வீடு என்பது எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பது முக்கியமல்ல, அதில் எவ்வளவு சந்தோஷம் நிறைந்திருக்கிறது என்பதுதான் முக்கியம். வீடு என்பது நம்முடன் சேர்ந்து வாழும் மனிதர்களால் முழுமை அடைகிறது. அது தங்குவதற்கான கூடாரம் மட்டுமல்ல, நம்முடன் சேர்ந்து வாழும் மனிதர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நாமும் சந்தோஷமாக இருப்பதுதான்.
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான குறிப்புகள்:
உணர்வுகளுக்கு மரியாதை: வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பது அவசியம். கணவனோ, மனைவியோ யாராக இருந்தாலும் குடும்ப நிர்வாகத்தை முழுமையாகப் பொறுப்பேற்று நடத்தும்பொழுது வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களின் உணர்வுகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். அவர்களின் மனமும் புண்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.
அவசர முடிவுகள் கூடாது: அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சிறப்பாக இருக்காது. எதையும் நின்று நிதானித்து, சிந்தித்து எடுக்கும் முடிவுகள் நல்லதாக இருக்கும். வீட்டிலுள்ள மற்றவர்களின் எண்ணத்தையும் கருத்தில் கொண்டு எடுக்கும் முடிவுகள் சிறப்பாகவே அமையும்.
மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவது: குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவது நம் கையில்தான் உள்ளது. மகிழ்ச்சியின் அலைகள் நம் மீது விழ முதலில் நம்மை நாம் நேசிக்கத் தொடங்க வேண்டும். வாழ்க்கையை முழுமையாக வாழ சந்தோஷம், நிம்மதி அவசியம். தேவையில்லாத விஷயங்களுக்கு கோபப்படுவதும் வருத்தப்படுவதும் மகிழ்ச்சியான சூழலை பாதிக்கும். நிதானத்துடனும் சமநிலையுடனும் விஷயங்களை கையாளும்பொழுது பிரச்னைகள் பெருமளவில் குறையும்.
சுற்றத்தாருடன் பழகுதல்: உறவினர்கள், நண்பர்களுடன் நல்ல ஒரு பந்தத்தை அமைத்துக்கொள்வது ஆரோக்கியமான மனநிலையை உருவாக்கும். அடிக்கடி சந்தித்து உறவையும், நட்பையும் வளர்த்துக்கொள்வது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். முடிந்த அளவு அனைவரிடமும் அன்புடனும் கருணையுடனும் இருப்பது மகிழ்ச்சியான சூழலை உண்டாக்கும்.
சின்னச் சின்ன சந்தோஷங்களையும் அனுபவித்தல்: சிலர் எப்போதும் வேலை வேலை என்று வாழ்நாள் முழுக்க ஓடிக்கொண்டே இருப்பார்கள். அப்படி நம்மை தியாகியாக உருவகப்படுத்திக்கொண்டு சின்னச் சின்ன சந்தோஷங்களையும் தூக்கி எறிய வேண்டாம். சமயம் கிடைக்கும்பொழுது குடும்பத்துடனும் நேரத்தை செலவிடுங்கள். மனைவி, குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசுவதும், சின்னச் சின்ன அவுட்டிங் செல்வதும் என சந்தோஷங்களை அனுபவியுங்கள்.
எந்த விஷயத்தையும் சமநிலையுடன் அணுகுதல்: பாரபட்சமின்றி எந்த விஷயத்தையும் சமநிலையுடன் அணுகுவது அவசியம். கடினமான சூழ்நிலையிலும் அமைதி மற்றும் சமநிலையை வெளிப்படுத்தும் திறன் முக்கியம். பலத்த காற்றிலும் கூட நிமிர்ந்து சமநிலையில் இருக்கும் பாய்மரப்படகின் பாய் மரங்கள் காற்றில் அசைந்தாலும் அவை மையமாகவே இருக்கும். அதுபோல கடினமான சூழ்நிலைகளில் சூழ்நிலையின் யதார்த்தத்தை புரிந்துகொண்டு உணர்ச்சிவசப்படாமல் உறுதியுடன் சமநிலையில் செயலாற்ற வேண்டும்.