வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க இந்த 6 விஷயங்களை கடைப்பிடித்தால் போதும்!

Just follow these 6 things to be at peace in life
Just follow these 6 things to be at peace in lifehttps://www.flickr.com

ருவருக்கு என்னதான் பணம், புகழ், பதவி, அந்தஸ்து, அதிகாரம் எல்லாம் இருந்தாலும் நிம்மதி இல்லாவிட்டால் வாழும் வாழ்க்கையே வீண் என்று தோன்றும். மனிதர்களின் அதிகபட்ச விருப்பமே நிம்மதியோடு வாழ்வதுதான். அந்த நிம்மதி கிடைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. நன்றி உணர்வுடன் இருப்பது: நீங்கள் ஒரு பெரிய பங்களாவிலோ அல்லது குடிசை வீட்டில் இருந்தாலும் சரி, பெரிய பதவியிலோ அல்லது சிறிய வேலை செய்பவராக இருந்தாலும் சரி உங்களுக்கு இந்த வாழ்க்கை கிடைத்ததற்காக மனதார இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். 'கடவுள் என்னை இந்த நிலையில் நன்றாக வைத்திருக்கிறார்' என்கிற நன்றி உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். வாழ்க்கையில் இன்னும் இன்னும் வேண்டும் என்று எண்ணி ஏங்குவதை விட, இருப்பதை வைத்து சந்தோஷப்படுவதுடன் அதற்கு நன்றியும் பாராட்டும்போது நிம்மதி தானாக வரும். நன்றி உணர்வு வாழ்வில் மேலும் மேலும் பல ஏற்றங்களை தரும்.

2. இந்த நிமிடம்தான் இனிமையானது: மனிதர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு நிகழ்காலத்தில் வாழாமல் எப்போதும் கடந்த காலத்தைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைகளையும் ஏக்கங்களையும் சுமந்துகொண்டே இருப்பதுதான். அப்படி இருப்பவர்களால் நிகழ்கால சந்தோஷத்தை அனுபவிக்கவே முடியாது. எப்போதும் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். 'இந்த நிமிடம் மிகவும் இனிமையானது. நான் இதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்' என்று நினைப்பவர்கள் நிம்மதியை அடைகிறார்கள். கடந்த கால தவறுகளை நினைத்து அழுவதும் எதிர்காலத்தைப் பற்றி அச்சப்பட்டு கொண்டே இருப்பதும் நிகழ்காலத்தை நரகமாக்கி விடும்.

3. பிறரை அவசர அவசரமாக மதிப்பிடாதீர்கள்: ஒருவருடன் பழக ஆரம்பிக்கும்போதே அவரைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம். அந்த அளவுகோலை மனதில் வைத்துக் கொண்டு அவருடன் பழக ஆரம்பிக்கிறோம். ஆனால், நம் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் அவர் இல்லை என்னும் போது அவர் மேல் வெறுப்பு வருகிறது. எந்த மனிதரையும் மதிப்பீடு செய்வதில் அவசரப் படக்கூடாது. அவர்களுடைய நிலையிலிருந்து யோசிக்க வேண்டும். ‘எம்பத்தி’ என்கிற அனுதாப உணர்ச்சி எப்போதும் ஒரு மனிதருக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பிறரை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அப்போது அவர் மேல் கருணையும் அன்பும் தோன்றும். அந்த நட்பும் உறவும் நீடித்து இருக்கும். அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் கூட மன்னிக்கும் மனப்பான்மை வரும்.

4. காத்திருக்கும் பொறுமை வேண்டும்: எந்த விஷயத்திலும் முன்னேற்றமோ வெற்றியோ கிடைக்கும் வரை பொறுமையாகக் காத்திருத்தல் அவசியம். எந்த மனிதரும் வாழ்க்கையில் மிகக் குறுகிய காலத்தில் முன்னேறி விட முடியாது. நாம் ஆசைப்பட்டதை அடைய அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். அதேசமயம் காலம் கனியும் வரை பொறுமையாக காத்திருத்தல் வேண்டும். உடனே பலனை எதிர்பார்த்தால் நிம்மதியை இழந்து விடுவோம்.

இதையும் படியுங்கள்:
நெஞ்சில் சளியா? சித்த மருத்துவம் சொல்வதென்ன? விளக்குகிறார் சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியம்!
Just follow these 6 things to be at peace in life

5. மகிழ்ச்சி மனதிற்குள்தான் இருக்கிறது: எந்த ஒரு மனிதனுக்கும் மகிழ்ச்சியை பிறர் வழங்க முடியாது. தான் தான் மகிழ்ச்சியை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அரண்மனையில் பட்டாடை அணிந்து, அறுசுவை உணவு உண்டு, சேவகர்கள் புடை சூழ, பஞ்சு மெத்தையில் படுத்துக்கொண்டிருக்கும் ஒரு நபர் கூட முழுக்க முழுக்க மகிழ்ச்சியாக இருப்பார் என்று சொல்ல முடியாது. அது அவருடைய மனதிற்குள் இருந்துதான் வர வேண்டும். தான் எந்த நிலைமையில் இருந்தாலும் சரி, வாழ்க்கையில் என்ன கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, சந்தோஷமாக இருப்பேன் என்று தீர்மானம் செய்து கொள்ளும் நபர் எல்லாவிதமான சூழ்நிலையிலும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார். விலை உயர்ந்த கார், வீடு போன்ற வசதிகள் இருந்தால் மட்டும்தான் நான் சந்தோஷமாக இருப்பேன் என்று சொல்லும் மனிதனால் எந்த நாளும் நிம்மதியோ, சந்தோஷமோ அடைய முடியாது.

6. ஒவ்வொரு நாளும் புதிய நாளே: பள்ளிக்குச் செல்லும் குழந்தை இன்று பள்ளியில் என்ன பாடம் சொல்லித் தருவார்களோ, என்ன வீட்டு படம் தருவார்களோ என்று எதிர்பார்க்கும். அதுபோல வாழ்க்கை என்ற பள்ளிக்கூடம் தினம் புதிய புதிய அனுபவங்களையும் புதிய புதிய பாடங்களையும் ஒரு மனிதனுக்குக் கற்றுத்தரும். அதேசமயம், அவனுக்குத் தேவையான வாய்ப்புகளையும் வழங்கி முன்னேற்றத்தையும் தரும். அதேபோல தோல்வியை சந்தித்தாலும் இது இன்றைக்கான பாடம் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இருப்பவர்களால் நிம்மதியாக இருக்க முடியும்.

இந்த 6 விஷயங்களை ஒருவர் கடைப்பிடித்தால் வாழ்வில் நிம்மதியாக இருக்க முடியும் என்பது திண்ணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com