காதலாவது கத்தரிக்காயாவது?

காதலாவது கத்தரிக்காயாவது?

‘காதலாவது கத்தரிக்காயாவது’ என்பதன் அர்த்தம் என்ன? இணையத்தைக் கேட்டால், அது தரும் பல அர்த்தங்களைப் படித்து புரிந்துகொள்வதற்குள், ‘விட்டுத்தள்ளு, இப்ப இதைத் தெரிஞ்சுக்கிட்டு என்ன செய்யப்போறோம்’ என்று தோன்றிவிடும். சரி, காதல் திருமணம் பற்றிப் பேசுவோம்.

பெற்றோர்கள் ஒரு காலத்தில் ‘காதல்’ என்ற சொல்லைக் கேட்டாலே கெட்ட வார்த்தை கேட்டதைப்போல் ஷாக் ஆகி நிற்பார்கள். இன்று சரளமாகப் பேசப்படும் கெட்ட வார்த்தைகளைக் கேட்டு ஷாக் ஆகிக் கட்டுப்படியாகாது என்ற நிலையில், காதல் ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

அந்தக் காலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியரில் பல பேர் கூட, இன்று தங்கள் பிள்ளைகள் காதலிக்கும்போது கலவரப்படுகிறார்கள். காரணம், மாணவப் பருவத்திலேயே காதலிக்கத் தொடங்கி, அடுத்தடுத்து என்று அவர்கள் செல்லும் வேகமும், அதனால் விளையக்கூடிய பின்விளைவுகளையும் பார்த்து, ‘நல்லபடியாக இவர்கள் செட்டில் ஆகவேண்டுமே’ என்ற ஆதங்கம்.

தன் காலில் நின்று, திருமணத் தருவாயில் காதல் வயப்படும் நிலையை எடுத்துக்கொள்வோம். காதல் என்றவுடன், வேறு ஜாதி, வேறு மதம் இருக்கக்கூடாதே என்று பெற்றோர் பயப்பட்ட காலம் உண்டு அல்லது நிறைய பணம் இருப்பவர்கள், ஒரு ஏழையை அல்லது வசதி குறைவான வாழ்க்கைத் துணையைத் தேடிவிடக் கூடாதே என்று பயப்படுவார்கள். இன்றைய உண்மை நிலை என்னவென்றால், ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து, அவரோடு நல்லபடியாக வாழ்ந்தாலே போதும் என்கிற நிலை. பெற்றோருடன் எல்லாம் கூட்டுக்கூடும்பம் நடத்த வேண்டாம். நீங்கள் இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தினாலே போதும் என்கிறோம்.

காதலிப்பவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் பெற்றோரிடம் சொன்னால், அவர்களைத் தங்கள் வாழ்க்கைக்கு பொறுப்பேற்றுக் கொள்ள ஊக்குவித்து, அவர்களது புதிய பயணத்துக்குத் தேவைப்படும் உதவியைத் தந்து அவர்களை நாம் வாழ்த்த வேண்டும். ஜாதி, உறவுமுறை, சொத்து, அந்தஸ்து என்றெல்லாம் யோசித்து பிடிக்காத திருமணத்துக்கு அவர்களை நிர்பந்தம் செய்வது இனி பொருந்தாது.

‘கல்யாணம் ஆயிடுச்சுன்னா அப்புறம் சரியாபோகும், அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க’ என்றெல்லாம் நினைத்து அவசரப்படக்கூடாது. அப்படிச் செய்தால் திருமணம் செய்து முடித்து, செலவுக் கணக்கை சரிபார்ப்பதற்கு முன், ‘கம்பேடபிலிட்டி’ இல்லை என்று பிரிந்துவிடுவார்கள். கணவன், தனது குடும்பத்தை கவனித்துக்கொள்ள ஒரு பெண்ணையும், மனைவி வேலைக்குச் சென்று சம்பாதித்து தரும் ஒரு ஆணையும் இன்று எதிர்பார்ப்பதில்லை; தங்களுக்கு அன்யோன்யமான, நட்பான துணைக்குத்தான் ஆசைப்படுகிறார்கள். இரண்டு பேருக்குமே கனவும், லட்சியமும் இருப்பதால் வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்.

காதல் திருமணத்தில் குறைந்தது இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, காதலிக்கும் காலத்தில் புரிந்துகொண்டு, சண்டை போட்டு, விட்டுக் கொடுத்து, கொஞ்சிக் குலாவி, கஷ்டத்தில் தோள் கொடுத்து என்ற பலவற்றையும் தாண்டி வந்திருப்பார்கள். அதனால், திருமணத்தில் புரிந்துகொண்டு வாழும் சாத்தியக் கூறுகள் அதிகம். இரண்டு, அது தாங்களாகவே தேர்ந்தெடுத்த துணை என்பதால், பிரச்னை வரும்போது முடிந்தவரை தப்பித்துப்போக நினைக்காமல், இருந்து சரி செய்ய முயல்வார்கள். இல்லையென்றால் பெற்றோர், ‘இதுக்குத்தான் அப்பவே சொன்னேன், இந்த காதல் கத்தரிக்காயெல்லாம் சரிப்படாதுன்னு’ என்று சொல்லிவிடுவார்கள் என்ற பயம் கொஞ்சமாவது இருக்கும். பெற்றோர் முன்னால் தோற்றுப்போகக் கூடாது என்பதற்காகவாவது சேர்ந்து வாழ முயற்சி எடுப்பார்கள்.

எத்தனையோ காதல் திருமணங்களும்தான் உடைகின்றதே என்றால், அதுவும் சரிதான். ஆனால், இன்னும் எத்தனை தலைமுறை பெற்றோர்கள், துணையைத் தேர்ந்தெடுக்கும் பணியை செய்ய முடியும்? காதல் வயப்படவில்லையென்றால், ‘பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்’ என்ற வழக்கம் சற்றே மாறி, ‘பெற்றோரால் பரிந்துரைக்கப்பட்ட ஜோடி’யாக இருக்கலாம். இருவருக்கும் ஒரு இன்ட்ரொடக் ஷன் தந்த பிறகு, அவர்கள் இருவரும் பேசிப் புரிந்துகொண்டு மனதார சம்மதிப்பது சிறந்தது.

ஒரு நெடுங்கால துணையோடுதான், நல்ல பந்தம் வளர முடியும். அதற்கு இந்தத் திருமணம் வழிவகுக்கிறது. இன்றைய பெண்ணுக்கோ, ஆணுக்கோ, லைஃப் பார்ட்னர் மற்றும் அன்யோன்யமான ஃப்ரெண்ட் தேவைப்படுகிறது. அது கிடைப்பதற்கு நாம் உதவலாம், இல்லை தடையாக இல்லாமலாவது இருக்கலாம். அன்பான குடும்பங்கள்தானே ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com