‘என் பெண்ணுக்கு சமைக்கத் தெரியாது என்று பெருமையாக சொல்லும் பெண்ணைப் பெற்ற பெற்றோர், எனது பையனுக்கு சம்பாதிக்கத் தெரியாது என்று சொன்னால் ஏற்றுக்கொண்டு பெண் கொடுப்பார்களா?’ என்று இப்போது பிள்ளை வீட்டுக்காரர்கள் அடிக்கடி பேசும் டயலாக் காதில் விழுகிறது. இதை இப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது. பெண்ணுக்கு சமைக்கத் தெரியாது என்பதை விட, சமைக்க நேரம் இல்லை என்பதுதான் உண்மை. படிக்கிறாள்; படிக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து விடுகிறது. நல்ல சம்பளம் தருவதால் வேலையும் பிழிந்து எடுத்து விடுகிறார்கள். வீட்டுக்கு வந்தும் ஃபாரின் கால் அட்டென்ட் பண்ண வேண்டியுள்ளது. வேலைக்கு ஓடும் நேரத்தில் சமைப்பதற்கு எல்லாம் அவளுக்கு நேரம் இருப்பதில்லை. இது ஒரு உண்மையான காரணம்.
சமையல் என்பது பெண் மட்டுமே செய்யும் ஒரு சாதாரண, கடைநிலை வேலை அல்ல. அதனை ஆணும் செய்யலாம். அதனால் ஒன்றும் குறைந்து விட மாட்டார்கள். ஒரு உண்மையை இப்போது உரக்க சொல்லத் தோன்றுகிறது. தற்போது நிறைய பெற்றோர்கள், ‘எனது பையனுக்கு 40 வயசு ஆச்சு, பெண்ணே கிடைக்கவில்லை. நன்றாக சம்பாதிக்கிறான். இருந்தும் கிடைக்கவில்லை’ என்கிறார்கள். இதற்குக் காரணம் பழைமையில் ஊறிப்போய் தனது பிள்ளைகளிடம், ‘வேலைக்கு மட்டும் செல், அடுப்படி பக்கம் வராதே. இது பெண்களின் வேலை’ என்று பழகிவிட்டு, பெண் தேடினால் எப்படிக் கிடைக்கும்?
பெண்களும் வேலைக்குச் செல்வதால் காலை முதல் இரவு வரை அவர்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு ஈடுகட்டும் வகையில் ஆண்களும் சம்பாதிப்பதுடன் வீட்டு வேலைகளையும் தெரிந்து வைத்துக்கொண்டு உதவுவதில் தவறில்லை. இரண்டு பேரும் சேர்ந்து சம்பாதிப்பது போல், இரண்டு பேரும் சேர்ந்து வீட்டு வேலை செய்வதுதான் சரி. இதைப் புரிந்து கொண்டு செயல்படும் ஆண் பிள்ளைகளுக்குக் விரைவில் கல்யாணம் ஈசியாக நடந்து விடுகிறது. காலம் மாறிவிட்டது அதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். நூறு வருடத்துக்கு முன்பு, ‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ என்று பாடின பாரதியாரே ஒரு ஆண்தானே.
சமையல் என்பது மிகவும் அத்தியாவசியமான விஷயம். அதை தெரியாது என்று பெண் மற்றும் பிள்ளைகள் இருவருமே சொல்வது தவறு. பெண் என்பவளுக்கு சமைக்கவும் தெரியும், சம்பாதிக்கவும் தெரியும். ஆனால், பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்வதே சமைக்கத்தான் என்கிற மாதிரி பேசுவது மிகப்பெரும் தவறு.
மாறிவரும் கடினமான பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப ஆண், பெண் இருவருமே வேலைக்குச் செல்வது போல், சமைக்கவும் தெரிந்திருக்க வேண்டும். வெளிநாடுகளில் யாரும் இப்படி வீட்டு வேலைகளைப் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒருவருக்கொரு உதவியாகத்தான் இருக்கிறார்கள்.