‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’ - அற்புதமான வரிகள், ஆழமான கருத்துக்கள். பக்கம் பக்கமாக பேச வேண்டியதை இரண்டே வரிகளில் சொல்லிய கவிஞரின் பாங்கு பாராட்டுக்குரியது. சில வீடுகளில், ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ என்று தனிக்காட்டு ராஜாவாக வளரும் குழந்தைகள் மிதமிஞ்சிய செல்லத்தால் கெடுக்கப்படுகின்றனர்.
பெற்றோர்கள் அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய சக்திக்கு மீறி செலவு செய்கின்றனர். இங்குதான் பிரச்னை ஆரம்பமாகிறது. இஷ்டம் போல வளர அனுமதித்து விட்டு திடீரென கட்டுப்பாடுகள் விதிக்கும்போது பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. குழந்தைகளின் ஒவ்வொரு செயலுக்கும் நாம்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. குழந்தைகள் தவறு செய்யும்போது கண்டிப்பாக கண்டித்தே ஆக வேண்டும். தானாக சரியாகிவிடும் என்று விட்டுவிடக் கூடாது.
குழந்தைகள் அடம்பிடித்தால் நம்மில் பெரும்பாலோர் அவர்களை அடித்து உதைத்து நீண்ட வசனங்கள் பேசி கண்டிப்போம். இது ஒரு பயனும் தராது. சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் நாம் சொல்வதை குழந்தைகள் தானாகக் கேட்பார்கள். அடம் பிடித்ததும் வாங்கித் தருவதும், அவர்கள் சொல்வதைச் செய்வதும் நல்லதல்ல. அடம்பிடித்தாலோ அழுதாலோ காரியம் நடக்காது என்பதை குழந்தைகளுக்கு கண்டிப்பாக உணர்த்த வேண்டும்.
சில குழந்தைகள் எதையும் அழுது சாதித்துக்கொள்ளும். சில குழந்தைகள் முரண்டு பிடித்து வீம்பாக இருக்கும். இதற்கெல்லாம் நாம் மசியக் கூடாது. இதில் மற்றொரு பிரச்னையும் குழந்தை வளர்ப்பில் உருவெடுத்து வருவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, குழந்தைகளுக்கு அதீத செல்லம் கொடுத்து மிகவும் பாதுகாப்பாக வளர்ப்பதால் பின் நாட்களில் அவர்களால் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க தயங்குவதுடன் அவர்கள் மிகவும் பலவீனமான மனத்துடன் வளர்வார்கள் என்று எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளை பொத்திப் பொத்தி வைத்து வெளியில் அதிகமாக விடாமல் பாதுகாத்தால் பின் நாட்களில் இவர்கள் எந்த பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் துணிவின்றி நிற்பார்கள். எதிர்காலத்தில் மன உறுதி இல்லாத நபர்களாக வளர்வதற்குண்டான நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் தனிமனிதராக நின்று சவால்களை எதிர்கொள்ள போராடுவார்கள்.
குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் அடித்து வளர்ப்பது, அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருப்பது எந்த அளவுக்கு குழந்தைகளுக்கு ஆபத்தானதோ அதே அளவுக்கு அதீத செல்லமும், பாதுகாப்பும் கொண்ட இன்றைய வளர்ப்பு முறையும் ஆபத்தானதுதான். இவை இரண்டுமே குழந்தைகள் வளர்வதில் எதிர்மறையான தாக்கத்தையே உண்டுபண்ணும். எனவே குழந்தைகளுடன் எப்போதும் ஃப்ரெண்ட்லியாக இருப்பதும், அவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதும் நல்லது. அத்துடன் அவர்களைத் தனியாக இயங்க விடுவதும், கண்டிப்பு தேவைப்படும் சமயத்தில் கண்டிப்புடன் நடந்து கொள்வதும் குழந்தைகளை சமுதாயத்திற்கு சிறந்த குடிமகனாக உருவாக்கித் தரும். செய்வோமா?