பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளையும் காதலையும் பரிமாறிக் கொள்வர். திருமணம் முடித்த தம்பதிகளும் தம் துணையின் மீதான அன்பை வெளிப்படுத்துவர். ஆனால், காதலுக்கும் அன்புக்குமான தினம் வருடத்தில் ஒரு நாள் மட்டும்தானா? வருடம் முழுக்க வாழ்க்கையின் எல்லா நாட்களும் காதலர் தினத்தை கொண்டாட முடியும். எப்படி தெரியுமா?
தூய்மையான காதலுக்கு தேவை தூய்மையான அன்பும் ஆழமான காதலும். காதல் செழித்து வளர இவை வாழ்நாள் முழுவதும் அவசியம். வருடத்தின் ஒற்றை நாள் மட்டும் அன்பை வெளிப்படுத்தி விட்டு மற்ற நாட்களில் கண்டுகொள்ளாமல் இருப்பதல்ல காதல்.
காதல் என்பது இரு மனங்களின் சங்கமம். அங்கே பரிபூரண அன்பிற்கு மட்டுமே இடம் உண்டு. அதுதான் ஒரு காதலுக்கு அடித்தளம். நம்பிக்கையும் விட்டுக் கொடுத்தலும் காதலின் இரு தூண்கள் போல. இவை இரண்டும் பலமாக இருந்தால் காதல் என்ற கட்டடத்தை வாழ்நாள் முழுவதும் மெருகு குறையாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
துளி சந்தேகம் இருந்தாலும் அது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விடும். முழுக்க முழுக்க தன் காதலரை அல்லது காதலியை நம்புவது அவசியம். அவருடைய ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் கேட்டல் தவறு. விட்டுக்கொடுத்தல் என்பது இரு பாலருக்கும் இருக்க வேண்டும். அது இயல்பாகவும் இருப்பது அவசியம் அது அதீத அன்பின் வெளிப்பாடு.
காதலின் அடுத்த பரிணாமம் திருமணம். நிறையக் காதல் திருமணத்தில் முடியும்போது தோற்று விடுவதற்கு காரணம் காதலிக்கும்போது இருந்த அன்பும் காதலும் போகப் போக குறைந்து விடுவதுதான். காதலிக்கும் போது தன்னுடைய முழுமையான இயல்பை வெளிக்காட்டாமல் தன் பார்ட்னருக்கு பிடித்த மாதிரி நடந்து கொண்டு திருமணத்திற்கு பின் தனது சுய ரூபத்தைக் காட்டும்போது அங்கே காதல் தோல்வியுறுகிறது.
அன்பு ஒருபோதும் நிர்பந்திப்பதில்லை. எதையும் கட்டாயப்படுத்துவதும் இல்லை. எதிர்பார்ப்பில்லாத அன்பு எப்போதுமே சிறந்தது. ஒருவர் இன்னொருவரின் மீது கொள்ளும் காதல் என்பது பரிசுத்தமாக இருக்க வேண்டும். ''நீ இப்படி எல்லாம் இருந்தால் நான் அன்பை செலுத்துவேன். காதலைப் பொழிவேன்'’ என்று சொல்வது வியாபாரத்தனமானது. அவரவர் இயல்புடன் அவரை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் உண்மையான காதலின் அடையாளம்.
தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் காதலனோ காதலியோ வரவேண்டும் என்று நினைக்கும்போதுதான் பிரச்னை உருவாகிறது. அந்த பந்தம் விரைவில் அறுந்து விடுகிறது. அவரவர் போக்கில் அவரவர் இயல்பில் இருப்பது தன் நல்லது. தனக்குப் பிடித்ததெல்லாம் அவருக்குப் பிடிக்க வேண்டும். தான் செய்வது எல்லாம் அவள் செய்ய வேண்டும் என்று நினைத்து செயல்படும்போது காதல் ஆட்டம் காண்கிறது.
அவரவர் பர்சனல் ஸ்பேஸில் மூக்கை நுழைக்காமல் அவரவர் இயல்புடன் ஏற்றுக்கொண்டு அன்பை மட்டுமே பரிமாறிக் கொண்டு இருந்தால் அந்த வாழ்வு சொர்க்கம். 'என்னுடைய மனைவி நான் சொன்னதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும்' என்று நினைப்பதும், 'இவர் என்னுடைய கணவர். நான் நினைப்பதை எல்லாம் செய்ய வேண்டும்' என்று நினைத்து செயல்பட ஆரம்பிக்கும்போது அங்கு காதலும் அன்பும் கரைந்து தம்பதிகள் என்கிற பிம்பம் மறைந்து போய் மூன்றாம் மனிதர்கள் போல தோற்றமளிக்க தொடங்கி விடுகின்றனர்.
'மாறுவது தெரியாமலேயே அவளுடைய அன்பில் கரைந்து என்னை மாற்றிக் கொண்டேன்' என்று ஒரு ஆண் சொன்னால் அதற்கு முழு காரணம் தூய காதல்தான். அவர் இயல்பில் கோபக்காரராக, புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக அல்லது வேறு சில தீய பழக்கங்கள் கொண்டவராக இருக்கலாம். மனைவியின் அன்பில் அவர் அவற்றையெல்லாம் மாற்றிக் கொண்டு அவள் விரும்பும் நல்ல மனிதராக மாறினார் என்றால் அதற்குக் காரணம் அன்புதான்.
திடமான காதல் மனது கொண்டவர்களால் தன் துணையின் சின்ன சின்னக் குறைகளை பொறுத்துக்கொண்டு அன்பை பரிமாறிக்கொள்ள முடியுமானால் அந்த அன்பு தோற்பதில்லை. எத்தனை வருடங்கள் ஆனாலும் அது செழித்து வளரவே செய்கிறது. வாழ்நாள் முழுக்க அன்பை கொடுத்து அன்பைப் பெற்று காதல் வளர்த்து வாழும் வாழ்க்கையில் எல்லா நாளுமே காதலர் தினம்தானே?