
ஜூன் ஒன்றாம் தேதி உலகப் பெற்றோர் தினத்தை முன்னிட்டு உள்ளூர் ஹலோ எஃப். எம். மில் பெற்றோர்களுக்கு ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. ‘தற்காலத்தில் பிள்ளை வளர்ப்பு பிரச்சனையாகி வருகிறதா? பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறதா?’ என்ற தலைப்பில் நிறைய பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். தாங்கள் பிள்ளைகளைப் புரிந்து கொண்ட அளவு, பிள்ளைகள் தங்களை புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கத்தை பல பெற்றோர், குறிப்பாக நாற்பதுகளில் இருப்போர் வெளிப்படுத்தினர்.
சென்ற தலைமுறைப் பெற்றோரும், பிள்ளைகளும்:
சென்ற தலைமுறையில், ஒரு குடும்பத்தின் தலைவர் தந்தை மட்டுமே. அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி தான் எல்லாமே நடக்கும். அவருக்கு விருப்பமான உணவு சமைப்பதில் தொடங்கி, உடை, பொருட்கள் வாங்குவது, பிள்ளைகளின் படிப்பு வரை அவர்தான் தீர்மானிப்பார்.
நிறையக் குடும்பங்களில் அப்பா என்றாலே ஒரு டெரர் ஆசாமியாகத்தான் பார்க்கப்பட்டார். அதிலும் மகன்களுக்கும் அப்பாக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகம். தன் விருப்பங்களை தாயிடம் சொல்லி அதை அப்பாவிடம் கடத்துவது அவர் தான். அம்மா, பிள்ளைக்கும் அப்பாவிற்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாகவே இருந்தார். குறும்பு செய்யும் பிள்ளைகளிடம், ‘அப்பாட்ட சொல்லீருவேன்’’ என்று மிரட்டியதும் தாய்தான். அதற்குப் பலனும் இருந்தது என்பதை மறுக்கமுடியாது. பெற்றோருக்கு அடங்கின பிள்ளைகளாய் இருந்தனர் சென்ற தலைமுறைப் பிள்ளைகள்.
இந்தத் தலைமுறைப் பெற்றோரும், பிள்ளைகளும்;
சென்ற தலைமுறைப் பிள்ளைகள், இப்போதைய பெற்றோர்கள் ஆன பின்பு நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது. நிறையக் குடும்பங்களில் பிள்ளைகளுக்கு அடங்கி பெற்றோர் நடக்க வேண்டி இருக்கிறது என்கின்றனர். தினமும் பிள்ளைக்குப் பிடித்ததைத்தான் சமைக்கவேண்டும், அவன் வைக்கிற சேனலைத்தான் பார்க்கவேண்டும். உடை, வீட்டிற்கு பொருள்கள் வாங்குவது, பிடித்த பள்ளியை தேர்ந்தெடுப்பது வரை பிள்ளைகளின் விருப்பமாகவே இருக்கிறது. பிள்ளைகளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தாலும், அதை உணர்வதில்லை பிள்ளைகள் என்பதே தற்போதைய பெற்றோரின் மனக்குமுறல். கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலும் தங்கள் விருப்பம் போல செயல்பட அனுமதியில்லை என்கிறபோது, என்னடா இது வாழ்க்கை? நமக்கான ஸ்பேஸ் எங்கே? என்று பெற்றோர் ஆதங்கப்படுவதிலும் உண்மை இருக்கிறது. இத்தனைக்கும் இன்றைய குடும்பங்களில் இருப்பது பெரும்பாலும் ஒற்றைப்பிள்ளை அல்லது இரண்டு தான். எதனால் பிள்ளை வளர்ப்பு கடினமாகி விட்டது என்று சிந்தித்துப் பார்த்தால் காரணம் பெற்றோர்களே என்று சொல்லத் தோன்றுகிறது.
பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்;
1. ஒற்றைப் பிள்ளை என்று அதீத செல்லம் கொடுப்பது. தவறு செய்யும் குழந்தைகளைக் கண்டிக்கத் தவறுவது. அதனால் தான் பள்ளியில் அவர்களை சமாளிக்க ஆசிரியர்கள் கஷ்டப்படுகிறார்கள.
2. கேட்பதை எல்லாம் இல்லை என்று சொல்லாமல் வாங்கித் தருவது. என்னதான் வசதியான பெற்றோராக இருந்தாலும் இந்தப் பொருள் உனக்கு அவசியம் தேவைதானா? என அந்த குழந்தையை அலசி ஆராய்ந்து பார்க்கச் சொல்ல வேண்டும்.
3. தாங்கள் பொருளாதார ரீதியாக படும் கஷ்டங்களை கட்டாயம் பிள்ளைகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
4. பிள்ளைகள் வானத்திலிருந்து குதித்து விடவில்லை. அவர்கள் ஒன்றும் அபூர்வப் பிறவிகள் இல்லை என்பதை முதலில் பெற்றோர்கள் உணர வேண்டும். ‘நீ படிச்சா மட்டும் போதும்’ என்று சொல்லாமல் வீட்டு வேலைகளை அவர்களுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும். அதற்காக மாதம் ஒரு சிறுதொகையை பாக்கெட் மணியாக கொடுக்கலாம். இதனால் இரண்டு நன்மைகள் ஏற்படும்.
சமையலறையில் உதவும் போது, கஷ்டப்பட்டு சமைத்த உணவுப் பொருட்களை வீணடிக்க மாட்டார்கள். மேலும் பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்றும் புரியும். தேவையில்லாத பொருட்களை வாங்கவோ, கேட்டு அடம்பிடிக்கவோ மாட்டார்கள்.
5. சில விஷயங்களில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவே கூடாது. லீவு நாள் என்றால், ஒன்பது மணி வரை தூங்க அனுமதிக்காமல், குறைந்தது 7 மணிக்காவது எழுந்து, ஒன்பதரைக்குள்ளாக உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.
6. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் தினமும் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களின் நண்பர்கள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் நடந்தவற்றை அவர்கள் கூறும் போது பொறுமையாக காது கொடுத்துக் கேட்கவேண்டும். பதின்பருவத்தில் ஒரு நண்பன்/ தோழியைப் போல நடந்துகொண்டால், பெற்றோர்- பிள்ளைகளிடையே ஒரு பாசப்பிணைப்பு உருவாகும்.
7. மேற்படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பம் மிக முக்கியம். தம் விருப்பத்தை அவர்கள் மேல் திணிப்பது கூடாது.
8. பெற்றோர் தம் விருப்பத்தைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை. பிள்ளைகளுக்கு செலவு செய்து விட்டு தமக்கு நல்ல உடைகள் வாங்காமல் இருப்பது என்றில்லாமல் வீட்டு நிலைமையை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பிள்ளைகளுக்கு என்றே வாழ்ந்துவிட்டால், ஒரு கட்டத்தில் அவர்களுக்கு ஒரு சலிப்புத்தன்மை வந்து விடும்.
9. மிக முக்கியமாக, பெரிய வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோள் என்று சிறு வயதிலிருந்து அவர்களை வளர்க்காமல், மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தாலே, பிள்ளைகள் அற்புதமான மனிதர்களாக வளருவர்; பெற்றோரை மட்டுமல்ல, இந்த உலகத்தை நேசிக்கும் அருமையான மனிதாபிமானம் மிக்கவர்களாக உருவாவர் என்பதில் சந்தேகமில்லை.