கொரிய பெண்களாக மாற விரும்பும் இந்தியப் பெண்கள்!

கொரிய பெண்களாக மாற விரும்பும் இந்தியப் பெண்கள்!

கொரிய அழகு சாதனப் பொருட்கள் மீதான மோகம் இந்தியப் பெண்களிடமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இந்தியப் பெண்களிடம் ஏற்படும் தாக்கம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

முகம் பொலிவு பெற வேண்டும் என்பதற்காக சிவாஜி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்யும் சேட்டைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவது இன்று நேற்றல்ல; பல காலங்களாகவே இருந்து வருகிறது. முகத்தில் சந்தனம் பூசி, அழகான ஆடை உடுத்தி, கூந்தலில் பூ வைத்து, சந்திரன் போன்ற நெற்றியில் திலகம் இட்டு, உதட்டில் சாயம் பூசி சீதையின் திருமணத்துக்கு அவரது தோழிகள் தயாரானதாக கம்பர் பாடியிருப்பார்.

நிலவை பாலில் நனைத்து உருவாக்கிய கன்னங்களும், கண்ணாடி போல மின்னும் சருமங்களும் வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதற்காக பல்வேறு அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் வழக்கம் பெண்களிடம் அதிகம் காணப்படுகின்றது. அந்த வகையில் சமீப நாட்களில் கொரிய அழகு சாதனப் பொருட்கள் இந்திய பெண்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

கொரிய பாடல்கள், உடைகள், கே சீரீஸ், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் இந்தியர்களிடம் பிரபலமாகி இருப்பது, கொரிய அழகு சாதனப் பொருட்கள் மீதான காதலே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, முகப்பரு, தழும்புகள் போன்றவை இல்லாத தோல்களை உடையவர்களாக கொரிய மக்கள் இருக்கிறார்கள்.

அதற்கு அவர்களின் சருமப் பராமரிப்பு, சுற்றுச்சூழல், உணவு, மரபணு போன்றவை முக்கியக் காரணிகளாக உள்ளன. மேலும், அங்கு நிலவும் காலநிலைக்கு பொருந்தக்கூடியதாக அவர்களின் சருமங்கள் இருக்கின்றன. சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் கொரிய மக்கள், டோன்னிங், கிலென்சிங், எசென்ஸ் ஸ்பிரே, ஸ்லீப்பிங் மாஸ்க் போன்ற வழிமுறைகளை எல்லாம் அவர்கள் பின்பற்றுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், தர்பூசணி பழத்தை முகத்தில் பூசுவது போன்ற பல்வேறு இயற்கை சார்ந்த வழிமுறைகளையும் பின்பற்றுகிறார்கள்.

கொரிய மக்களின் உணவில் பச்சை காய்கறிகளும், மீன் வகைகளும் அதிகம் இருப்பது அவர்களுக்கு பொலிவை அதிகம் கொடுக்கிறது. பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் அழகு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள்.

இந்த நிலையில்தான், கொரிய அழகு சாதனப் பொருட்களின்பால் ஈர்க்கப்பட்டு, அதை பயன்படுத்தும் பழக்கம் இந்தியர்களிடம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, இளம் வயதினரிடையே அதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. அதேநேரம் கொரிய அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்திய சிலர், அவை தங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பலன் அளிக்கவில்லை என்கிறார்கள்.

கால நிலைக்கு ஏற்ப மக்களின் சருமம் மாறுபடும் என்பதால், அழகு சாதனப் பொருட்களை வாங்குவோர் அது தங்களுக்கு பொருத்தமானதா என்பதை அறிந்து அதன் பின்னரே வாங்க வேண்டும் என்பது தோல் மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com