புதிதாக வேலை தேடுவோரும் சரி, ஏற்கெனவே இருக்கும் வேலையில் இருந்து புதிய வேலை மாற திட்டமிடுவோரும் சரி, நேர்காணல் அதாவது இன்டர்வியூ என்பது கேள்விகள் அடங்கிய சந்திப்பு என்ற ஒரே கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறார்கள். ஆனால், பணியமர்த்தல் துறையில் உள்ள நிபுணர்கள் வேலைக்காக நேர்காணலுக்கு வருவோரின் நேரம் தவறாமையின் முக்கியத்துவம் முதல், பல விஷயங்களை பார்க்கிறார்கள்.
முக்கியமாக, நேர்காணலுக்கு வரச் சொன்ன நேரத்தை தாண்டி தாமதமாக வருவது, பணியமர்த்துபவர்கள் மத்தியில் இன்டர்வியூவிற்கு வருபவர் மீது ஒரு எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்தும்.
எவ்வளவு நேரத்திற்கு முன்பாக இருக்க வேண்டும்? ஒரு இன்டர்வியூ நடக்கும் இடத்திற்கு செல்வதற்கான சிறந்த நேரம், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு ஆகும் என்கிறார்கள். இந்த 5 நிமிடம் என்பது வெகு சீக்கிரமும் அல்ல, தாமதமும் அல்ல. நேர்காணலுக்கு செல்வதற்கான நேரத்தை இவ்வளவு துல்லியமாகக் கடைபிடிப்பது அவசியமா? இது ஒரு சிறிய விஷயம்தானே என்று பலரும் நினைக்கலாம். ஆனால், சிறிய அதேசமயம் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவது மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனித்து நிற்கச் செய்ய உதவும்.
800 ஹெச்.ஆர் மேனேஜர்கள், பல கம்பெனிகளின் டைரக்டர்கள், நிர்வாகிகளை சர்வே செய்து, ‘இன்டெலிஜென்ட்’ எனும் ஆன்லைன் பத்திரிகை தெரிவித்த உண்மைகள், பெரும்பாலான நிறுவனங்கள் வேலைக்கு புதிய நபர்களை வேலைக்கு எடுப்பதில்லை. அதனைத் தவிர்த்து, பழைய ஆட்களையே வேலைக்கு எடுக்க விரும்புகிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்.
50 சதவீதம் கல்லூரியில் படித்து முடித்தபின் வேலைக்கு நேர்முகத் தேர்வுக்கு வரும்போது இன்டர்வியூ செய்பவர்களை கண்களை நேருக்கு நேர் பார்த்து பேசுவதை தவிர்க்கிறார்கள் என்கிறார்கள்.
அது ஏன் நாம் ஒருவரின் கண்களைப் பார்த்து பேச வேண்டும்? நம்முடைய கண்களை எங்கே ஊன்ற வைக்கிறோம் என்பதை வைத்தே நம்மைப் பற்றியும் நாம் சொல்வதைப் பற்றியும் பிறர் முடிவு செய்துவிட முடியும் என்கிறது உளவியல். ஒருவர் தன்னுடைய கண்களை நேருக்கு நேர் பார்க்காமல் மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ பார்த்து கொண்டு பேசுவது என்பது அவரது இயல்பினை சந்தேகப்படும்படியாகக் கருதப்படுகிறது.
வேலைக்கு நேர்காணலுக்கு வரும் பிரஷ்ஷர்களில் 20 சதவீதம் பேர் தங்களது பெற்றோர்களுடன் வருகிறார்கள். நேர்முகத் தேர்வில் உங்களின் தனித்தன்மையை கண்டறியவே உங்களை நேர்முகத் தேர்விற்கு அழைக்கிறார்கள். அதில் நீங்கள் உங்கள் பெற்றோருடன் செல்லும்போது எப்படி உங்களை அவர்கள் எடை போட முடியும்? எனவே, தனியாகவே சென்று நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுங்கள். பின்னர் வந்து உங்களது பெற்றோர்களிடம் விவாதித்து முடிவெடுங்கள்.
இண்டர்வியூக்களில் வேலைக்கு சேரும் முன்னரே தேவையற்ற சலுகைகளை எதிர்பார்க்கிறார்கள். நேர்முகத் தேர்வில் நியாயமான கேள்வி, சந்தேகங்களை கேட்க உங்களுக்கு உரிமை உண்டு. இதனால் நீங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிவீர்கள். மேலும், அதிகாரிகள் உங்களை தேர்வு செய்வதற்கு இது தூண்டுதலாக அமையும். ஆனால், வேலைக்குச் செல்லும் முன்பே சலுகைகளை எதிர்பார்ப்பது உங்கள் மீது தவறான அபிப்பிராயத்தையே ஏற்படுத்தும்.