குடும்பத்தில் மூத்த மகள்கள் எதிர்கொள்ளும் 10 நோய்க்குறிகள் பற்றி தெரியுமா?

மூத்த மகள் நோய்க்குறி
Elder daughter Syndromehttps://shedefined.com
Published on

மூத்த மகள் நோய்க்குறி (Elder daughter Syndrome) என்பது குடும்பங்களில் உள்ள மூத்த மகள்களில் அடிக்கடி காணப்படும் உளவியல் மற்றும் உணர்ச்சி வடிவங்களின் தொகுப்பை குறிக்கிறது. இது மூத்த மகள்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான அழுத்தங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை விவரிக்கப் பயன்படுத்தும் வார்த்தையாகும். இந்த நோய்க்குறியுடன் தொடர்புடைய முக்கிய பங்குகளை, பண்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பொறுப்புணர்வு: மூத்த மகள்கள் பெரும்பாலும் பொறுப்புணர்வுடன் இருப்பார்கள். எல்லாக் காரியங்களையும் அக்கறையுடன் செய்வார்கள். தங்கள் இளைய உடன்பிறப்புகளை கவனித்துக் கொள்வார்கள். அவர்களின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்கு தாங்கள் பொறுப்பாக முறையில் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து செயல்படுவார்கள்.

2. பரிபூரணத்துவம்: தங்களுடைய பெற்றோர் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யப் பாடுபடுவார்கள். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டிய அவசியத்தையும் உணர்ந்து செயல்படுவார்கள். தாங்கள் செய்யும் எல்லா விஷயங்களிலும் பரிபூரணத்துவம் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

3. முதிர்ந்த நடத்தை (மெச்சூர்ட் பிஹேவியர்): மூத்த மகள்கள் பெரும்பாலும் தங்கள் உடன் பிறந்தவர்களை விட மனமுதிர்ச்சியுடனும் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இது சில சமயங்களில் குழந்தைப் பருவத்தின் அப்பாவித்தனத்தை விரைவாக இழக்க வழிவகுக்கும். மேலும், அதிக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான மன அழுத்தம் மற்றும் பதற்ற நிலைகளுக்கு வழிவகுக்கும்.

4. தலைமைப் பண்புகள்: பல மூத்த மகள்கள் வீட்டில் தங்கள் பொறுப்புகள் காரணமாக வலுவான தலைமைப் பண்பு மற்றும் நிறுவனத் திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள். சிறந்த தலைமைப்பண்புடன் திகழ்வார்கள். பெரும்பாலும் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் விருப்பத்துடன் தலைமைப் பொறுப்பேற்கிறார்கள்.

5. உடன் பிறந்தவர்களுடன் மோதல்: மூத்த மகள்களை அதிகாரம் மிக்கவராக கருதும் இளைய உடன்பிறப்புகள் அவர்களுடன் மனக்கசப்பில் ஈடுபட்டு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் நிலை வரலாம்.

6. உணர்ச்சிச் சுமை: அவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிடத்தக்க உணர்ச்சிச் சுமையைச் சுமக்கிறார்கள். குடும்ப நல்லிணக்கத்திற்கும் அவர்களின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களின் உணர்ச்சி நல்வாழ்விற்கும் தாங்கள் பொறுப்பேற்பதால் அடிக்கடி உணர்ச்சிச் சுமைக்கு உள்ளாகிறார்கள்.

7. சுய தியாகம்: மூத்த மகள்கள் தங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக தங்கள் சொந்த தேவைகளையும் விருப்பங்களையும் ஒதுக்கி வைக்கலாம். இது அவர்களின் சொந்த நலன் மற்றும் அபிலாஷைகளை புறக்கணிக்க வழிவகுக்கும். குடும்ப நல்லிணக்கத்தைப் பேண, மூத்த மகள்கள் மோதல்களைத் தவிர்க்கலாம். இது ஒடுக்கப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் தீர்க்கப்படாத சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

8. குற்றவுணர்வு: அவர்கள் தங்களின் சொந்த தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்போது அல்லது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறியதாக உணரும்போது அவர்கள் குற்றவுணர்வை அனுபவிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தஞ்சை ஓவியங்களைப் போலவே மனதைக் கவரும் மைசூர் ஓவியங்கள்!
மூத்த மகள் நோய்க்குறி

9. சாதனைகள்: மூத்த மகள்கள் பெரும்பாலும் சாதிப்பதற்கும் வெற்றி பெறுவதற்கும் வலுவான உந்துதலைக் கொண்டுள்ளனர். சாதனைகள் மூலம் தங்களை நிரூபிக்க முயற்சி செய்து அதற்காக கடினமாக உழைப்பார்கள்.

10. முன்மாதிரி அழுத்தம் (ரோல் மாடல் பிரெஷர்): நிறையக் குடும்பங்களில் ‘நீதான் தம்பி / தங்கைக்கு ரோல் மாடலாக இருக்கணும்’ என மூத்த மகள்கள் அறிவுறுத்தப்படுவதால், இளைய உடன்பிறப்புகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியை அமைக்க அவர்கள் அடிக்கடி அழுத்தத்தை உணர்கிறார்கள். இதனால் உடன்பிறப்புகள் மற்றும் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற கூடுதல் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள்.

மூத்த மகள்களின் இத்தகைய சிரமம் மற்றும் சிக்கல்களை புரிந்துகொண்டு பெற்றோரும், குடும்பத்தினரும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். அத்தகைய செயல்பாடுகள் அவர்கள் மனநிலையில் சமநிலையைக் கண்டறியவும், சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவும், ஆரோக்கியமான உணர்வை வளர்க்கவும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com