நகரங்களில் வீட்டை விட்டு வெளியே தெருவில் கால் வைத்தாலே நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் விரைவதைப் பார்க்கலாம். ‘அப்படி இத்தனை பேரும் எங்க தான் போவாங்களோ?’’ என வியக்கும் அளவுக்கு ரோட்டை அடைத்துக் கொண்டு கார்களும், டூவீலர்களும் காட்சி தரும். நடந்து செல்லும் ஒருவரால் அவ்வளவு எளிதில் சாலையை கடந்து மறுபடியும் செல்ல முடியாது.
நடந்து செல்வது கௌரவக் குறைச்சலா?
வீட்டருகிலோ அல்லது தெருமுனையிலோ இருக்கும் கடையில் இரண்டு ரூபாய்க்கு ஊறுகாய் பாக்கெட் வாங்குவதற்குக் கூட இரு சக்கர வாகனத்தில் செல்பவர் அநேகம். நடந்தால் உடலுக்கு நல்லது என்பதை மறந்து விட்டு வாகனத்தில் செல்வதை கௌரவமாக எண்ணுகின்றனர். அதிலும் 14, 15 வயது சிறுவர்கள் தெருவிற்குள் வண்டி ஓட்டிச் செல்வது கொடுமை. அதன் விளைவுகளைப் பற்றி பெற்றோர் கவலைப்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. சைக்கிளில் சென்று வர அறிவுறுத்தலாமே?
சண்டேனா அவுட்டிங் கட்டாயமா?
வாரம் ஒரு முறை காரை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் சினிமா, சிற்றுலா (பிக்னிக்) என சென்று வருவதை கட்டாய வழக்கமாகவே பலர் வைத்திருக்கின்றனர். கேட்டால், ‘’சண்டே அன்னிக்கு எப்படி வீட்டில் இருக்கிறது?’’ என்பது இவர்களின் பதிலாக இருக்கும். மகிழ்ச்சியை வெளியில் தேடி அலைபவர்கள்! வார நாட்களில் அலுவலகப் பணியில் மூழ்கி குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல், ஏன் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசிக் கொள்ளவோ, சேர்ந்து சாப்பிடவோ முடியாத சூழ்நிலை இருக்கும். வார இறுதியில் வீட்டில் தங்கி குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசினால் அன்பும் வளரும், உறவுகளும் தழைக்கும், புரிதலும் அதிகரிக்கும் அல்லவா? வாரம் முழுதும் ஒய்வு ஒழிச்சலின்றி உழைக்கும் நம் ஊர் சாலைகளும் ஞாயின்றாவது பாவம் ஓய்வெடுக்கட்டுமே?
வாகனங்கள் வெளியிடும் விஷ வாயுக்கள்:
அதிகரிக்கும் வாகனப் பயன்பாடுகளால் எரிபொருளின் தேவை அதிகரிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு போன்ற வாயுக்களை வாகனங்கள் வெளியிடுகின்றன. கார்பன் மோனாக்சைடை தொடர்ந்து சுவாசிப்பதால் நுரையீரலில் மூச்சுத் திணறல் ஏற்படலாம். இந்த வாயுக்கள் பூமி வெப்பமடைதலை அதிகரிக்கின்றன. இவை ஓசோன் படலத்தில் சிதைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக புற ஊதா கதிர்கள் நமது சுற்றுச்சூழலுக்குள் நுழைந்து தோல் புற்றுநோயை உண்டாக்கும்.
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோம்;
சொந்த வாகனங்களை தவிர்த்து பஸ் ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம். இதனால் போக்குவரத்து நெரிசலும் எரிபொருள் தேவையும் குறையும். மேலும் கணிசமான பணம் நம் கையில் மிஞ்சும். சொந்தக் காரில், வேனில் செஃல்ப் டிரைவிங் செய்யும் போது எதிர்பாராத விபத்துக்கள் நேர்ந்து விடுகின்றன. உள்ளூரில் வண்டி ஓட்டி பழகிய நபர்கள், வெளியூர்களிலும் நெடுஞ்சாலைகளிலும் சற்றே தடுமாறித்தான் போகின்றனர். அதேபோல வாடகைக் கார் பயன்பாட்டையும் முடிந்த அளவு தவிர்க்கலாம். அதில் பணிபுரியும் டிரைவர்கள் இரவு முழுவதும் கண்விழித்து வண்டி ஓட்டி, ஓய்வெடுக்காமல் மறுநாள் பகலிலும் ஓட்டும்போது வாகன விபத்துகள் நேருவது அதிகமாகின்றன.
நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளலாமே;
ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்களின் வீடுகள் அருகருகேயிருந்தால் அல்லது அடுத்த தெருவில் இருந்தால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது அவர்களையும் அழைத்துச் செல்லலாம். மாதாந்திர எரிபொருள் செலவை பங்கிட்டுக் கொள்ளலாம். அதேபோல ஒரே அப்பார்ட் மெண்ட்டை சேர்ந்தவர்கள் அங்கு குடியிருப்போரின் திருமணம், ரிசப்ஷன் போன்ற விசேஷங்களுக்கு தனித்தனியாக காரை எடுக்காமல் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து செல்வது நன்று.
குடும்பத்துக்கு ஒரு கார், ஒரு டூவீலர் போதுமே;
வெளிநாடுகளில் இருப்பது போல இங்கும் பல வீடுகளில் கணவன் மனைவி, மகன்/ மகளுக்கு தனித்தனி கார்கள் டூவீலர்கள் என்று இருப்பதை பார்க்க முடிகிறது. வெளிநாடுகளில் பொதுப் போக்குவரத்து வசதிகள் குறைவு. மேலும் தம்பதியர் இருவரும் பணிபுரியும் இடங்கள் வேறுவேறாகவும், பயணிக்கும் தூரமும் அதிகமாக இருப்பதால் அங்கு தனித்தனி கார்கள் அவசியம், ஆனால் இங்கு நிலைமை அப்படி இல்லையே? இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் தனக்கென தனி டூ வீலரை வாங்கிக்கொண்டு, பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து சென்று கூட்டி வர, மளிகை, காய்கறி வாங்க மட்டும் பயன்படுத்துகின்றனர். மற்ற நேரங்களில் அது சும்மா நிற்கும். அதற்கு இ.எம்.ஐ கட்ட, வண்டியை சர்வீஸ் செய்ய, இன்ஸ்யூரன்ஸ், பெட்ரோல் போட ஆகும் செலவைக் கணக்குப் போட்டால் நஷ்டமே மிஞ்சும். பிள்ளைகளை பள்ளிப் போக்குவரத்தில் அனுப்புவது சிறந்தது. அருகில் உள்ள மளிகைக் கடைகள், மார்க்கெட் போன்றவற்றுக்கு காலையில் அல்லது மாலையிலோ நடந்து சென்று வாங்கி வருவது. உடலுக்கும் நல்லது சாலையில் தேவையில்லாத வாகனங்களின் எண்ணிக்கையும் குறையும்
கொஞ்சம் பொதுநலமாகவும் யோசிப்போமே?
பொதுவாக கீழ்த்தட்டு மக்கள் தங்களுக்குள் ஏதாவது பிரச்சனை என்றால் ஒருவருக்கொருவர் உதவி கொள்வர். மேல் தட்டு மக்களும் அப்பர் மிடில் கிளாஸ் மக்களும் தனி ரகம். இவர்கள் உலகமும் தனி. மிடில் கிளாஸ் மக்களும் மேல் தட்டு மக்களைப் போல மாறி வருகிறார்களோ என்று ஐயம் ஏற்படுகிறது. தான், தனது என்ற சுயநல வட்டத்திற்குள்ளேயே சிக்கிக் கொண்டு, அதற்காகவே தனித்தனி கார், டூ வீலரில் செல்கிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து, இயற்கைக்கும், இந்த பூமிக்கும் தொடர்ந்து இன்னல்களை கொடுத்து வருகிறோம். கொரோனா வந்தபோது, ஊரடங்கு போடப்பட்டது போல வருடத்தில் சில நாட்களாவது தேவையின்றி வாகனங்களை வெளியே எடுக்கக் கூடாது என்ற சட்டம் போட்டால் தான், பூமித் தாய் கொஞ்சமாவது நிம்மதியாக மூச்சு விடுவாளோ?