கணம் நீதிபதி அவர்களே!

கணம் நீதிபதி அவர்களே!

திப்பிற்குரிய நீதிபதி அவர்களே, இன்று எத்தனை பேருக்கு தீர்ப்பு எழுதிவிட்டு வந்தீர்கள்? பதற்றப்பட வேண்டாம். இந்தக் கட்டுரை எதோ நீதிமன்றத்தில் வீற்றிருக்கும் நீதிபதிகளுக்கானது இல்லை. நம்மைப் போன்ற சாதாரண மக்களையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளேன். ‘நாம் தான் நீதிபதியின் இருக்கையிலும் அமரவில்லை; நம் கையில் மரத்தாலான ‘அந்த’ சிறிய கைச்சுத்தியும் இல்லையே, அப்படியிருக்கையில் நம்மை நீதிபதி என்று அழைப்பதன் காரணம் என்ன?’ என்று நிறையவே குழம்பிப்போய் இருப்பீர்கள்.

ஒருவர் தன் அலைபேசியைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தால், அந்த நபர் நிச்சயமாக ‘ஏதோ ஒரு மாதிரியான’ விஷயத்தை பார்த்து தான் சிரிக்கிறார் என்று எத்தனை முறை தீர்மானித்து இருப்பீர்கள். அதுவே ஒரு இளம் பெண்ணாயிருப்பின், தன்னுடைய காதலனுடன் தான் சாட் செய்து கொண்டிருக்கிறாள் என்ற முடிவுக்கு வந்துவிடுவோம். இந்த மாதிரி இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ஒருவர் அழகாக உடை உடுத்திக் கொண்டாலோ அல்லது அலங்கரித்துக் கொண்டாலோ மற்றவர்களின் கவனத்தை கவருவதற்காகத் தான் என்று புரிந்து கொள்கிறோம். இம்மாதிரி உதாரணங்களை அடுக்கிகொண்டே போனால், சீனப் பெருஞ்சுவரே சிறிதாக தென்படும்.

இந்த மாதிரியான முடிவுக்கு வருவது சரியா, தவறா என்று ஆலோசிப்பதைக் காட்டிலும், இது தேவையா இல்லையா என்று சிந்திக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி சரியாக தெரிந்து கொள்ளும் முன்னே அவர்கள் இப்படிதான் என்று முத்திரை குத்துவதால் யாருக்கு என்ன பயன்? இவ்வாறு நடப்பதற்கு முக்கியக் காரணம், பார்த்தவுடனே நம்மை பற்றியும் மற்றவர்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்ப தேயாகும். என்னதான் இது முழுக்க முழுக்க தேவையில்லாத மற்றும் அர்த்தமில்லாத வேலையாக இருப்பினும், இது ஏற்படுத்தும் தாக்கம் மிக வலுவானது.

சில வருடங்களுக்கு முன், ஒருவருடன் பழகியிருப்போம். அப்பொழுது அவருடைய சில நடவடிக்கைகள் நமக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். இன்று அவரை சந்திக்க நேரிட்டால் அவர் இன்னும் அதே பழக்கங்களைக் கொண்டுள்ளார் என்ற சிந்தனையிலேயே அவரிடம் பேசத் தொடங்குவோம். காலகட்டத்திற்கு ஏற்றவாறு நம்மிடமும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும். அந்த நபரிடமும் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நாம் ஏற்கனவே நம் மனதில் அவரைப் பற்றி உருவாக்கி வைத்த ‘அர்த்தமில்லா அனுமானம்’ அல்லது பிம்பமானது அந்நபரின் புதிய மாற்றத்தை ஏற்க விடாமல் தடுக்கிறது. அந்த மாற்றமானது நேர்மறையாகவும் இருக்கலாம் அல்லது எதிர்மறையாகவும் இருக்கலாம்.

இந்த சூழ்நிலை நீடித்துக் கொண்டேபோனால், கடைசியில் நமக்கு எந்தவொரு மனிதரின் மீதும் நம்பிக்கை வராது. சிலர் மேல் நாம் வைத்திருந்த துளி நம்பிக்கையும் ‘டாடா’ காட்டிவிடும். விளைவாக, யாருடனும் எந்தவொரு உண்மையான உறவும் கொள்ள முடியாமல் தனிமையில் தவிப்போம். இங்கு தனிமை என்று குறிப்பிட்டது மனதளவில் தனிமைப்பட்டு இருப்பதை [சில தத்துவவாதிகளின் கவனத்திற்கு].

அதன் விளைவுகள் இத்துடன் நின்றால் தான் பரவாயில்லையே! அமெரிக்காவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆன் ஏஜிங் [National Institute On Aging] நடத்திய ஆராய்ச்சியின் படி, நீண்ட காலத்திற்கு தனிமையில் இருக்கும் நபர்களின் உடல்நிலையானது, ஒரே நாளில் பதினைந்து சிகரெட் பிடிப்பதற்கு சமமாகும். மேலும், இவ்வாறு தொடர்ந்து வாழ்ந்து வந்தால், அந்த நபரின் ஆயுள் காலத்தை பதினைந்து ஆண்டுகள் குறைக்கிறது. ஒரு சிறு பயனற்ற கணிப்பு, சங்கிலித் தொடர் விளைவு போல [Chain reaction] உருமாறி, நம் வாழ்வை நாமே கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொள்வதற்கு சமமாகிறது.

மிகவும் சிரத்தையுடன் நுண்மையாக அடுக்கி வைக்கப்பட்ட ஒரு அழகான கண்ணாடி கிளாஸ் அலங்காரமானது, அடியில் இருக்கும் ஒரே ஒரு கிளாஸ் நகர்ந்ததால், முழுவதும் இடம் மாறி, நழுவி, அலங்காரம் உருக்குலைந்து, மேசையிலும், தரையிலும் பட்டு சிறிய துகள்களாக உடைந்து சிதைந்து போனால் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறு தான் நம் வாழ்வும் மாறிவிடுகிறது, நம் மனதில் இருக்கும் சின்ன பிம்பத்தினால். இந்த இடத்தில், அடியிலிருக்கும் கிளாஸ் நம் மனது; அலங்காரம் நம்முடைய வாழ்க்கை.

நாம் மற்றவைகளைப் பற்றி அனுமானம் செய்வதால், இந்த பூமி சுற்றாமல் ஒன்றும் நின்றுவிடப் போவதில்லை தான். ஆனால் என்ன, அந்த அழகான கண்ணாடி கிளாஸ் அலங்காரம் தான் முடிவில் சிதைந்த நிலையில் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com