வாஷிங் மெஷினில் குவிக் வாஷ் போடுவது நல்லதா?

Quick wash in Washing machine
Quick wash in Washing machine

- மதுவந்தி

வாஷிங் மெஷினில் பெரும்பாலும் குவிக் வாஷ் போடுபவரா நீங்கள்? ஆம் எனில் கண்டிப்பாக இதைப் படியுங்கள்…

இப்பொழுது பெரும்பாலான வீடுகளில் ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் எனப்படும் தானியங்கி துணி துவைக்கும் இயந்திரமே பயன்படுத்தப்படுகிறது. நேரத்தை மிச்சப்படுத்துவதோடு சுலபமாக வேலையையும் செய்துமுடிக்கவும் வாஷிங் மெஷின் மிகவும் உதவுகிறது. துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துப்போட்டு, சலவைத்தூள் போட்டு மெஷின்னை ஆன் செய்தால் போதும். அதுவே துணியைத் துவைத்து தந்துவிடும்.

பெரும்பாலும் மக்கள் தேர்ந்தெடுப்பது குவிக் வாஷ் எனப்படும் வேகமாக துவைக்கும் முறையைத்தான். இதில் துணிகளை பதினைந்து நிமிடம் முதல் அரைமணி நேரத்திற்குள் சலவை செய்துவிட முடியும். ஆனால், அவ்வாறு துவைக்கும் துணிகள் நாளடைவில் சீக்கிரம் நஞ்சிபோவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதற்கான காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்.

குவிக் வாஷ் என்பது, வெகு சில, லேசான அழுக்குள்ள துணிகளை அவசரமாகத் துவைக்கத் தேவை இருக்கும்பொழுது மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்காக மட்டுமே கொடுக்கப்பட்ட வசதி அது.

வேர்வையினால் வரும் கிருமிகளும் குவிக் வாஷில் அழிவது கடினம் ஏனெனில் குவிக் வாஷில் கிருமிகள் அழியும் அளவிற்குத் துவைக்கும் நேரமோ நீரின் சூடோ இருப்பதில்லை.

ஆனால், பெரும்பான்மையான மக்கள் தினமும் சேரும் ஒரு குடும்பத்திற்கான துணிகளை அன்றன்றே துவைக்க குவிக் வாஷ் முறையை உபயோகப்படுத்துகிறார்கள். அவ்வாறு உபயோகப்படுத்தும்போது சலவைத்தூள் அல்லது சலவை திரவம் துணிகளில் தங்கிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது துணிகளின் ஆயுளைக் குறைப்பதோடு சருமம் சம்பந்தப்பட்ட நோய்களையும் உருவாக்கும். துணிகளில் உள்ள அழுக்கு அல்லது கறையும் போவது கஷ்டமாகிறது.

பலர் துணிகளை குவிக் வாஷில் போடுவதற்கான காரணம் மின்சார செலவைக் குறைப்பதற்காகவும்தான், ஆனால், மின்சார சிக்கனம் எத்தனை முறை மெஷினை நாம் உபயோகப்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளதே தவிர சீக்கிரம் முடியும் என்பதினால் அல்ல. அதே போலத்தான் வாஷிங் மெஷினின் ஆயுள் காலமும். எத்தனை முறை நாம் உபயோகப்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது.

இதையும் படியுங்கள்:
சுறுசுறுப்பான ஓய்வு என்றால் என்ன தெரியுமா?
Quick wash in Washing machine

இதற்கு சரியான தீர்வு துவைக்க வேண்டிய துணிகளின் அளவையும், அவற்றில் பதிந்திருக்கக்கூடிய கறை மற்றும் அழுக்கைப் பொறுத்தும் துணி துவைக்கும் முறையை தேர்ந்து எடுப்பதுதான். ஒரு குடும்பத்திற்கான தினசரி துணிகளை தோய்ப்பதற்கு நார்மல் வாஷ் அல்லது ஸ்டாண்டர்ட் வாஷை உபயோகப்படுத்துவது சிறந்தது. அதேபோல மெல்லிய துணிகளுக்கு டெலிகேட் முறை சிறந்தது. துணிகளின் நிறம், அதன் தன்மைக்கும், படிந்திருக்கும் கறை அல்லது அழுக்கின் தீவிரத்திற்கேற்ப துவைக்கும் முறையை உபயோகப்படுத்துவது எப்பொழுதும் நல்லது.

எனவே, வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும்பொழுது கவனத்துடன் உபயோகப்படுத்துவதும், சரியான முறையைத் தேர்ந்து எடுப்பதும் துணிகளின் ஆயுள் காலத்தையும் மெஷினின் ஆயுள் காலத்தையும் நீடிக்கும் என்பதில் அய்யமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com