அட! ஐந்தே நிமிடங்களில் 'பளிச்' கிச்சன்! என்ன மேஜிக்கோ?

கிச்சனில் பல்லி, கரப்பான் பூச்சி வட்டமடிக்குதா? எறும்பு, ஈ தொல்லையா? அரிசி பருப்புகளில் வண்டா? தொல்லைகள் நீங்கி கிச்சன் பளிச்சுனு ஆக இதோ சில டிப்ஸ்...
Kitchen tips
Kitchen tips
Published on

சமையலறை வீட்டின் இதயம் போன்றது. இங்கு சமைக்கப்படும் உணவு மற்றும் சமையல் பொருட்கள் கிருமிகளை ஈர்க்கும். எனவே எவ்வளவுதான் பார்த்து பார்த்து சமைத்தாலும் கீழே சிந்திய உணவுகளுக்கு பல்லி, கரப்பான் பூச்சி போன்றவை கிச்சன் மேடையை வட்டமடிக்கும். எனவே கிச்சனை சுத்தமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரித்தால் நோய் தொற்றுகளிலிருந்து நம் குடும்பத்தை பாதுகாத்து ஆரோக்கியமாக இருக்கலாம். (Kitchen tips)

  • சமையலறையை சுத்தமாகவும் பளிச்சென்றும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் சமைத்த பிறகு அடுப்பு, சிங்க் மற்றும் மேடைகளை உடனடியாக சுத்தம் செய்யவும். இப்படி தினசரி சுத்தம் செய்வதன் மூலம் பெரிய அளவிலான கிருமிகள், கிரீஸ் மற்றும் குப்பைகள் சேருவதை தடுக்கலாம்.

  • இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு சிங்கை கழுவி சுத்தம் செய்துவிட்டு, 2 கப் சூடான தண்ணீர் விட்டு விட கரப்பான், சின்ன சின்ன பூச்சிகள் மற்றும் பல்லிகளின் நடமாட்டம் இருக்காது. சிங்கும் அடைத்துக் கொள்ளாமல் சுத்தமாக இருக்கும்.

  • காய்கறி வெட்டும் பலகையை வேலை முடிந்ததும் சுத்தம் செய்து சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுக்கலாம் அல்லது காற்றில் நன்கு உலர விடலாம். இது கட்டிங் போர்டை கிருமிகள் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும்.

  • துருப்பிடித்த பாத்திரங்களை சுத்தப்படுத்துவதற்கு எலுமிச்சை மற்றும் உப்புப் பொடியை பயன்படுத்தலாம். பாத்திரங்களில் சிறிது உப்புத்தூளைத் தூவி அதன்மேல் எலுமிச்சை பழத்தை வைத்துத் தேய்க்க துரு நீங்கிவிடும்.

  • வினிகர், தண்ணீர் மற்றும் சிறிது பாத்திரம் கழுவும் சோப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்து வைத்துக் கொண்டு, எவர்சில்வர் பாத்திரங்களை மென்மையான ஸ்பான்ஜ் கொண்டு தேய்க்க பாத்திரங்கள் பளிச்சென்று மின்னும்.

  • கிச்சனில் எறும்பு, ஈ தொல்லைகளுக்கு ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களின் தோல்களை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கலவையை பயன்படுத்தி சமையலறை சுத்தம் செய்ய எறும்பு ஈக்களுக்கு நோ என்ட்ரி.

  • அதேபோல் காய்கறித் தோல்களையும், புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை சமையலறையை சுத்தம் செய்ய பயன்படுத்த ஈ, எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லிகளின் தொல்லைகள் இருக்காது.

  • அரிசி பருப்புகளில் வண்டு வராமல் தடுப்பதற்கு வேப்பிலைகளை நிழலில் காய வைத்து அந்த உலர்ந்த வேப்பிலைகளை அரிசி, பருப்பு டப்பாக்களில் போட்டு வைக்கலாம்.

  • தானியங்கள், பருப்பு வகைகளை ஈரப்பதம் இல்லாத இடத்தில் சேமித்து வைப்பது முக்கியம். அத்துடன் அவற்றை சேமிக்கும் முன்பு நன்றாக வெயிலில் காய வைத்து, காய்ந்த மிளகாய்கள், கிராம்புகள் அல்லது பிரியாணி இலைகளில் ஏதேனும் ஒன்றை போட்டு வைக்க வண்டுகள் வராமல் தடுக்க முடியும்

  • ஃபிரிட்ஜை சுத்தமாக வைக்க வாரத்திற்கு ஒரு முறை அதற்குள் இருக்கும் பொருட்களை வெளியே எடுத்து விட்டு நன்கு துடைக்கவும். அத்துடன் நறுக்கிய எலுமிச்சம் பழத்தை ஒரு சிறு தட்டில் வைத்து விட ஃப்ரிட்ஜில் இருந்து கெட்ட வாடை எதுவும் வீசாது. அதேபோல் ஒரு சிறு கிண்ணத்தில் பேக்கிங் சோடாவை போட்டு வைத்தாலும் துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

  • சமையலறையில் அரைக்க, பொடிக்க, ஜூஸ் போட என அனைத்திற்கும் உதவும் மிக்ஸி, ரிப்பேரானால் கிச்சன் வேலைகள் அனைத்தும் ஸ்தம்பித்து போய்விடும். எனவே மிக்ஸியை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். உபயோகித்த உடனேயே கழுவி விட உணவுத் துணுக்குகள் காய்ந்து மிக்ஸியில் ஒட்டிக்கொண்டு போகாமல் இருப்பதை தவிர்க்கலாம்.

  • மிக்ஸியை தொடர்ச்சியாக நீண்ட நேரம் ஓட விடாமல் அவ்வப்போது நிறுத்தி இயக்க நீண்ட நாட்களுக்கு வரும். அத்துடன் ஜாரில் ஒரே நேரத்தில் அதிகமான பொருட்களை போட்டு அரைப்பதையும் தவிர்க்கவும்.

  • ப்ளேடுகளின் கூர்மையை இழக்காமல் இருப்பதற்கு ஜாரில் சில ஐஸ் கட்டிகள் மற்றும் தண்ணீர் சிறிது சேர்த்து சில வினாடிகள் மிக்ஸியை ஓட விட அழுக்கு, பிசுக்குகள் நீங்கி பளிச்சிடும்.

  • மிக்ஸி, கிரைண்டர் எதுவானாலும் உபயோகித்தவுடன் நன்கு அலம்பி சுத்தம் செய்து, காற்றாட உலர விட வேண்டும். இல்லையெனில் துருப்பிடித்து போகுதல், பூஞ்சை காளான் உருவாவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். முடிந்தால் வெயிலில் சிறிது நேரம் காய வைக்கலாம்.

  • கடுமையான ரசாயனங்களை தவிர்த்து வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற இயற்கை துப்புரவு பொருட்களை பயன்படுத்த வேண்டும். இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மட்டுமல்ல, நம் சமையலறை மேற்பரப்புகளுக்கும் பாதுகாப்பானவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com