கவிதை: இங்கிதம்!
‘இங்கிதம்’ இங்கு
எல்லோரும் கடைப்பிடித்தால்
வருத்தங்கள் போகும்!
வாழ்க்கை மணக்கும்!
அன்பு பெருகி
அனைவரின் மனத்திலும்
இன்பம் தேங்கும்!
இதயம் பலப்படும்!
அமைதி மனதில்
ஆறாய் ஓடும்!
என்ன அதுவென்று
எல்லோர்க்கும் தெரியுந்தானே!
‘இங்கு இதம்’
என்பதே அதன்பொருள்!
சூழ்நிலை அறிந்து…
சுற்றியுள்ளோர் எவரும்…
மனங் கோணாமல்…
மகிழ்வு குறையாமல்…
பார்த்துக் கொள்வதே
பக்குவப்பட்டோரின் பக்குவம்!
இங்கிதம் என்பதற்கு
சமயோசிதம்…பொது அறிவு…
நன்னடத்தை…நாகரீகம்…
நாசூக்கு…இனிமை…
என்றெல்லாம் கூட
இனிய தமிழ்
பொருள் கூறும்!
இவைகள் அனைத்தையும்
இப்பிறவி முழுவதுமே
பின்பற்றி வாழ்ந்திடுவோம்!
வார்த்தைகள் பலசமயம்
வாழ்க்கைப் பாதையையே
தடம் மாற்றிப்
போட்டு விடும்!
தக்க வழி
காட்டி விடும்!
இங்கிதம் அறிந்தோரை
இவ்வுலகம் பாராட்டும்!
பாராட்டு தன்னிலே
பலசோகம் கரைந்துவிடும்!
சோகம் காலியாக…
சுகமங்கு நிரம்ப…
மனத்தின் உள்ளே
மகிழ்வு குறுகுறுக்கும்!
குறுகுறுக்கும் எதுவுமே
குறைவில்லா ஊக்கத்தை
உடலில் ஓடவிடும்!
உட்குருதி வேகங்கொண்டு…
உடலை இளமையாக்கி…
உரமேற்றி வயதைக்கூட்டும்!
இங்கிதத்தால் பலவற்றை
எளிதாக அடைந்திடலாம்!
நட்பு வளரும்!
நனிபகை பயந்தோடும்!
மனவமைதி கூடிவிடும்!
மனச்சுமைகள் குறைந்துவிடும்!
மேலும் பலசொன்னால்
இங்கிதம் அறியாதவன்
இவன்என்று நீங்களும்
புலம்புவீர்கள்! உண்மைதானே?!