

அந்த காலத்தில் பொதுவாகவே குழந்தைகளுக்கு சர்க்கரை கலந்த தண்ணீரை தான் பெரியவர்கள் கொடுப்பார்கள். யாராவது பிறந்த குழந்தையை பார்க்க வந்தால் கூட கையில் சர்க்கரையை கொண்டு வருவார்கள். குழந்தையின் நாக்கில் அதை தடவுவார்கள். இந்த பழக்கமானது நீண்ட காலமாக வழக்கத்தில் இருந்தது.
ஒரு சில பேர் வீட்டிலியே புழுங்கலரிசி, ஜவ்வரிசி போன்றவற்றால் ஆன கஞ்சியை செய்து அதில் சர்க்கரை மற்றும் பாலை கலந்து ஊட்டுவார்கள். ஆறு மாதத்திற்கு பிறகு இட்லி, பருப்பு சாதம், வேக வைத்த காய்கறிகள் என உப்பு கலந்த உணவையும் கொடுத்து பழக்குவார்கள். ஆனால், இப்போதோ குழந்தை நல மருத்துவர்கள் ஒரு வயது வரை உப்பு, சர்க்கரை, வெல்லம், தேன் என எதையுமே குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என்கிறார்கள்.
குழந்தைகளின் சிறுநீரகங்கள் சோடியத்தை கையாள முடியாது. மேலும் இனிப்பு உணவுகள் எதிர்கால ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்பதால், குழந்தைகளின் உணவுகளில் உப்பு, வெல்லம் அல்லது தேன் சேர்ப்பதைத் தவிர்க்கவே நிபுணர்கள் இவ்வாறு எச்சரிக்கிறார்கள். ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்களோ இது என்ன அதிசயமாக இருக்கிறது?
உப்பு சப்பில்லாம சாப்பாடு கொடுத்தால் குழந்தைகள் எப்படி உண்ணும் என்று குழந்தைகளின் பெற்றோர்களை கடிந்து கொள்கிறார்கள். இக்காலத்து பெற்றோர்களுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை என்றே சொல்லலாம். யார் பேச்சை கேட்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஏன் உப்பு சர்க்கரை போன்றவற்றை சேர்க்கக் கூடாது என்பதற்கான மருத்துவர்களின் விளக்கத்தை நான் hindustan times ல் வெளியிட்ட ஒரு செய்தியின் மூலமாக தெரிந்து கொண்டேன். அதை உங்களுக்கும் இப்பதிவில் பகிருகிறேன். என்ன என்று பார்க்கலாமா...
உப்பு குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்குமா??
12 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு உப்பு, சர்க்கரை உட்கொள்வதைத் தவிர்ப்பதற்கான விளக்கத்தை, நான் hindustan times ல் வெளியிட்ட ஒரு செய்தியின் மூலமாக தெரிந்து கொண்டேன். அதை உங்களுக்கும் இப்பதிவில் பகிருகிறேன்.
அக்கட்டுரையில்,
பெங்களூரு-ப்ரூக்ஃபீல்டில் உள்ள அப்பல்லோ தொட்டில் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் நியோனாட்டாலஜி மற்றும் குழந்தை மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் செந்தில் குமார் சதாசிவம் பெருமாள் (Dr. Senthil Kumar Sadasivam Perumal, Senior Consultant – Neonatology and Pediatrics, Apollo cradle and children's Hospital, Bengaluru-Brookefield)
அவர்கள் கூறுவதை பாப்போம்
"குழந்தைகள் முதிர்ச்சியடையாத சிறுநீரகங்களுடன் பிறக்கின்றன. அவர்களின் சிறுநீரகங்கள் சோடியத்தை சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள நேரம் எடுக்கும். சமைத்த அரிசி மற்றும் பருப்பில் ஒரு சிட்டிகை உப்பு கொடுத்தாலும் கூட அவர்களின் சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் பிற்காலத்தில் சிறுநீரக பிரச்னைகள் அல்லது உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம்.
குழந்தைகள் உட்கொள்ளும் உப்பு ஒரு நாளைக்கு ஒரு கிராமுக்கு குறைவாக இருக்க வேண்டும். இது தாய்ப்பாலிலோ அல்லது வேற பால் மூலமாகவோ முழுமையாகப் பெறப்படுகிறது. கூடுதல் உப்பு அவசியமில்லை, மேலும் இது குழந்தைகளுக்கு உப்பு நிறைந்த உணவுகளை விரும்பவும், எதிர்காலத்தில் மோசமான உணவு விருப்பங்களைக் கொண்டிருக்கவும் பயிற்சி அளிக்கும்," என்று கூறுகிறார்.
