
சமையலறையை பராமரிப்பது என்பது ஒரு சிறந்த கலையாகும். சமையலறையை நேர்த்தியாக வைத்துக் கொள்வதுடன் உணவை சுவையுடன் சமைப்பதும் அவசியம். சமையலறையில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மிகவும் முக்கியம்.
1) வீட்டில் ஏற்படும் தீ விபத்துகளுக்கும், தீக்காயங்களுக்கும் சமையல் நெருப்பு தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அடுப்பில் எண்ணெய் வைத்து பொரிக்கும் பொழுதும், வறுக்கும் பொழுதும், கிரில் செய்யும் பொழுதும் சமையலறையிலேயே இருக்க வேண்டும். வெளியேற வேண்டிய அவசியம் இருந்தால் அடுப்பை அணைத்துவிட்டு செல்வதுதான் பாதுகாப்பானது.
2) காய்கறிகளை நறுக்க மந்தமான கத்திகளை விட கூர்மையான கத்திகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் கத்தியையும், காய்கறிகளை நறுக்கும் பலகையையும் கழுவ வேண்டும். அதனால் பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். பழங்களுக்கு நறுக்க பயன்படுத்தும் கத்தி மற்றும் பலகையை இறைச்சி மற்றும் காய்கறிகளுக்கு நறுக்கும் போது பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
3) சமையலறையை குறிப்பாக சமைக்கும் மேடையை சுத்தமாக துடைத்து வைப்பது கிருமிகள் பரவுவதிலிருந்து பாதுகாக்கும். கரப்பான், பல்லிகளின் நடமாட்டத்தையும் குறைக்கும்.
4) உணவை சரியான வெப்பநிலையில் சேமிப்பது சமைத்த உணவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும், பாக்டீரியாக்கள் வளராமல் தடுக்கவும் உதவும்.
5) மிக்ஸி, கிரைண்டர், இன்டக்க்ஷன் ஸ்டவ் போன்ற மின் சாதனங்களை கையாளுவதற்கு முன்பு பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற மின்சாரம் சம்பந்தப்பட்ட விபத்துக்களை தவிர்க்கலாம்.
6) அசைவ உணவுகளை சமைக்கும் பொழுது நன்கு வேகவைத்து சமைக்க உணவு விஷமாவதை தவிர்க்கலாம்.
7) சமைத்த உணவுகளை சமைக்காத பச்சையான உணவுகளுடன் சேர்த்து வைக்காமல் தனித்து வைத்து பயன்படுத்தவும். இதனால் கிருமிகள் பரவாமல் தடுக்க முடியும்.
8) உணவை சமைப்பதும் பாதுகாப்பதும் சரியாக நடைபெறவில்லை என்றால் வயிற்றுப்போக்கு போன்ற இரப்பை குடல் நோய்கள் ஏற்படும். எனவே சமைப்பதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவவும். சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்களையும் சுத்தமாக கழுவி பயன்படுத்தவும்.
9) சமைத்த உணவுகளை திறந்து வைக்காமல் மூடி வைப்பது உணவில் விழும் சிறு பூச்சிகள் போன்றவற்றிலிருந்து உணவை பாதுகாக்கும்.
10) குளிர்சாதன பெட்டியை மாதம் ஒரு முறையாவது சுத்தம் செய்து காலாவதியான உணவுப் பொருட்களை அப்புறப்படுத்தவும். கெட்டுப்போன உணவுகள் மற்றும் சிந்தும் உணவுகள் பாக்டீரியாவை மற்ற உணவுப் பொருட்களில் பரப்பக்கூடும். எனவே குளிர்சாதனப்பெட்டியை சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.