எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலரிடம் இருக்கின்றது. அடுத்தவர் செய்யும் செயல்களில் குற்றம் கண்டுபிடிப்பது சிலருக்கு அதிகமான மகிழ்ச்சியைத் தருகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வருகையில் ஏற்படும் கால தாமதத்தை, படிப்பில் உண்டாகும் ஊக்கமின்மையை, வீட்டுப் பாடங்கள் எழுதுவதில் உண்டாகும் கவனமின்மை ஆகியவற்றை பற்றி ஆசிரியர்கள் குற்றமாக, ஒரு தவறாக எண்ணி திருந்துவதற்கு உரிய வழிவகையை மேற்கொள்ளாவிட்டால், மாணவனின் கல்வியே கேள்விக்குறியாகிவிடும்.
அலுவலகத்தில், தொழிற்கூடங்களில், பொது நிறுவனங்களில் அத்தியாவசியமான சேவை முனையங்களில், உயிர்க்காக்கும் மருத்துவமனைகளில், அவசர சேவைப் பணிகளில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான திறமைமிக்க ஊழியர்களின் சிறப்புமிக்க சேவையை கருத்தில்கொண்டே அன்றாடம் மக்கள் வாழ்கிறார்கள். சிறந்த மனித ஆற்றல் - உயர்ந்த மனித நேயம் - ஈடு இணையற்ற சேவை இந்த மூன்று மிக உயர்ந்த உலகக் கொள்கை. தர நிர்ணயம் செய்யப்பட்டவைகளாக இருக்கவேண்டும் என்று உலகில் உள்ள மக்கள் அனைவரும் கருதுகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கின்றது சொல்லுங்கள்.
ஒரு பேருந்தில் பயணம் செய்கிறோம். வண்டி பழுதாகி விடுகிறது. பழுதான சக்கரத்திற்கு மாற்றுச் சக்கரம் அதன் ஓட்டுநர், வண்டியில் தயார் நிலையில் வைத்திருக்கவில்லை. இதை எடுத்துச் சொல்லுவது குற்றமாகாது. சமுதாய நன்மையே ஆகும். ஒரு வேலைக்கான நேர்காணலுக்காக செல்லும் இளைஞரும், விமான நிலையத்திற்கு விமானப் பயணத்திற்காகச் செல்லும் நபரும் அந்தப் பேருந்தில் பயணம் செய்கிறார்கள் என்றால், அவர்களின் நிலை என்ன? சிந்தித்துப் பாருங்கள்.
தொடர்ந்து கால தாமதமாக அலுவலகத்திற்கு வரும் ஊழியர், முன்னறிவிப்பு இன்றி அடிக்கடி விடுமுறை எடுக்கும் அல்லது வராமல் நின்று விடும் மருத்துவமனை ஊழியர், சரியாகப் பணியாற்றாத தொழிற்சாலைப் பணியாளர் இவர்களின் குற்றத்தைச் சீர்த்தூக்கிப் பார்த்து, சமுதாய நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது சிறந்த அலுவலரின் உயர்ந்த கடமை நெறியாகும்.
வாழ்க்கை என்பதே அளவுகளுக்கு உட்பட்டதாகும், சட்ட விதிமுறைகள், வாழ்க்கை நெறிமுறைகளுக்கு உட்பட்டதாகும். சமுதாயம் என்ற தேரை ஊர் கூடி இழுக்கின்றோம். இழுப்பதுதான் வாழ்க்கை. தேரை அதன் நிலையில் சரியாகக் கொண்டு சேர்ப்பதுதான் வாழ்க்கை நெறி. குற்றமில்லா செயல்முறை அன்பு, குற்றமற்ற பண்பு, ஏமாற்றுதல் இல்லாத நட்புணர்வு, ஒழுக்கத்துடன் கூடிய செயலாக்கம், உண்மையான பாசம் இவை அத்தனையும் கலந்து நிறைந்து சிறப்பாக நடைபெறவேண்டியதுதான் உண்மையான வாழ்வியல் முறையாகும். பிறர் குற்றங்களைக் கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு மகிழ்ச்சியோடு வாழுங்கள்.