குழந்தைகளுக்கு சர்க்கரையா? வெல்லமா? எது நல்லது?
அதிகபட்ச மக்கள் பொதுவாகவே, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லம் மற்றும் தேனை ஆரோக்கியமானதாக கருதுகிறார்கள். "பொதுவாக இரண்டும் குறைவாக பதப்படுத்தப்பட்டவை என்றாலும், அவை இன்னும் செறிவூட்டப்பட்ட சர்க்கரை மூலங்களாகும், அவை குழந்தைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்" என்று டாக்டர் பெருமாள் விளக்குகிறார்.
"வெல்லம் அதன் இரும்புச் சத்துக்குப் பெயர் பெற்றாலும், பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களிலிருந்து உங்கள் குழந்தை பெறும் ஊட்டச்சத்துடன் ஒப்பிடும்போது அதன் அளவு முக்கியமற்றது" என்று நிபுணர் மேலும் கூறுகிறார்.
குழந்தைகளின் வயிறு மென்மையானது. மேலும் இனிப்பு உணவுகளால் அவற்றை நிரப்பும் போது ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அது ஒதுக்கித் தள்ளும். மேலும், இனிப்பு உணவுகளை சீக்கிரமாக அறிமுகப்படுத்தினால் இனிப்பு சுவைகளுக்கான விருப்பத்தை உண்டாக்கும். இது எதிர்காலத்தில் உடல் பருமன், நீரிழிவு, துவாரங்கள் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் (UNICEF) நடத்திய சமீபத்திய ஆய்வில், உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களை விட பருமனான குழந்தைகள் மற்றும் 15-19 வயதுக்குட்பட்டவர்களும் அதிகமாக உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில், தெற்காசியா உட்பட உலகின் சில பகுதிகளில் 2000 ஆம் ஆண்டு முதல் குழந்தைகளிடையே உடல் பருமன் இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 190 க்கும் மேற்பட்ட நாடுகளின் தரவுகளின்படி, ஐந்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் ஒருவர் உடல் பருமனாக உள்ளனர்.
குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது பாதுகாப்பானதா?
தேன் தேவையற்றது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு ஆபத்தானதும் கூட என்கிறார் டாக்டர் பெருமாள். "சிறிதளவு தேனில் கூட, குழந்தைகளில் போட்யூலிசத்தை(botulism) ஏற்படுத்தும் க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம் பாக்டீரியாவின் வித்துக்கள் இருக்கலாம். இந்த அரிய, ஆனால் ஆபத்தான நோய் குழந்தைகளின் செரிமான அமைப்புகள் இந்த வித்துகளைக் கையாளும் அளவுக்கு முதிர்ச்சியடையாததால் ஏற்படுகிறது.
அதனால்தான், 12 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு, அதன் மூலாதாரம் அல்லது தூய்மை எதுவாக இருந்தாலும், தேனைக் கொடுக்கக் கூடாது என்று குழந்தை மருத்துவர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கின்றனர்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஆறு மாதத்திற்கு பிறகு எப்படிபட்ட உணவை கொடுக்கலாம்?
ஒரு குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனவுடன், பெற்றோர்கள் இயற்கையாகவே சுவையான மற்றும் சத்தான பல்வேறு உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
பூசணி, கேரட், பீட்ரூட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பட்டாணி மற்றும் சுரைக்காய் ஆகியவை முக்கியமான ஊட்டச்சத்தை வழங்குகின்றன மற்றும் இனிப்பு சுவை கொண்டவை, ஆகவே இத்தகைய காய்கறிகளை உப்பு சேர்க்காமல் அப்படியே வேக வைத்து கொடுக்கலாம்.
மசித்த வாழைப்பழம், ஆப்பிள் கூழ், பப்பாளி, மாம்பழம், சீகூ மற்றும் பேரிக்காய் போன்ற இயற்கையாகவே இனிப்புப் பழங்களும் முக்கியமான வைட்டமின்களை வழங்குகின்றன. பருப்பு வகைகளையும் தானியங்களையும் நன்றாக வேக வைத்து உப்பு அல்லது சர்க்கரை சேர்க்காமல் அப்படியே கொடுக்கலாம் அல்லது பாலில் கலந்து கொடுக்கலாம் என்று டாக்டர் பெருமாள் கூறுகிறார்.
‘நீண்டகால ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உணவு தொடர்பான விருப்பங்களை வளர்ப்பதற்கு குழந்தை பருவம் அவசியம். உப்பு, சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் ஆகியவற்றை உண்ணாமல் இருப்பது சமரசம் செய்வது பற்றியது அல்ல, மாறாக குழந்தையின் வளரும் உறுப்புகளைப் பாதுகாத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவது' என்பதே நிபுணர்களின் கருத்து.