் தேறவும் இந்த இடைவெளி அவசியம்.
அடுத்த முக்கிய அம்சம் பொருளாதார நிலை. இன்னொரு குழந்தையை வளர்ப்பதற்கான செலவுகள் - உணவு, உடை, கல்வி, மருத்துவம், எதிர்காலத் தேவைகள் போன்றவற்றுக்குத் தேவையான நிதி உங்களிடம் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன்கூட்டியே குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கான பொருளாதாரத் திட்டமிடலைச் செய்து வைப்பது நல்லது. சிலர் நிதிச் சுமை காரணமாகவே இரண்டாவது குழந்தையைத் தவிர்க்கத் தயங்குகிறார்கள்.
தாயின் உடல்நலம் மிக முக்கியம். முதல் குழந்தைப்பேற்றுக்குப் பிறகு உடல் முழுமையாகத் தேறியுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும், குழந்தையைப் பராமரிக்கத் தாத்தா, பாட்டி போன்ற குடும்பத்தினரின் ஆதரவு இருக்கிறதா என்பதையும் கருத்தில் கொள்வது உதவியாக இருக்கும். குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்கள், இரண்டாவது குழந்தைக்குப் பிறகு அவர்களுக்காக ஒதுக்கும் நேரம் குறித்தும், கிடைக்கும் ஆதரவு குறித்தும் திட்டமிட வேண்டும்.
தம்பதியரின் தனிப்பட்ட மனநிலையும் முக்கியம். முதல் குழந்தையை வளர்த்ததில் ஏற்பட்ட அனுபவங்கள், சவால்கள், உங்களது தற்போதைய ஆற்றல் நிலை போன்றவற்றை மதிப்பிடுங்கள். இன்னொரு குழந்தையை நிர்வகிக்க நீங்கள் மனதளவில் தயாராக இருக்கிறீர்களா என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். இந்த முடிவு உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியையும், நிறைவையும் தருவதாக இருக்கும் என்றால் தாராளமாகத் திட்டமிடலாம்.
இரண்டாவது குழந்தைக்குத் திட்டமிடுவது என்பது பொருளாதார, உடல்நல, சமூக மற்றும் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த பல அம்சங்களை உள்ளடக்கியது. இந்த விஷயங்களை நிதானமாக ஆலோசித்து சரியான முடிவை எடுப்பது, உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.